விவிலியத் தேடல்: திருப்பாடல் 42-3, மனமே, கலக்கமடையாதே!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'என் நெஞ்சே கடவுளையே நம்பியிரு!' என்ற தலைப்பில் 42-வது திருப்பாடலில் 05 முதல் 08 வரையுள்ள இறைவசனங்களை நமது தியானச் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 09 முதல் 11 வரையுள்ள இறைவார்த்தைளைக் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வருவோம். இப்போது இறைபிரசன்னதில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். "என் கற்பாறையாகிய இறைவனிடம் ‛ஏன் என்னை மறந்தீர்; எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்’ என்கின்றேன். ‛உன் கடவுள் எங்கே?’ என்று என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது, என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது. என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்” (வசனம் 09-11)
ஒரு படகில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அதில் ஒரு ஞானியும் இருந்தார். அவரைப் பார்த்து மற்ற பயணிகள் கேலியும், கிண்டலும் செய்து வந்தனர். அவர் தியானத்தில் அமர்ந்தார். இந்நேரம் அவர் எதுவும் செய்ய மாட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட அப்பயணிகள், அவரைக் கேலி செய்ததுடன் அடிக்கவும் செய்தனர். அப்போதும் அவர் கவனம் சிதறாமல் தியானத்தில் இருந்தார். அவர் எதுவுமே செய்யவில்லை. அவர் கண்களிலிருந்து அன்பு, கண்ணீராய் வந்து கொண்டிருந்தது. அப்போது வானத்திலிருந்து ''அன்புக்குரியவனே, நீ விரும்பினால் இந்தப் படகை நான் கவிழ்த்து விடுகிறேன்!'' என்ற குரல் கேட்டது. அப்போதும் அந்த ஞானியின் தியானம் களையவில்லை. அவரை அடித்தவர்கள் இப்போது என்ன நடக்குமோ என்று பயந்தார்கள். ‘விளையாட்டு வினையாயிற்றே’ என்று நினைத்து அவர்கள் ஞானியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். அவர் தியானம் முடிந்து எழுந்தார். சுற்றிலும் அச்ச உணர்வுடன் மற்றவர்கள் நிற்பதைப் பார்த்தார். ''கவலைப்படாதீர்கள்' என்று அவர்களிடம் கூறிவிட்டு வானத்தை நோக்கி வணங்கி, ''என் அன்பான கடவுளே, நீ ஏன் சாத்தானின் மொழியில் பேசுகிறாய்? நீ விளையாட வேண்டும் என்று விரும்பினால் இந்த மக்களின் புத்தியை மாற்று. அதை விட்டுவிட்டு படகைக் கவிழச்செய்வதால் என்ன பயன்?'' என்று கேட்டார். அப்போது, "மகனே, நான் உன்னைக் குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன், ஏனென்றால் நீ உண்மையை அறிந்து கொண்டாய். இதற்கு முன்பு ஒலித்தது என் குரல் அல்ல. எவன் ஒருவன் சாத்தானின் குரலை அறிந்து கொள்ள முடியுமோ. அவனால்தான் என் குரலையும் அறிந்துணர முடியும்.'' என்று வானத்திலிருந்து மீண்டும் பதில் வந்தது.
