யூதித்து ஒலோபெரினின்தலையைத் துண்டித்தார் யூதித்து ஒலோபெரினின்தலையைத் துண்டித்தார்  (http://purl.org/thewalters/rights/standard)

தடம் தந்த தகைமை - ஒலோபெரினின் தலையை யூதித்து கொய்தல்

ஒலோபெரின் யூதித்திடம் தன் மனத்தைப் பறிகொடுத்து, மட்டுமீறிக் குடித்தான். பிறந்தநாள் முதல் அன்றுபோல அவன் என்றுமே குடித்ததில்லை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒலோபெரின் தனக்கு நெருக்கமான பணியாளர்களுக்கு மட்டும் விருந்து அளித்தான்; படைத் தலைவர்களுள் ஒருவரையும் அழைக்கவில்லை. தன் உடைமைகள் அனைத்துக்கும் பொறுப்பாய் இருந்த பகோவா என்ற உயர் அலுவலரிடம், “நீர் உடனே சென்று, உம் பொறுப்பில் உள்ள அந்த எபிரேயப் பெண் வந்து நம்மோடு உண்டு பருக இணங்கச் செய்யும். இத்தகைய பெண்ணுடன் நாம் உறவுகொள்ளாமல் விட்டுவிடுவது நமக்கு இழிவாகும். அவளை நாம் கவர்ந்திழுக்கத் தவறினால் அவள் நம்மை எள்ளி நகையாடுவாள்” என்றான்.

யூதித்து எழுந்து சிறப்பாடை அணிந்து, பெண்களுக்குரிய எல்லா அணிகலன்களாலும் தம்மை அழகுபடுத்திக்கொண்டார். அவருடைய பணிப்பெண் அவருக்குமுன்னே சென்றாள். ஒலேபெரினுடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது; அவனது மனம் கிளர்ந்தெழுந்தது; அவரைக் கண்ட நாள்முதலே அவரோடு உறவு கொள்ள வாய்ப்புத் தேடியிருந்ததால் இப்பொழுது அவரை அடைய அவன் ஏக்கம் கொண்டான். எனவே ஒலோபெரின் அவரிடம், “மது அருந்தி எங்களுடன் களிப்புற்றிரு” என்றான்.

அதற்கு யூதித்து, “என் தலைவரே! நான் மகிழ்ச்சியோடு மது அருந்துவேன்; ஏனெனில் இந்நாள் என் வாழ்வின் பொன்னாளாகும்” என்றார். தம் பணிப்பெண் சமைத்திருந்ததை எடுத்து அவன் முன்னிலையில் உண்டு பருகினார். ஒலோபெரின் அவரிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து, மட்டுமீறிக் குடித்தான். பிறந்தநாள் முதல் அன்றுபோல அவன் என்றுமே குடித்ததில்லை.

பொழுது சாய்ந்தபோது ஒலோபெரினின் பணியாளர்கள் விரைவாக வெளியேறினார்கள். பகோவா அலுவலர்களைத் தன் தலைவன் முன்னிலையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு, கூடாரத்துக்கு வெளியிலிருந்து தாழிட்டான். நீண்ட நேரம் நீடித்த விருந்தினால் களைப்புற்றிருந்ததால் அவர்களும் படுக்கச் சென்றார்கள். யூதித்து கூடாரத்திற்குள் தனிமையாய் விடப்பட்டார். மது மயக்கத்தில் இருந்த ஒலோபெரின் தன் படுக்கைமேல் விழுந்து கிடந்தான்.

யூதித்து தம் பணிப்பெண்ணிடம் படுக்கையறைக்கு வெளியே நிற்கும்படியும், நாள்தோறும் செய்துவந்தது போலத் தாம் வெளியே வரும்வரை காத்திருக்கும்படியும் கூறினார்; வேண்டுதல் செய்யத் தாம் புறப்பட விருப்பதாக அவளிடம் சொன்னார்; இதையே பகோவாவிடமும் தெரிவித்திருந்தார். அனைவரும் அங்கிருந்து அகன்றனர். ஒலோபெரினின் படுக்கை அருகே யூதித்து நின்றுகொண்டு, ஆண்டவரிடம் செபித்தார். பிறகு, ஒலோபெரினின் தலைப்பக்கம் இருந்த தூணுக்குச் சென்று, அதில் மாட்டியிருந்த அவனது வாளை யூதித்து எடுத்தார்; அவனது படுக்கையை அணுகி, அவனுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும்” என்று வேண்டினார்; பிறகு தம் வலிமையெல்லாம் கொண்டு அவனது கழுத்தை இரு முறை வெட்டித் தலையைத் துண்டித்தார்; அவனது உடலைப் படுக்கையிலிருந்து கீழே தள்ளினார்; மேற்கவிகையைத் தூண்களிலிருந்து இறக்கினார்; சிறிது காலம்தாழ்த்தி வெளியே சென்று, ஒலோபெரினின் தலையைத் தம் பணிப்பெண்ணிடம் கொடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2023, 10:35