சவுல் சாமுவேலுடன் உணவு உண்ணுதல் சவுல் சாமுவேலுடன் உணவு உண்ணுதல் 

தடம் தந்த தகைமை : சவுல் சாமுவேலுடன் உணவு உண்ணுதல்!

“இதோ! உனக்கு முன்பாக வைத்திருப்பதைச் சாப்பிடு. நான் மக்களை விருந்துக்கு அழைத்தது முதல், இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது” என்றார் சாமுவேல்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அந்நாட்களில் சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி, “திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும்” என்று கேட்டார். அப்போது சாமுவேல்,  “நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன். மூன்று நாளுக்குமுன் காணாமற்போன கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில், அவை அகப்பட்டுவிட்டன. இஸ்ரயேலின் முழு விருப்பமும் யார் மீது? உன் மீதும் உன் தந்தையின் வீட்டார் அனைவர் மீதும் அன்றோ?” என்று கூறினார். அதற்கு சவுல் மறுமொழியாக, “இஸ்ரயேலில் மிகச் சிறிதான பென்யமின் குலத்தைச் சார்ந்தவனன்றோ நான்? பென்யமின் குலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் என்னுடையது மிகச் சிறிதன்றோ! பின்பு, நீர் ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகிறீர்?” என்றார்.

பின்னர், சாமுவேல் சவுலையும் அவருடைய பணியாளையும் உணவறைக்குக் கூட்டிவந்து, அழைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ முப்பது ஆள்களுள் அவர்களுக்கு முதலிடம் கொடுத்தார். மேலும், சாமுவேல் சமையல் காரனை நோக்கி, “நான் உன்னிடம் ஒரு பங்கைக் கொடுத்து, பத்திரப் படுத்தச் சொல்லியிருந்தேனே அதைக் கொண்டு வந்து வை” என்றார். சமையல்காரன் ஒரு தொடையை அதன் மேற்பாதியோடு எடுத்து வந்து சவுலுக்குமுன் வைத்தான். அப்போது சாமுவேல், “இதோ! உனக்கு முன்பாக வைத்திருப்பதைச் சாப்பிடு. நான் மக்களை விருந்துக்கு அழைத்தது முதல், இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது” என்றார். அன்று சவுல் சாமுவேலுடன் உண்டார். பிறகு, அவர்கள் தொழுகை மேட்டிலிருந்து இறங்கி நகருக்கு வந்தனர். சாமுவேல் சவுலுடன் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2023, 13:17