அருள்பணி சகாய பெலிக்ஸ் அவர்களின் ஓவிய புத்தகம் அருள்பணி சகாய பெலிக்ஸ் அவர்களின் ஓவிய புத்தகம் 

நேர்காணல் - ஓவியக்கலை வழி இறைப்பணி

எல்லைகளைக் கடந்து உலகெங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் கலை ஓவியக் கலை. வரையப்பட்டும் ஓவியம் பேசும் செய்திகள் பல. ஆனால் உணர்த்தும் கருத்துக்களோ மிகப்பல.
நேர்காணல் - ஓவியக்கலை வழி இறைப்பணி அருள்பணி சகாய பெலிக்ஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஓவு என்னும் சொல்லுக்கு “அழகு பொருந்துமாறு செய்தல்” அல்லது “ஒன்றைப்போல எழுதுதல்” என்னும் பொருள். இதனடிப்படையில் ஓவி என்னும் சொல் ஓவியத்தைக் குறித்துள்ளது. பின்னர் அம் என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து ஓவம் என்பது ஓவியத்தைக் குறித்துள்ளது. ஓவு அர் ஓவர் என்பது ஓவியரைக் குறித்துள்ளது. ஓவி அம் ஓவியம் என்னும் சொல்லாட்சி பின்னர் நடைமுறையில் வந்துள்ளது. ஓவியத்தை வரைபவர் பின்னர் ஓவியன் அல்லது ஓவியர் எனப்பெற்றனர். காண்போர் அனைவரையும் தன் சிறப்பால் கவர்ந்திழுத்து அவர்தம் உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் சிறந்த கலை  ஓவியக் கலை. எல்லைகளைக் கடந்து உலகெங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் கலை ஓவியக் கலை. வரையப்பட்டும் ஓவியம் பேசும் செய்திகள் பல. ஆனால் உணர்த்தும் கருத்துக்களோ மிகப்பல. தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது. நமது முன்னோர்கள் தம் உள்ளக் கருத்துகளை பிறருக்கு வெளிப்படுத்தப் பாறைகளிலும், குகைகளிலும் வரைந்தனர். தங்ககளது எண்ணங்களை சித்திரமாக வரைந்து வெளிப்படுத்தினர். இதனை தமிழர் தொல்பொருள் ஆய்வுகளும், இலக்கியச் சான்றுகளாலும் நாம் அறிந்து கொள்கின்றோம். தமிழ்நாட்டில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இடங்களில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஓவியமே சித்திர எழுத்துக்களாகவும் நாளடைவில் மொழிக்குறியீடுகளாகவும் வளர்ந்துள்ளன.

ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவை கோட்டோவியங்கள் ஆகும். அவ்வரைகோடுகள் மேல் சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம் போன்ற வண்ணங்கள் பூச அழகிய ஓவியங்களாக உருவெடுக்கும். சிற்பி, தான் செதுக்கவிருக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அதனைக் கொண்டு கல்லில் உருவம் அமைப்பதே மரபு. இதன்மூலம் சிற்பம் செதுக்குவதற்கு ஓவியக்கலை துணை புரிந்ததையும், ஓவியம் முன்னரே வளர்ந்திருந்ததையும் அறியலாம். ஓவியக்கலை ஓவு, ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி என பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்று புலமை பெற்றவரை ஓவியப் புலவன் என்றும், ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். ஆண் ஓவியர் சித்ராங்கதன் எனவும், பெண் ஓவியர் சித்ரசேனா எனவும் அழைக்கப்படுகின்றனர்.

இத்தகைய சிறப்பு மிகுந்த ஓவியக்கலை வழியாக நற்செய்திப் பணியினை ஆற்றி வருபவர் அருள்பணி சகாய பெலிக்ஸ். தமிழகத்தின் தேவசகாயம் பிள்ளை மலை என்னுமிடத்தில் பிறந்தவர். ஓவியக்கலையில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர், கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரகலா பார்சாந்த் கலைக்கல்லூரியில் முதுகலையையும், சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியத்தின் வழியாக சிகிச்சை முறை பயிற்சியையும்  பயின்றுள்ளார். இயேசுவின் இதயம் எனது ஓவியத்தில் பிரதிபலிக்கின்றது என்ற விருதுவாக்குடன் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், கலை மற்றும் கைவினைப் பொருட்கள் வழியாக நலமான சமுதாயத்தை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன் முன்னோக்கிச் செல்கிறார். 1000 க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து அவற்றை உலகின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தியவர். ஆன்மீக நறுமணத்தையும் குணப்படுத்தும் ஒளியையும் பரப்பும் இவரது ஓவியங்கள் தத்துவ மற்றும் இறையியல் கதிர்களால் சூழப்பட்டவை. இளம் தலைமுறையினரின் வளர்ச்சிக்காக "நியூரோ அழகியல் ஆன்மிமீகத்தை உருவாக்கிய இவர், மாதா தொலைக்காட்சியில் ஆன்மீகக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவர் இந்தியா முழுவதும் கலைப் பட்டறைகள் மற்றும் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்திய அருள்பணி பெலிக்ஸ் அவர்கள், "புதிய நற்செய்தி அறிவிப்பு" என்ற தேசிய விருதினைப் பெற்றுள்ளார். ஓவியக்கலையின் மீதான அவரது ஆர்வம் மற்றும் ஈர்ப்பினால் மக்களால் ஓவிய அருள்பணியாளர் என்று அழைக்கப்படுகின்றார். இத்தகைய சிறப்பு வாய்ந்த அருள்தந்தை சகாய பெலிக்ஸ் அவர்கள், ஓவியக்கலை வழியாக அவர் ஆற்றும் இறைப்பணி பற்றிய கருத்துக்களை இன்றைய நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றார். தந்தை அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2023, 13:34