பணி வழி மறைபரப்பு பணி வழி மறைபரப்பு  (ANSA)

வாரம் ஓர் அலசல் - வாழ்வின் வழியாக மறைபரப்பு

‘உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இறைவனிடமிருந்து வரும் பரிசு. இந்தப் பரிசுப் பொருள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியுடன் இவ்வுலகை அடைகிறது, என்றவர் மகாக் கவி இரவீந்திரநாத் தாகூர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

“தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.” ……… “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்,” என எரேமியாவை நோக்கி கூறுகிறார் கடவுள்.

கடவுளின் இந்த வார்த்தைகள் நாம் இஞ்ஞாயிறு, அதாவது அக்டோபர் 22ஆம் தேதி சிறப்பித்த மறைபரப்பு ஞாயிறுக்கு பொருத்தமானவைகளாக நிற்கின்றன.

மறைபரப்பு ஞாயிறு என்பது எதற்கு என்ற கேள்வி நமக்குள் எழலாம். கிறிஸ்தவராகப் பிறந்த ஒவ்வொருவரும் தன் திருமுழுக்கின் வழியாக நற்செய்தி அறிவிக்கவேண்டிய கடமையைக் கொண்டுள்ளார் என்பது உண்மையாக இருக்கும்போது, மறைபரப்பு ஞாயிறு என்ற ஒரு தனி நாள் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.

உன்பெயர் சொல்லி அழைத்ததும் நாமே. உன்னை உள்ளம் கையில் பொறித்ததும் நாமே. தாயின் கருவில் உன்னை அறிந்தோம். நீ உருவாகும் முன்பே தெரிந்தோமே. நீ வரவில்லை என்றால் யாரை நாம் அனுப்புவோம் எம் மந்தையை வழிநடத்துவதற்கு, என விவிலியத்தில் ஏரேமியா நூலில் காணப்படும் இந்த இறைவார்த்தைகள், மறைபரப்புவது நம் ஒவ்வொருவரின் கடமை என சுட்டிக்காட்டுகின்றன.

இந்த கடமை குறித்த விழிப்புணர்வை நமக்கு ஊட்டவே இந்த தனிச்சிறப்பு நாள். முன்பு இந்த ஞாயிறு, விசுவாசப் பரப்புதல் அல்லது வேதபோதக ஞாயிறென்றும் அழைக்கப்பட்டது. நாம் நம் வாழ்வால் மறைபரப்புப் பணியை ஆற்றவேண்டும் என்பது மட்டுமல்ல, மறைபரப்பு சேவையில் ஈடுபட்டுள்ள மறைபரப்பாளர்களுக்கு செபத்தினாலும் ஒறுத்தலினாலும் ஒத்துழைப்பு வழங்கி மறைபரப்பு சேவையை எல்லாநாடுகளிலும் வளர்க்கவேண்டும் என்பதை உணர்த்த உதவும் நாளாகவும் இந்நாள் இருக்கிறது.

‘உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இறைவனிடமிருந்து வரும் பரிசு. இந்தப் பரிசுப் பொருள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியுடன் இவ்வுலகை அடைகிறது. இறைவன் இந்த உலகைக் குறித்து இன்னும் களைப்படையவில்லை,” என இந்திய மகாக் கவி இரவீந்திரநாத் தாகூர் கூறியுள்ளார். பிறக்கும்போதே நம் வழியாக ஒரு செய்தியை அனுப்பும் இறைவன், அந்த செய்தியை நாம் வாழ்நாளெல்லாம் எடுத்துரைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆம். அதுதான் கடவுளின் அன்பு. அந்த அன்பை எடுத்துரைக்கவும், வாழ்ந்து காட்டவும் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம், அதுவே நம் வாழ்வின் நோக்கமாகவும் இருக்கிறது.

‘ஒரு தனிப்பட்ட பணிக்கென இறைவன் என்னைப் படைத்துள்ளார். வேறு எவருக்கும் அவர் கொடுக்காமல், எனக்கு மட்டுமே அப்பணியைக் கொடுத்துள்ளார்.” என்று கூறுவார் புனித ஜான் ஹென்றி நியூமன்.

‘என்னால் இவ்வுலகில் எல்லாவற்றையும் செய்ய முடியாது. ஆனாலும், என்னால் ஒரு சிலவற்றைச் செய்யமுடியும். எல்லாவற்றையும் செய்ய முடியவில்லை என்பதற்காக, நான் செய்யக் கூடிய சிலவற்றைச் செய்ய மறுக்க மாட்டேன்.” என, கேட்க, பேச, பார்க்க இயலாமல் இருந்தாலும், தன் வாழ்வின் மூலம் சாதனைகளைப் புரிந்து வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ள அமெரிக்க எழுத்தாளர் ஹெலன் கெல்லர் கூறுவார்.

