திருமண விருந்து குறித்த இயேசுவின் உவமை திருமண விருந்து குறித்த இயேசுவின் உவமை 

பொதுக் காலம் 28-ஆம் ஞாயிறு : இறைவன் தரும் சமபந்தி விருந்து!

கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் அளவிற்கு நற்கனிகள் கொடுக்கும் திராட்சைத் தோட்டங்களாக வாழ்வோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I.  எசா  25: 6-10a     II.  பிலி 4: 12-14, 19-20    III.  மத் 22: 1-14)

பொதுக் காலத்தின் 28-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இறைவன் தரும் சமபந்தி விருந்து பற்றி பேசுகின்றன. இன்று தமிழகத்தில் இந்தச் சமபந்தி விருந்து மிகவும் புகழ்பெற்று வருகின்றது. பட்டிதொட்டிகள் தொடங்கி நகரம் வரை சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது. சமபந்தி என்பது சாதி, மத, இன, மொழி  வேறுபாடுகளின்றி அனைவரும் இணைந்து உண்பது என்பதுதான் இதன் உள்ளார்ந்த அர்த்தம். நான் நம்வாழ்வு வார இதழின் துணை ஆசிரியராக சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஆவடியிலுள்ள புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையன்று திருப்பலி நிறைவேற்றச் செல்வது வழக்கம். அப்போது மறைந்த அருள்பணியாளர் இக்னேசியஸ் இனிகோ அவர்கள் அத்திருத்தலத்தின் அதிபராகவும் வட்டார முதன்மை குருவாகவும் இருந்தார், அங்கு ஏற்கனவே சமபந்தி விருந்து நடைபெற்று வந்தது என்றாலும், இவர் வந்த பிறகுதான், அது மிகவும் புகழ்பெறத் தொடங்கியது. நல்மனம் கொண்டோரில் பலர் இச்சமபந்தி விருந்திற்கு உபயம் செய்ய முன்வருவர். இவ்விருந்தில் ஏழை, பணக்காரர், நோயாளர்கள், யாசிப்போர், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இந்து மற்றும் இஸ்லாம் சமயத்தவர் என எல்லோரும் மகிழ்ச்சியுடன் பங்குபெறுவர். இதில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், சமபந்தி விருந்திற்கு முன்பு எல்லாரும் இறைவேண்டல் மற்றும் திருப்பலியில் பங்குபெறுவர், மேலும் திருப்பலியில் நற்கருணை விருந்திற்குப் பின்பு இறைவன் புனித அந்தோனியார் வழியாகத் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் செய்த பல்வேறு அருளடையாளங்கள் குறித்து இறைமக்கள் முன்பு எல்லா மதத்தவரும் சான்று பகர்வர் என்பதுதான். தமிழகத்தில் இதைவிட சமபந்தி விருந்துக்குப் பெயர்போன இன்னொரு இடம் இருக்கிறது. அது திண்டுக்கல் மறைமாவட்டம் முத்தழகுபட்டியிலுள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெறும் சமபந்தி விருந்துதான். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இந்தச் சமபந்தி விருந்தில் ஒரு இலட்சம் பேர் வரை கலந்துகொள்வர். மேலும் இவ்விருந்து கிறிஸ்தவக் கோவில்களில் மட்டும் நடைபெறுவதில்லை, மாறாக, இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கியர் வழிபாட்டுத் தலங்களிலும் நடத்தப்படுகிறது. ஆக, சமபந்தி விருந்து என்பது எல்லாரையும் உள்ளடக்கிய விருந்து  என்பதை நம் மனதில் கொண்டவர்களாக இப்போது முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்; இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்;  இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.”

