கர்தினால் Chow Sau-yan கர்தினால் Chow Sau-yan 

ஹாங்காங் மறைமாவட்டத்திற்கு பெய்ஜிங் பேராயர் வருகை

பேராயர் Joseph Li Shan அவர்களின் வருகை இரு மறைமாவட்டங்களுக்கிடையில் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது : ஹாங்காங் மறைமாவட்டம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பெய்ஜிங்கின் பேராயர் Joseph Li Shan அவர்கள், இரண்டு மறைமாவட்டங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நம்பிக்கையில், ஹாங்காங்கின் கர்தினால் Chow Sau-yan அவர்களின் அழைப்பின் பேரில் ஹாங்காங்கிற்குப் பயணம் மேற்கொண்டார்.

நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயணத்தின் நோக்கம், இரண்டு மறைமாவட்டங்களுக்கிடையில் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகளை மேம்படுத்துவதாகும் என்று ஹாங்காங் மறைமாவட்டத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 14, செவ்வாய்கிழமையன்று, ஹாங்காங் மறைமாவட்டத் தலைமையகத்தின் ஆலயத்தில் நிறைவேற்றப்பட்ட திருப்பலிக்குப் பிறகு, பெய்ஜிங் தூதுக்குழுவினர் புனித அமல உற்பவ அன்னையின் பேராலயத்தைக் கண்டுகளித்ததுடன் மறைமாவட்ட மையத்திற்கும் சென்றனர் என்று அவ்விணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறே இவ்வாண்டின் ஏப்ரல் மாதம் 17 முதல் 21 வரை  பேராயர் Joseph Li Shan அவர்களின் அழைப்பின் பேரில் கர்தினால் Chow Sau-yan அவர்கள் பெய்ஜிங் மறைமாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்டார் எனவும், அங்கே இவ்விருவரும் இணைந்துத் திருப்பலி நிறைவேற்றினர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் கர்தினால் Chow Sau-yan  தனது மறையுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வாறு திருஅவையில் ஒன்றிணைந்த பயணத்தின் பாதையை மேம்படுத்துகிறார் என்பதை விளக்கியதுடன் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களையும் ஒருவருக்கொருவர் செவிசாய்க்க அழைப்பு விடுத்தார் என்றும், தொடர்ந்து நமக்கு வழிகாட்டும் தூய ஆவியானவரின் குரலுக்குச் செவிமடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று எடுத்துக்காட்டினார் என்றும் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, இத்தாலிய இயேசு சபை அருள்பணியாளரும், சீனாவில் இயேசு சபை பணித்தளத்தை நிறுவியர்களில் ஒருவருமான வணக்கத்துக்குரிய Matteo Ricci (1552-1610) அவர்களின் திருஉருவம் பதித்த கண்ணாடி படத்தை பேராயர் Li கர்தினால் Chow-விடம் வழங்கினார் என்றும் அவ்விணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பயணம் குறித்து 'Civiltà Cattolica' என்ற இயேசு சபையினரின் இதழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், இரண்டு மறைமாவட்டங்களின் ஆயர்களுக்கிடையேயான தனிப்பட்ட தொடர்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் ஒத்துழைப்பை மீண்டும் ஏற்படுத்துவதை தான் காண்பதாகவும், தாங்கள் ஒப்புக்கொண்ட ஒத்துழைப்பு, இரு தரப்பினராலும் பெரிதும் விரும்பப்பட்டது தங்களுக்கு நம்பிக்கையையும் உறுதியையும் அளிக்கிறது என்று கூறியதையும் தற்போது நினைவுகூர்ந்துள்ளார் கர்தினால் Chow

சீனாவில் கத்தோலிக்க ஆயர்களை நியமிப்பது தொடர்பான 2018-ஆம் ஆண்டின் சீன-வத்திக்கான் ஒப்பந்தம் தொடர்பாக வத்திக்கானுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் லி-யின் வருகை அமைத்துள்ளது என்பதும், தொடக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தம் 2020 மற்றும் 2022-இல் இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டதுடன் இது ஒவ்வொரு முறையும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 1951-ஆம் ஆண்டு வத்திக்கானுடனான தூதரக உறவுகளை சீனா துண்டித்ததில் இருந்து, ஆயர்களை  நியமிப்பது குறித்து சீனா மற்றும் வத்திக்கான் இரு நாடுகளும் கருத்து தெரிவிக்க இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2023, 12:15