தடம் தந்த தகைமை - இஸ்ரயேல் அரசனான நாதாபு
மெரினா ராஜ் - வத்திக்கான்
யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில் எரொபவாமின் மகன் நாதாபு இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் இஸ்ரயேலின் மீது ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான். அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து தன் தந்தையின் வழியிலேயே நடந்து, அவனைப் போலவே இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்தான். இசக்கார் வீட்டைச் சேர்ந்த அகியாவின் மகன் பாசா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். நாதாபும் இஸ்ரயேல் படை முழுவதும் பெலிஸ்தியருடைய கிபத்தோன் என்னும் நகரை முற்றுகையிட்டிருக்கையில், பாசா அங்கே சென்று அவனை வெட்டி வீழ்த்தினான். இவ்வாறு, யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில் பாசா நாதாபுவைக் கொன்று விட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான். அவன் அரசன் ஆனவுடன் எரொபவாமின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்று போட்டான். சீலோவைச் சார்ந்த அகியா என்ற தம் ஊழியர் மூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, எரொபவாமின் குடும்பத்தவர் அனைவரையும், எந்த உயிரையும் விட்டு வைக்காமல், அடியோடு அழித்தான்.
இந்த அழிவுக்கு எரொபவாம் தானே பாவங்கள் செய்ததும், இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்ததும், இவற்றால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு அவன் சினமூட்டியதுமே காரணம். நாதாபின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? ஆசாவுக்கும் இஸ்ரயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர் நடந்து வந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்