இன்றைய உலகத்தில் கடவுளை அறியாத பலர் இப்படித்தான் தங்களையே கடவுளாகக் காட்டிக்கொள்கின்றனர். கடவுள் செய்ய முடியாததையெல்லாம் தங்களால் செய்யமுடியும் என்று பிதற்றுகிறனர். ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால் போதும், ‘இப்போது உங்கள் கடவுள் எங்கே போனார்? இந்தச் சம்பவத்திலிருந்து உங்களை ஏன் அவரால் காப்பாற்றமுடியவில்லை? பின்னர் ஏன் வலிமையில்லாத, உங்களைக் காப்பாற்ற இயலாத கடவுளை நம்புகிறீர்கள்’ என்றெல்லாம் எதிர்கேள்வி கேட்பார்கள். அதாவது, சாத்தானின் மொழியில் பேசுவார்கள். 2004-ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது ஆயிரக்கணக்கானோர் இறந்துபோயினர். குறிப்பாக, புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்திருக்கும் வேளாங்கண்ணியில் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்துபோனார்கள். ஆலயத்தைச் சுற்றி சில பகுதிகள் சேதமடைந்தன. அப்போதும் இப்படித்தான் கடவுள் நம்பிக்கையற்ற சிலர் அறிவற்றத்தனமான கேள்விகளைக் கேட்டனர். ‘மாதாவின் கோவிலிலேயே இத்தனைபேர் இறந்துபோனார்களே! ஏன் அந்த மாதாவால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை? எனவே, தெய்வநம்பிக்கை என்பதெல்லாம் பொய், பித்தலாட்டம், ஏமாற்றுவேலை’ என்றெல்லாம் வசைபாடினார்கள். அதற்காக அன்னையின் ஆலயத்திற்குப் பக்தர்கள் செல்லாமலா இருக்கிறார்கள்? இன்னும் சொல்லப்போனால் சுனாமிக்கு முன்பைவிட இப்போது அங்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகத்தான் இருக்கின்றது. அவ்வாறே, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டபோதும் நாத்திகவாதிகள் இவ்வாறு அர்த்தமற்ற கேள்விகளை எழுப்பத்தான் செய்தனர். மனிதர் செய்யும் தவறுகளினால் ஏற்படும் விளைவுகளுக்குக் கடவுளை காரணம் காட்டிவிட்டு அல்லது குறைகூறிவிட்டு நாம் தப்பிக்க நினைக்கக் கூடாது. அதேவேளையில், இது மனிதர் செய்த தவற்றினால் ஏற்பட்ட பெருங்குற்றம் என்று உணர்ந்து, அந்தப் பேராபத்திலிருந்து இந்த அளவுக்காவது நம்மைக் கடவுள் காப்பாற்றினாரே என்றெண்ணி மகிழ்வதே ஆத்திக குணம் அதாவது, இறைநம்பிக்கை கொண்டோரின் வழிமுறைகள் ஆகும். இன்று உலகில் நிலவும் போர், வன்முறை, மதவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றங்கள், இயற்கைப்பேரிடர்கள் ஆகிய எல்லாவற்றிற்கும் காரணம் மனிதர் செய்யும் தவறுகள்தானே! அதைவிடுத்து இவை அனைத்திற்கும் கடவுள்தான் காரணம் என்று நாம் நினைப்போமேயானால் அது நமது அறிவற்றதனம் என்பதை உணர்வோம்.
இன்று நாம் தியானிக்கும் இறைவார்தைகளில் "என் கற்பாறையாகிய இறைவனிடம் ‛ஏன் என்னை மறந்தீர்; எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்’ என்கின்றேன்" என்கின்றார் தாவீது. இங்கே கடவுள் நம்பிக்கையற்றோரையும், கடவுளை இழித்துரைப்போரையும், உங்கள் கடவுள் எங்கே என்று கேட்போரையும் கடவுளின் எதிரிகளாக சித்தரிக்கின்றார் தாவீது என்பதை நாம் உணர்ந்துகொள்வோம். அதனால்தான் அதனைத் தொடர்ந்து, "உன் கடவுள் எங்கே?’ என்று என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது, என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது" என்கின்றார். ஆக, கடவுள் நம்பிக்கையற்றவர்களை முதலில் எதிரிகளாகப் பாவித்த தாவீது அரசர் அவர்களைப் பகைவர் என்றும் சுட்டிக்காட்டுகின்றார். அப்படியென்றால், பகைவர் என்பவர் யார் என்று சிந்திக்கும்போது, அது சாத்தான் அல்லது அலகை என்று அறிந்துகொள்ள முடிகிறது. எனவே, பகைவனின் வேலைகளைச் செய்பவர்கள் எல்லாரும் கடவுளுக்கு எதிரானவர்கள். இறைநம்பிக்கையாளர்களைக் கடவுளுக்கு