இஸ்ரயேல் வான்வழித்தாக்குதலின் போது இஸ்ரயேல் வான்வழித்தாக்குதலின் போது  (ANSA)

எருசலேம் காரித்தாஸ் துன்பத்தில் இணையும் பன்னாட்டுக் காரித்தாஸ்

17 உயிரிழப்புக்கள், 10க்கும் மேற்பட்டக் காயமடைந்தவர்களைக் கொண்ட இத்தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

காசாவில் உள்ள புனித போர்பிரியோஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலினால் எருசலேம் காரித்தாஸ் ஊழியர் வியோலா தனது கணவர் மற்றும் பச்சிளம் குழந்தையுடன் கொல்லப்பட்டது உலகெங்கும் இருக்கும் அனைத்து காரித்தாஸ் அமைப்பிற்கும் ஒரு பெரிய இழப்பு என்றும், இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பளித்து வந்த ஆலயம் தாக்கப்பட்டது பேரழிவுகரமான தாக்குதல் என்றும் குறிப்பிட்டுள்ளது பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பு.

அக்டோபர் 20 வெள்ளிக்கிழமை தாக்குதலினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் மற்றும் ஆன்மிக உடன் இருப்பையும் தெரிவித்து செய்தி ஒன்றிணை வெளியிட்டுள்ள காரித்தாஸ் அமைப்பானது போரினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகளை வழங்கவும் வலியுறுத்தியுள்ளது.

அக்டோபர் 20 வெள்ளிக்கிழமை இரவு காசாவில் உள்ள புனித போர்பிரியோ ஆலயத்தை ஒட்டிய அறையில் புலம்பெயந்தவர்கள் ஏறக்குறைய 411 பேர் தங்கியிருந்த வேளையில் அவர்களில் 5 காரித்தாஸ் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் தங்கி இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளது.

எருசலேம் காரித்தாஸின்  ஊழியரான 26 வயது வியோலா, அவரது குழந்தை மற்றும் கணவருடன் கொல்லப்பட்டார் என்றும், காயமடைந்தவர்களில் வியோலாவின் சகோதரியும் அவரது இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

18 உயிரிழப்புக்கள், 10க்கும் மேற்பட்டக் காயமடைந்தவர்களைக் கொண்ட இத்தாக்குதலினால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ள இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு எருசலேமில் துன்புறும் காரித்தாஸ் அமைப்பின் துன்பத்தில் பங்கேற்பதாகவும், தாக்குதலால் பாதிக்கப்பட்ட காரித்தாஸ் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தார்க்கு தங்களது ஆன்மிக நெருக்கத்தையும் உடனிருப்பையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

கடினமான மற்றும் சிக்கலான சூழ்நிலையில், உடனடி போர்நிறுத்தம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மனிதாபிமான உதவிச்செயல்கள், அமைதி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது போன்றவற்றை மேற்கொள்ளுமாறு மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2023, 10:12