கடவுளோடிருப்பவர்களை தோற்கடிக்க இயலாது கடவுளோடிருப்பவர்களை தோற்கடிக்க இயலாது 

தடம் தந்த தகைமை – கடவுளோடிருப்பவர்களை தோற்கடிக்க இயலாது

இஸ்ராயேல் இனத்தாரிடம் குற்றம் ஒன்றும் இல்லையானால், இவர்களைத் தாக்காது விட்டுவிடும்; ஏனெனில், இவர்களின் கடவுள் இவர்கள் சார்பாக இருக்கிறார், என்றார் அக்கியோர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

“இஸ்ரயேல் மக்கள் போருக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்” என்று அசீரியரின் படைத்தலைவன் ஒலோபெரினுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது அவன் கடுஞ் சினமுற்றான். மோவாபு நாட்டுத் தலைவர்கள், அம்மோன் நாட்டுப் படைத் தலைவர்கள், கடலோராப் பகுதிகளின் ஆளுநர்கள் ஆகிய அனைவரையும் அழைத்தான். மேற்கு நாடுகளில் குடியிருக்கும் எல்லா மக்கள் நடுவிலும் இவர்கள் மட்டும் வந்து என்னைச் சந்திக்க மறுத்தது ஏன்?” என்று அவர்களை வினவினான்.

அம்மோனியர் யாவருக்கும் தலைவரான அக்கியோர் ஒலோபெரினிடம் பின்வருமாறு கூறினார்: “என் தலைவரே, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுள் முன்னிலையில் பாவம் செய்யாதவரையில் வளமுடன் வாழ்ந்தார்கள்; ஏனெனில், அநீதியை வெறுக்கும் கடவுள் அவர்கள் நடுவே இருக்கிறார். ஆனால், அவர்களுக்கென்று அவர் வகுத்துக் கொடுத்திருந்த வழியைவிட்டு விலகிச் சென்றபோது அவர்கள் பல போர்களால் பெரிதும் அழிந்தார்கள்; அயல்நாட்டுக்குக் கைதிகளாய்க் கொண்டு செல்லப்பட்டார்கள். ஆனால், இப்பொழுது அவர்கள் தங்கள் கடவுளிடம் மனந்திரும்பி வந்துள்ளார்கள்; தாங்கள் சிதறடிக்கப்பட்ட இடங்களிலிருந்து திரும்பி வந்துள்ளார்கள்; தங்களது திருவிடம் அமைந்துள்ள எருசலேமை மீண்டும் உரிமையாக்கிக் கொண்டுள்ளார்கள்; பாழடைந்து கிடந்த மலைநாட்டில் மீண்டும் குடியேறியுள்ளார்கள்.”

“எனவே, தலைவர் பெருமானே, இப்போது இந்த மக்களிடம் தவறு ஏதேனும் காணப்பட்டால், இவர்கள் தங்களின் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், இவர்கள் செய்த பாவத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியுமானால், நாம் புறப்பட்டுச் சென்று இவர்களைப் போரில் முறியடிக்கலாம். ஆனால், இந்த இனத்தாரிடம் குற்றம் ஒன்றும் இல்லையானால், என் தலைவரே, இவர்களைத் தாக்காது விட்டுவிடும்; இல்லையெனில் இவர்களின் கடவுளாகிய ஆண்டவர் இவர்கள் சார்பாக இருந்து, இவர்களைப் பாதுகாக்க, நாம் அனைத்துலகின் பழிப்புக்கும் உள்ளாவோம்.” என்றார்.

அக்கியோர் பேசி முடித்தவுடன் அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரின், அக்கியோரைப் பிடித்துப் பெத்தூலியாவுக்குக் கொண்டு போய், இஸ்ரயேல் மக்களிடம் ஒப்படைக்கும்படி தன் கூடாரத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்குக் கட்டளையிட்டான். எனவே பணியாளர்கள் அவனைப் பிடித்துப் பாசறைக்கு வெளியே சமவெளிக்குக் கொண்டு சென்றார்கள்; அங்கிருந்து மலைநாட்டுக்குப் போய், பெத்தூலியாவின் அடிவாரத்தில் இருந்த நீரூற்றுகளை அடைந்தார்கள்.

அந்நகரின் ஆண்கள் இவர்களை மலையுச்சியில் கண்டபொழுது தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு நகரிலிருந்து வெளியேறி மலையுச்சிக்கு ஏறிச்சென்றார்கள்; கவண் வீசுவோர் அனைவரும் ஒலோபெரினின் பணியாளர் மீது கற்களை எறிந்து இவர்கள் மேலே ஏறிவராதவாறு தடுத்தார்கள். எனவே இவர்கள் மலையிடுக்கில் பதுங்கிக்கொண்டு, அக்கியோரைக் கட்டி, மலையடிவாரத்தில் கிடத்தி விட்டுத் தங்கள் தலைவனிடம் திரும்பினார்கள்.

அப்பொழுது இஸ்ரயேலர் தங்கள் நகரிலிருந்து கீழே இறங்கி வந்து, அக்கியோரைக் கட்டவிழ்த்துப் பெத்தூலியாவுக்கு அழைத்துச் சென்று தங்கள் நகரப் பெரியோர்முன் அவரை நிறுத்தினர். அக்காலத்தில் சிமியோன் குலத்தைச் சேர்ந்த மீக்காவின் மகன் ஊசியா, கொதொனியேலின் மகன் காபிரி, மெல்கியேலின் மகன் கார்மி ஆகியோர் நகரப் பெரியோராய் விளங்கினர். அவர்கள் நகரின் மூப்பர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள். மக்கள் நடுவில் அக்கியோரை நிற்க வைத்தார்கள். அப்பொழுது ஊசியா நிகழ்ந்தது என்ன என்று அக்கியோரை வினவினார். அவர் மறுமொழியாக, ஒலோபெரினின் ஆட்சி மன்றத்தில் நடந்தது, அசீரியரின் தலைவர்கள் முன்னிலையில் தான் எடுத்துச்சொன்னது, இஸ்ரயேல் இனத்தாருக்கு எதிராகத் தான் செய்யவிருந்ததை ஒலோபெரின் இறுமாப்புடன் உரைத்தது ஆகிய அனைத்தையும் அவர்களுக்குத் தெரிவித்தார். இதனால், மக்கள் குப்புற விழுந்து, கடவுளைத் தொழுதார்கள். பிறகு அவர்கள் அக்கியோருக்கு ஆறுதல்கூறி, அவரைப் பெரிதும் பாராட்டினார்கள். ஊசியா அவரைக் கூட்டத்திலிருந்து தம் வீட்டுக்கு அழைத்துச்சென்று மூப்பர்களோடு விருந்தளித்தார். அவர்கள் இஸ்ரயேலின் கடவுளது துணையை வேண்டி அன்று இரவு முழுவதும் மன்றாடினார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2023, 13:14