கர்தினால் Pierbattista Pizzaballa கர்தினால் Pierbattista Pizzaballa   (REUTERS)

காசாவில் நிகழும் குண்டுவெடிப்புகள் அமைதிக்கான தீர்வைத் தராது!

ஒருவர் அமைதியை வெற்றியுடன் குழப்பக்கூடாது என்றும் நிலைத்தன்மையை அடைய வேண்டுமெனில் இரு தரப்பினரும் எதையாவது ஒன்றை இழக்க வேண்டும் : கர்தினால் Pizzaballa

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசாவில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகள் மோதலுக்கான தீர்வை வழங்காது என்றும், அங்கு நிகழும் மரணங்கள் தன் மனத்திற்கு மிகுந்த பாதிப்பையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது என்றும் கூறியுள்ளார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa.

வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள கர்தினால் Pizzaballa அவர்கள், மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரையும் சமாதானம் செய்வதில் மிகுந்த சிரமங்கள் இருப்பதாகவும், அதற்காக அமைதிக்கான முயற்சிகளை கைவிட்டுவிட முடியாது என்றும், அதற்குத் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருவது தனக்கு அதிகம் கவலை அளிப்பதாகக் கூறியுள்ள கர்தினால் Pizzaballa  அவர்கள், இதுவரை 5000-க்கும் மேற்பட்டோர் இப்போரில் இறந்துள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும்தான் என்றும் தனது ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

குண்டுவீச்சில் சுற்றுப்புறங்கள் எல்லாம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, அத்தியாவசியத் தேவைகளான தண்ணீர், உணவு, மின்சாரம் போன்றவை மக்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் உரைத்துள்ள கர்தினால் Pizzaballa அவர்கள், தனது மறைமாவட்டத்தைச் சேர்ந்த விசுவாசிகளுக்கு எழுதிய கடிதத்தில் இச்சூழல் குறித்து எழுதியுள்ளதாகவும், குண்டுவெடிப்புகள் மோதலுக்கான எவ்விதத் தீர்வுக்கும் வழிவகுக்காது என்று அதில் வெளிப்டையாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

காசாவில் அடிப்படை வசதிகள் கிடைக்காமலும், காயப்பட்டவர்கள் சிகிச்சைப் பெறமுடியாமலும் அவதியுற்று வருகின்றனர் என்றும் கூறிய கர்தினால் Pizzaballa  அவர்கள், தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் செய்ததை நாம் கண்டிக்கிறோம், இவை நியாயப்படுத்தப்பட முடியாத அட்டூழியச் செயல்கள் என்றாலும்,  அதற்காக 20, இலட்சம் மக்கள் பட்டினிக் கிடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் விளக்கியுள்ளார்.

குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டுள்ள காசாவின் கிறிஸ்தவர்களுக்காகத் தனது இதயம் வேதனையை அனுபவித்து வரும் வேளை, மனிதாபிமான அமைப்புகள் வழியாக அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு முயற்சித்து வருகின்றோம் என்றும், அவர்களைக் காப்பாற்றுவதற்கான எல்லா வகையான முயற்சிகளையும் செய்து வருகின்றோம் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Pizzaballa

ஒருவர் அமைதியை வெற்றியுடன் குழப்பக்கூடாது என்றும் நிலைத்தன்மையை அடைய வேண்டுமெனில் இரு தரப்பினரும் எதையாவது ஒன்றை இழக்க வேண்டும் என்று விளக்கியுள்ள கர்தினால் Pizzaballa அவர்கள், இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஒன்றாக வாழ வாய்ப்பில்லை, ஆனால் அவர்கள் தனித்தனியாக வாழ்ந்தாலும் அருகருகே வாழ்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இது முடிந்தவரை விரைவில் நடப்பதற்கான சூழ்நிலைகளை நாம் உருவாக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2023, 14:49