ஒரு தனிப்பட்ட பணிக்கென, ஒரு செய்தியுடன் நம்மை அனுப்பியுள்ள இறைவன், நம்மால் இயன்றதை நாம் ஆற்றவேண்டும் என எதிர்பார்க்கிறார். கிறிஸ்தவர்களாகிய ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கிறார். மறைபரப்பு ஞாயிறு என்றதும் அது வழக்கமாக அருள்பணியாளர்கள், துறவியருக்கென ஒதுக்கப்பட்ட பணி என்று நம்மில் பலர் ஒதுங்கி விடுகிறோம். ஆனால், திருஅவையின் ஆரம்ப காலத்தில் இறை வார்த்தையை, கிறிஸ்துவின் புதிய வழியை, வார்த்தைகளால் பறைசாற்றியதுடன் வாழ்வின் வழியாகவும் பறை சாற்றியவர்கள் ஆதிக் கிறிஸ்தவர்கள். இந்த ஆரம்ப கால கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் திருத்தூதர்களோ, சீடர்களோ, அருள்பணியாளர்களோ இல்லை. சாதாரண, எளிய மக்கள். இவர்களது வாழ்வைப் பார்த்து வியந்தவர்கள் அதிகம். அந்த வழியைப் பின்பற்றியவர்கள் அதிகம். வாய் வார்த்தைகளைக் காட்டிலும் வாழ்வினால் நாம் அறிவிக்கும் இறைவார்த்தைகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதியும் என்பதற்கு அவர்களே சாட்சிகள்.

உதாரணமாக, ‘உன் அயலவர் மீது அன்பு காட்டு” என்று இயேசு கூறியதை, வார்த்தைகளில் சொல்வது ஒருவகை தாக்கத்தை உண்டாக்கும். அதே வார்த்தைகளை வாழ்ந்து காட்டும்போது, அதன் தாக்கம் இன்னும் ஆழமாக இருக்கும் என நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ‘ஏழு முறையல்ல… எழுபது முறை ஏழு முறை மன்னித்து விடு” என்று இயேசு விடுத்த சவாலைச் சத்தமாகச் சொல்லிப் புரிய வைக்கலாம். அல்லது தவறிழைக்கும் ஒருவரை ஏழுமுறை எழுபது முறை, அதாவது எந்நேரமும் மன்னிப்பதன் வழியாகவும் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறை சாற்றலாம். நம்மைப் பொறுத்தவரையில் இதுவே உயர்ந்த மறைபரப்பாகும்.

”வாழ்வால் போதித்து வந்த முதல் கிறிஸ்தவர்களின் எடுத்துக்காட்டு, அன்றோடு நின்றுவிடவில்லை. அது இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆயிரம் ஆயிரம் எடுத்துக்காட்டுக்களை முன்வைக்கலாம். புனித பிரான்சிஸ் அசிசி அவர்கள் ஆற்றிய மௌனமான மறையுரை மிகவும் பிரபலமானது. தன் சீடர்களுடன் ஊரைச் சுற்றி அவர் மௌனமாக நடந்ததே அவ்வூர் மக்களுக்கு அரியதொரு மறையுரையானது. அதேபோல், புகழ்மிக்க மருத்துவர்  Albert Schweitzer அவர்கள், ஆப்ரிக்காவில் ஏழைகள் நடுவில் அற்புதமான பணிகள் செய்தவர். அவரை நடமாடும் ஒரு மறையுரை என்று சொல்வார்கள். மறைப்பணி நாடுகளின் பாதுகாவலர்களாகிய புனித பிரான்சிஸ் சவேரியார் தன் போதனைகளால் பல்லாயிரம் உள்ளங்களை இறைவனிடம் அழைத்து வந்தவர். இம்மாதம் முதல் தேதி நாம் கொண்டாடிய புனித குழந்தை தெரேசா தன் செபங்களால் பல்லாயிரம் மனங்களை இறைவனிடம் கொணர்ந்தவர். தான் இருந்த இடத்திலே இருந்துகொண்டு இயேசுவின் போதனைகளை அறிவித்தவர். தொழுநோயாளிகளி்ன் புண்களை முத்தமிட்டு புறம் தள்ளப்பட்டவா்களை அரவணைத்து, இயேசுவின் அன்பை உலகறியச் செய்த அன்னை தெரசா, ஒரு மிகப்பெரும் நற்செய்தி அறிவிப்பாளர். தன்னுடய அன்புச் செயல்களால், வேதனையில் இருப்பவா்களுக்கு உதவிக்கரம் நீட்டி, ஆறுதலைத் தேடும் நெஞ்சங்களுக்கு ஆறுதலளித்து கிறிஸ்துவை உலகிற்கு அறிவித்தவர் அவர். புனித சவேரியார் தீவிரமான போதகப் பணியாலும், புனித குழந்தை தெரேசா செபத்தின் வழியாகவும், அன்னை தெரேசா அன்புப் பணிகள் வழியாகவும் மறைபரப்பாளர்களாக மிளிர்ந்துள்ளனர்.

இயேசு தனது விண்ணேற்றத்திற்கு முன்பு தன்னை பின்பற்றி வந்தவர்களைப் பார்த்து கொடுத்த கடைசிக் கட்டளையை கொஞ்சம் உற்று நோக்குவோம்.

“நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும், அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்" என்பதுதான் அது.

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்பவை, நம் அனைவருக்கும் கிறிஸ்து வழங்கும் அன்பின் கட்டளைகள்.