எதிராகத் திருப்புவதும், அவர்களுக்கிடையே நம்பிக்கையற்றத்தன்மையை ஏற்படுத்துவதும், பிரிவுகளையும் பிளவுகளையும் உண்டாக்குவதும் பகைவர்களின் முக்கியமானப் பணிகளாக அமைகின்றன. நமதாண்டவர் இயேசு கூறும் வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையில், 'ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்' என்றும், அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார் (காண்க மத் 13:24,28) என்றும் கூறுகின்றார். அவ்வாறே, யூதர்களுடன் வாதாடும் இயேசு, "நான் சொல்வதற்குச் செவி சாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை. சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில், அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம். (காண்க யோவா 8:43-44) என்று கடுமையாகச் சாடுகின்றார். மேலும் புனித பவுலடியாரும் போலித் திருத்தூதர்கள் பற்றி எடுத்துரைக்கும்போது, "இத்தகையோர் போலித் திருத்தூதர்; வஞ்சக வேலையாள்கள்; கிறிஸ்துவின் திருத்தூதராக நடிப்பவர்கள். இதில் வியப்பு என்ன? சாத்தான் கூட ஒளியைச் சார்ந்த தூதனாக நடிக்கிறானே? ஆகவே, அவனுடைய தொண்டர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக நடிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அவர்களது முடிவு அவர்களுடைய செயலுக்கு ஏற்பவே அமையும்” (காண்க. 2 கொரி 11:13-15) என்று காட்டமாகக் கூறுகின்றார்.
மன நோயாளி ஒருவன் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டான். இவன் பிரச்சனை என்னவென்று மருத்துவர் கேட்க, அதற்கு அவன் தந்தை, ''ஐயா, இவன், தான் இறந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறான். எங்காவது வெளியே போகச் சொன்னால் இறந்தவன் எப்படி வெளியே செல்ல முடியும் என்று கேட்கிறான். என்ன சொல்லி சமாதானப்படுத்தினாலும் அதை அவன் ஏற்க மறுக்கிறான். அதனால்தான் இவனை உங்களிடம் அழைத்து வந்தோம்” என்றார். உடனே மருத்துவரும், ''கவலைப்படாதீர்கள், இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. நான் இவனை எளிதில் குணப்படுத்திவிடுவேன்'' என்றார். பின் அவர் அவனிடம் ''இறந்த மனிதனுக்கு உடலிலிருந்து இரத்தம் வருமா?'' என்று திருப்பிக் கேட்டார். அவன் "வராது" என்று சொன்னான். மருத்துவரும் ஒரு கத்தியை எடுத்து அவன் உடலில் இலேசாகக் கீற இரத்தம் பீறிட்டது. அவன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மருத்துவர் அவனிடம், ''பார்த்தாயா, உன் உடலிலிருந்து இரத்தம் வருகிறது. எனவே நீ இறக்கவில்லை, புரிகிறதா?'' என்று கேட்டார். அவன் மிக அமைதியாக சொன்னான், ''நான் இதுவரை இறந்தவர்கள் உடலிலிருந்து இரத்தம் வராது என்று நம்பி வந்தேன். இப்போதுதான் தெரிந்து கொண்டேன், இறந்தவர் உடலிலிருந்தும் இரத்தம் வருமென்று" உடனே மருத்துவர் மயங்கி விழுந்துவிட்டார்.
இந்நிகழ்வு கேட்பதற்கு ஒரு நகைச்சுவையாகத் தோன்றிடினும், இன்றைய உலகில் கடவுளுக்கு எதிரான பகைவர், அதாவது, இறைநம்பிக்கையற்றவர்கள் இப்படித்தான் மனநோயாளிககளாக நடந்துகொள்கின்றனர் என்பதை நம்மால் உணர முடிகிறது. ஆகவே, தாவீது அரசர் கூறுவதுபோன்று 'உன் கடவுள் எங்கே' என்று தீயோர், பகைவர் கேள்வி எழுப்பும்போது நாம் மனம் தளர்ந்துவிடாமால், "என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்” என்று கூற முற்படுவோம். அறிவால் அல்ல, இறையனுபவத்தால், இறைநம்பிக்கையால் நம் கடவுளை அறிந்துகொள்ள முற்படுவோம். அதற்கான இறையருளுக்காக ஆண்டவர் இயேசுவிடம் இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்