யூதித்து வெட்டியெடுத்த ஒலோபெரினின் தலை யூதித்து வெட்டியெடுத்த ஒலோபெரினின் தலை 

தடம் தந்த தகைமை - ஒலோபெரினின் தலையுடன் திரும்பிய யூதித்து

ஆண்டவர் ஒரு பெண்ணின் கையால் எதிரியை வெட்டி வீழ்த்தினார். ஆண்டவர்மேல் ஆணை! நான் சென்ற பாதையில் என்னைக் காப்பாற்றியவர் அவரே, என்றார் யூதித்து.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

யூதித்து வெட்டியெடுத்த ஒலோபெரினின் தலையை பணிப்பெண் தன் உணவுப் பைக்குள் வைத்துக்கொண்டாள். பிறகு அவர்கள் இருவரும் தங்கள் வழக்கம்போல வேண்டுதல் செய்ய ஒன்றாய் வெளியேறினார்கள்; பாளையத்தின் வழியாய்ச் சென்று, பள்ளத்தாக்கைச் சுற்றி, மலைமீது ஏறிப் பெத்தூலியாவுக்குப் போய், அதன் வாயிலை அடைந்தார்கள். வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்தவர்களை நோக்கி யூதித்து தொலையிலிருந்தே, “திறங்கள், வாயிலைத் திறங்கள். கடவுள், நம் கடவுள் நம்மோடு இருக்கிறார்; அவர் இஸ்ரயேலருக்குத் தம் வலிமைமையும் நம் பகைவர்களுக்கு எதிராய்த் தம் ஆற்றலையும் இன்று வெளிப்படுத்தியுள்ளார்” என்று கத்தினார்.

நகர மக்கள் யூதித்துடைய குரலைக் கேட்டபோது, வாயிலுக்கு விரைவாக இறங்கிவந்து மூப்பர்களை அழைத்தார்கள். சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும் சேர்ந்து ஓடிவந்தார்கள். யூதித்து வந்தசேர்ந்ததை அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் வாயிலைத் திறந்து, அப்பெண்களை வரவேற்றார்கள்; தீ மூட்டி ஒளி உண்டாக்கி அவர்களைச் சூழ்ந்து நின்றார்கள். யூதித்து அவர்களிடம் உரத்தகுரலில், “கடவுளை வாழ்த்துங்கள்; போற்றுங்கள், கடவுளைப் போற்றுங்கள். இஸ்ரயேல் இனத்தார் மீது அவர் தம் இரக்கத்தைப் பொழிந்துள்ளார். நம் பகைவர்களை என் கையால் இன்று இரவே அழித்துவிட்டார்” என்று அறிவித்தார்.

பிறகு பையிலிருந்து ஒலோபெரினின் தலையை வெளியே எடுத்து அவர்களிடம் காட்டி, “இதோ, அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரினின் தலை! இதோ, மேற்கவிகை! இதன்கீழ்தான் அவன் குடிமயக்கத்தில் விழுந்து கிடந்தான். ஆண்டவர் ஒரு பெண்ணின் கையால் அவனை வெட்டி வீழ்த்தினார். ஆண்டவர்மேல் ஆணை! நான் சென்ற பாதையில் என்னைக் காப்பாற்றியவர் அவரே. என் முகத்தோற்றமே அவனை வஞ்சித்து அழித்தது. நான் கறைபடவோ இழிவுறவோ அவன் என்னுடன் பாவம் செய்யவில்லை” என்றார்.

மக்கள் யாவரும் பெரிதும் மலைத்துப்போயினர்; தலை குனிந்து கடவுளைத் தொழுது, “எங்கள் கடவுளே, நீர் போற்றி! நீரே இன்று உம் மக்களின் பகைவர்களை அழித்தொழித்தீர்” என்று ஒருவாய்ப்படப் போற்றினர்.

பின்னர் ஊசியா யூதித்திடம் “மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவரே நம் பகைவர்களின் தலைவனது தலையை வெட்டி வீழ்த்த உன்னை வழிநடத்தியிருக்கிறார். கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது. இதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக; நலன்களால் உன்னை நிரப்புவாராக; ஏனெனில், நம் மக்களினத்தார் ஒடுக்கப்பட்டபோது நீ உன் உயிரைப் பணயம் வைத்தாய்; நம் கடவுள் திருமுன் நேர்மையாக நடந்து, நமக்கு வரவிருந்த பேரழிவைத் தடுத்துவிட்டாய்” என்றார். அதற்கு மக்கள் அனைவரும், “அவ்வாறே ஆகட்டும், அவ்வாறே ஆகட்டும்” என்று உரைத்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2023, 14:30