புனித பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய முதல் திருமுகத்தில், ”நான் கடவுளைப் பற்றி்ய நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றால் அதில் நான் பெருமை பாராட்ட ஒன்றுமி்ல்லை. இதை செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவி்டில் ஜயோ எனக்கு கேடு. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டு வர என்னை எல்லோருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். எப்படியாவது ஒருசிலரையேனும் மீட்கும்படி எல்லோருக்கும் எல்லாமுமானேன்,” என்று கூறி நற்செய்தியை அறிவிக்க கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறார்.           

      நற்செய்தியில் நாம், உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்க இயேசு சீடா்களை அனுப்புவதைப் பார்க்கிறோம். வழிதவிறிப் போன ஆடுகளை  திருப்பிக் கொண்டு வர, நலம் குன்றியவா்களை குணமாக்க, பேய்களை ஓட்ட, இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்ய சீடா்களை பணிக்கிறார். இது இயேசுவின் ஒவ்வொரு சீடருக்குமானது. நாமும் பல வழிகளில் கிறிஸ்துவின் நற்செய்தியை, அன்பை உலகிற்கு அறிவிக்க முடியும், கடவுள் நம்பிக்கை இழந்தவா்களை கடவுள் பக்கம் கொண்டுவர முடியும். எழுத்து வடிவில் இருக்கும் நம் விசுவாசத்தை, பேச்சு வடிவில் இருக்கும் நம விசுவாசத்தை செயல் வடிவில் எடுத்துச் செல்ல, கடவுளின் அன்பை வாழ்ந்து காட்ட, தொலைந்துப் போன ஆடுகளைத் தேடிச்செல்ல என்றும் தயாராக இருக்க வேண்டியது கிறிஸ்தவரின் கடமை.

இந்தியாவின் கிறிஸ்தவ மறைபரப்பு வரலாறு திருத்தொண்டர் புனித தோமாவின் காலத்திலிருந்து தொடர்கிறது. இயேசுவின் திருத்தொணடர்கள் அனைவரும் மறைபரப்பு பணிக்காக பல்வேறு நாடுகளுக்கு பயணம் சென்றபோது, கி.பி. 52-இல் புனித தோமையார் இந்தியாவிற்கு வருகை தந்தார். அன்றைய சேர நாட்டின் கிராங்கனூரிலிருந்து, மலபார் பகுதிகளை மையமாகக் கொண்டு பணி செய்து, மைலாப்பூர் நோக்கி பயணம் செய்து சென்னை சின்னமலையில் கி.பி. 72-இல்  மறைசாட்சியாக உயிர் நீத்தார்.

அதன்பின், 1498ல் இந்தியாவிற்கு கடல்வழியினைக் கண்டறிந்த வாஸ்கோடாகாமாவுடன் வந்த கப்பல் பணியாளர்களுக்கான போர்த்துக்கீசிய ஆன்மீகக்குருக்களின் மறைபரப்புப்பணியை ஓரளவுப் பார்க்கிறோம்.  இவ்வாறு, போர்த்துக்கீசிய வாணிபத்தோடு, கோவாவை மையமாகக் கொண்டு கிறிஸ்தவ மறைபரப்பு பணிகளும் இந்தியாவெங்கும் துளிர்விடத் தொடங்கின. இந்நிலையில்  தூத்துக்குடி இதில் ஒரு முக்கியத் தளமாக விளங்கியது. முத்து மற்றும் கடல் வழி வாணிபத்திற்கு சாதகமாக கடல்துறைமுகம் இங்கு செயல்பட்டு வந்தது இதன் முக்கியக் காரணம்.

இந்நிலையில், புனித சவேரியார் மறைபரப்பு பணிக்காக இந்தியா வந்தடைந்தார். கோவாவிலிருந்து இந்தியா முழுவதும் பயணம் செய்து கிறிஸ்தவத்தை வளர்த்தார். குறிப்பாக, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் இவரது பணி அளப்பரியது. இன்றும் இம்மக்கள் சவேரியார் கிறிஸ்தவர்களாகவே அறியப்படுகின்றனர். அதன் பின் கொன்சாலோ ஃபெர்னான்டஸ், இராபர்ட் டி நொபிலி, புனித அருளானந்தர், வீரமாமுனிவர் என மறைப்பணியாளர்களின் வரலாறு தொடர்ந்தது.

வார்த்தையாலா, அதாவது போதனைகள் மூலமாகவா, அல்லது செபத்தின் வழியாகவா, அல்லது வாழ்ந்து காட்டுவதன் வழியாகவா நாம் நற்செய்தி அறிவிப்பில், அதாவது மறைபரப்புப்பணியில் உதவப் போகிறோம் என்பதைச் சிந்திப்போம். நம் இடத்தில் இருந்துகொண்டே மறைபரப்புப் பணியை நாம் செய்ய முடியும். புனித பிரான்சிஸ் சவேரியாரும், புனித குழந்தை திரேசாவும், புனித அன்னை திரேசாவும் நம் முன் நிற்கிறார்கள். மூவரும் நம் மறைபரப்புப் பணியில் உதவட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2023, 14:15