இறைவன் தரும் இந்த விருந்து மலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மலை என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்குதான் இறைவன் குடிகொண்டிருக்கின்றார் என்றும், இம்மலையில் இருந்துதான் அவர் தம் மக்களோடு உரையாடுகிறார், உறவாடுகின்றார் என்றும் அவர்கள் உறுதியாக நம்பினர். அந்தவிதத்தில் பார்க்கும்போது இவ்விருந்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. மேலும் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார் இறைவன். அப்படியென்றால், வேறுபாடுகளற்ற நிலையில் அனைவருக்கும் இவ்விருந்து வழங்கப்படும் என்று பொருளாகிறது. மேலும் முதல் வாசகத்தில் மூன்று முக்கியமான செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. ‘மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்’ என்பது முதல் செய்தியாக அமைகிறது. நமது கிறிஸ்தவ வாழ்வில் ஆலயங்களுக்கு வரும்பொழுது முக்காடு அணிகின்றோம். இது பணிவு, தாழ்ச்சி, மற்றும், மகிழ்ச்சியின் அடையாளமாக அமைகின்றது. ஆனால், இறந்தவரின் வீடுகளுக்குச் செல்லும்போது அங்குப் போடப்படும் முக்காடு துயரத்தைப் பகிர்ந்துகொள்வதன் அடையாளமாக அமைக்கின்றது. ஆக, மக்களினங்கள் அனைவரின் வாழ்விலும் சூழ்ந்துள்ள துயரம் என்னும் முக்காட்டை அகற்றும் மற்றும், மகிழ்ச்சி தரும் சமபந்தி விருந்தாக இது அமையும் என்றும் இறைவன் சுட்டிக்காட்டுகின்றார். ‘இவ்விருந்தில் பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்’ என்பது இரண்டாவது செய்தியாக அமைகின்றது. இதனால், இறைவன் அனைத்து மக்களுக்கும் சொந்தமானவர் என்பதையும், அவர் அனைவரின் துயரங்களையும் போக்குபவர் என்பதையும் அறிந்துணர முடிகின்றது. அடுத்து, ‘என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்’ என்பது மூன்றாவது செய்தியாக அமைகின்றது. இங்கே சாவு என்பது துயரங்களிலிருந்து பெறும் நிரந்தரமான விடுதலையைக் குறிக்கிறது. சாலமோன் அரசருக்குப் பிறகு இஸ்ரயேல் மக்களை ஆண்ட மன்னர்கள் பலர் தான்தோன்றித்தனமாக ஆட்சி செய்தனர். இதன்விளைவாக இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டனர். அங்கு அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் ஏராளம்! அங்கு அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிப்போன நிலையில் இறைவன் அவர்களுக்கு இப்படிப்பட்டதொரு விருந்தை ஏற்பாடு செய்வதாகக் கூறுகின்றார். இதனை சமபந்தி விருந்தாக மட்டுமல்ல, விடுதலையின் விருந்தாகவும் நாம் கருதலாம். ஆனால், இவ்விருந்து இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமன்றி, அனைத்து மக்களினங்களுக்குமான விருந்து என்பதில்தான் இது சிறப்புப் பெறுகிறது.

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் ‘திருமண விருந்து’ உவமையானது  தலைமைக் குருக்களுக்கும் பரிசேயருக்குமானது என்பதை நாம் மீண்டும் புரிந்துகொள்ள முடிகிறது. கடந்த வார ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறிய ‘கொடிய குத்தகைக்காரர்’ உவமையின் இறுதியில், தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர் என்று வாசித்தோம். அதனைத் தொடர்ந்து வரும் இந்தத் திருமண விருந்து உவமையிலும் அவர்களை மனதில்கொண்டே கூறுகின்றார் என்பதும் நமக்குத் தெளிவாகிறது. இயேசுவின் பணிவாழ்வு முழுவதும் அவருடன் அதிகமான தர்க்கத்திலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டவர்கள் பரிசேயர்களே! அதனால்தான், கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டு மக்களை ஒடுக்கும் அவர்களின் கடின உள்ளங்களை உணரவைக்கும் பொருட்டே, திராட்சைத் தோட்ட வேலையாள்கள், இரு புதல்வர்கள்,  கொடிய குத்தகைக்காரர், திருமண விருந்து ஆகிய உவமைகளை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார். இன்று நாம் தியானித்துக்கொண்டிருக்கும் இந்தத் திருமண விருந்து உவமையில் “அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார்” என்று வாசிக்கின்றோம். அப்படியென்றால், மீட்புப் பெறுவதற்கான வாய்ப்புக் கிடைக்கப்பெற்ற மறைநூல் அறிஞர், பரிசேயர், தலைமைக்குருக்கள் ஆகியோர் அதனைப் புறக்கணிக்கும் விதமாகவே நடந்துகொண்டார்கள் என்பதை இயேசு இங்கே தெளிவுப்படக் கூறுகின்றார்.

இரண்டாவதாக, சென்றவாரம் நாம் தியானித்த கொடிய குத்தகைக்காரர் உவமையில், நிலக்கிழாரின் சொந்த மகன் கொல்லப்படும் வேளை (காண்க மத் 21:33-46), அவர் அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் என்று இயேசு கூறுவதைக் கேட்டோம். அவ்வாறே, இந்தத் திருமண விருந்து உவமையிலும், திருமண விருந்திற்கு வருமாறு அழைக்கச் சென்ற அரசரின் பணியாளர்களைச் சிலர் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார் என்று இயேசு கூறுவதைப் பார்கின்றோம். ஆக, திருமண விருந்துக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அரசரின் பணியாளர்களைக் கொல்லும் அளவிற்குச் சென்ற அவர்களின் கொடூரச்செயலை எடுத்துக்காட்டுவதன் வழியாகத் தலைமைக்குருக்கள் மற்றும் பரிசேயர்களிடம் விளங்கிய மூர்கத்தனங்களை வெளிப்படுத்துகின்றார் இயேசு. மேலும் இத்துடன் அவர் இந்த உவமையை முடிக்கவில்லை, மாறாக, அவர்களுக்கு வழங்கிய இந்த அறிய வாய்ப்பை அவர்கள் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிடுகின்றனர். ஆதலால், அதேசமூகத்தில் அவர்களால் புறந்தள்ளப்பட்டு வாழும் சமாரியர், வரிதண்டுவோர், நோயாளர்கள், ஏழைகள் ஆகியோருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் அதாவது, இறையாட்சியின் விருந்தில் அவர்களுக்கு இடமளிக்கப்படும் என்பதையும் சூசகமாக எடுத்துரைக்கின்றார் இயேசு.

தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே, நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர் என்பதையும் இதனால் திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது என்பதை பார்க்கின்றோம். ஆக, இறைவனின் அழைப்புக்குத் தகுதி பெற்றிருந்தவர்கள் தகுதியற்றுப்போனார்கள். ஆனால் அதேவேளையில், இறைவனின் அழைப்புக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டவர்கள், தகுதிபெற்றவர்களாக மாறுகிறார்கள். மேலும், "இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால், தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.” என்று கூறி இந்த உவமையை முடிக்கின்றார் இயேசு.

ஓர் ஊரில் விமலா கமலா என்ற இரு பெண்கள் இருந்தனர். இருவரும் சிறுவயதிலிருந்தே உயிர்த்தோழிகள். ஆனால் விமலாவிற்குத் தான் பேரழகி என்ற நினைப்பு எப்போதும் இருந்தது. அவள் எப்போதும் ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவாள். திருமண வயது வந்தபோது இருவருக்கும் அவர்கள் வீட்டில் வரன் தேட ஆரம்பித்தனர். அப்போது இரமேஷ் என்ற இளைஞன் விமலாவைத் திருமணம் செய்துக் கொள்ள விரும்பினான். ஆனால், இரமேஷ்  ஏழை என்ற காரணத்தால், அவள் அவனைத் திருமணம் செய்ய முடியாது எனக் கூறி அவனை அவமானப்படுத்தி வெளியே அனுப்பிவிட்டாள். ஆனால், மனம் தளராத இரமேஷ் கமலாவின் வீட்டிற்குச் சென்று திருமணம் செய்யக் கேட்டான். அவளும் அதற்குச் சம்மதிக்கவே இருவருக்கும் இனிதே திருமணம் நடந்தேறியது. கமலா தனது வீட்டிலிருந்த இடத்தில் காய்கறித் தோட்டம் அமைத்தாள். அவள் உயர் படிப்பு முடித்திருந்ததால் மாலையில் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பாள். பூ வியாபாரமும் செய்து வந்தாள். இதனால் ஓரளவு அவர்களுடையப் பொருளாதாரம் உயர்ந்தது. ஆனால் விமலாவோ பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு பெரிய செல்வந்தரைத் திருமணம் செய்து கொண்டாள். அவன் தினமும் அவளை அடித்துத் துன்புறுத்துவான். அச்செல்வந்தனுக்குக் குடிப்பழக்கமும் இருந்ததால் அவர்களுடையச் செல்வமும் கரைந்து வெகுவிரைவில் அவள் ஏழையாகி விட்டாள். ஆனால், கமலாவோ அரசு வேளை பெற்றதுடன் இரமேஷின் விவசாயத்திற்கும் உதவி செய்து அந்த ஊரிலேயே இருவரும் பெரும் பணக்காரர்களாகினர். அவர்களின் வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கண்ட விமலா, தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டதை எண்ணி பெரிதும் வருந்தினாள்.

நமக்கான சிந்தனைக் கேள்விகள்

இயேசுவின்மீதான எனது நம்பிக்கை எப்படி இருக்கின்றது? இயேசு எனக்களிக்கும் வாய்ப்புகளை நான் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றேனா? இயேசுவின் அழைப்புக்கு நான் தகுதி உடையவனாக இருக்கின்றேனா? வேறுபாடுகளைக் களைந்து எல்லாருடனும் சமமான உறவினைப் பேணுகின்றேனா? போன்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திப்போம். அனைவரையும் சமமாக ஏற்று அன்புசெய்து வாழவே இறைவன் நம்மை அழைத்திருக்கிறார் என்பதை உணரும் விதமாக நமது அகக் கண்கள் திறக்கப்படட்டும். இத்தகைய மனநிலையில் நாம் என்றும் வாழ்வதற்கான இறையருளை இந்நாளில் இறைவனிடம் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 October 2023, 10:56