காங்கோவில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வரும் வேளை பெரிய ஏரிகள் (Great Lakes) பகுதியில் அமைதிக்கான உறவு பாலங்களை உருவாக்க காங்கோ ஜனநாயகக் குடியரசு, ருவாண்டா மற்றும் புருண்டி ஆகிய நாடுகளின் தலைவர்களை மத்திய ஆபிரிக்காவின் ஆயர்பேரவை வலியுறுத்தியுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசு, ருவாண்டா மற்றும் புருண்டியை உள்ளடக்கிய மத்திய ஆபிரிக்காவின் ஆயர் பேரவையின் உறுப்பினர்கள், உரோமையில் நடைபெற்று வரும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் கடந்த வாரம் ஒரு இடைவேளையில் சந்தித்தத்தின் விளைவாக இத்தகையதொரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கூட்டாக வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், இம்மூன்று பகுதிகளின் அரசியல் தலைவர்களை, உடன்பிறந்த உறவு நிலையில் ஒன்றாக வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவதன் வழியாக மூன்று மாநிலங்களுக்கும் மக்களுக்கும் இடையே அமைதிக்கான உறவு பாலங்களை உருவாக்குமாறு அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளது அவ்வாயர் பேரவை.
நமது முன்னவர்கள் நமக்கு உருவாக்கிக்கொடுத்த இப்புவியில் வாழ்கிறோம் அதாவது, பிறர் நட்ட மரங்களின் கனிகளை நாம் உண்டு வாழ்கின்றோம் என்று எடுத்துக்காட்டியுள்ள அவ்வாயர் பேரவை, இப்புவியையும், மானிடரையும் அழித்தொழிப்பதில் கவனம் செலுத்தாமல், எதிர்கால சந்ததியினருக்காக அதிக மரங்களை நட்டு இப்புவியைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாண்டின் தொடக்கத்தில் ஆப்பிரிக்க நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின்போது கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது நெருக்கத்தை அவர்களுடன் பலமுறை வெளிப்படுத்தினார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது அவ்வாயர் பேரவை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்