சவுல் அரசரானதைக் குறித்து அக்களிக்கும் மக்கள் சவுல் அரசரானதைக் குறித்து அக்களிக்கும் மக்கள்  

தடம் தந்த தகைமை : சவுல், அரசராகத் திருநிலைப்படுத்தப்படல்!

சவுல் மக்கள் நடுவே நின்ற போது, அவர் அனைவரிலும் உயரமாக இருந்தார். மக்கள் அனைவரும் அவர் தோளுயரமே இருந்தார்கள்.

 

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அந்நாட்களில் சாமுவேல் மக்களை மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் அழைத்தார். பின்னர் அவர் இஸ்ரயேல் மக்களை நோக்கிக் கூறியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் இஸ்ரயேலை எகிப்தினின்று கொண்டு வந்தேன். எகிப்தியர் கையினின்றும் உங்களைத் துன்புறுத்திய அனைத்து அரசுகளின் கைகளினின்றும் நான் உங்களை விடுவித்தேன். நீங்களோ உங்கள் துன்ப துயரங்களில் உங்களுக்கு மீட்பாராக இருந்த கடவுளை இன்று புறக்கணித்து விட்டு, ‘எங்கள் மீது ஓர் அரசனை ஏற்படுத்தும்’ என்று அவரிடம் கேட்கிறீர்கள். ஆகவே, உங்கள் குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்” என்றார். பிறகு, சாமுவேல் அனைத்து இஸ்ரயேல் குலங்களையும் ஒருங்கே கொண்டு வர, பென்யமின் குலத்தின் மீது சீட்டு விழுந்தது. பென்யமின் குலத்தை அதன் குடும்பங்கள் வாரியாக ஒருங்கே கொண்டு வர, மதிரி குடும்பத்தின்மீதும் பிறகு கீசின் மகன் சவுல் மீதும் சீட்டு விழுந்தது. அவரைத் தேடிய போது அவரைக் காணவில்லை. “ஆள் இங்கே வந்துவிட்டானா?” என்று அவர்கள் ஆண்டவரை வினவ, ஆண்டவர் “ஆம்! அவன் பொருட்குவியலிடையே ஒளிந்துள்ளான்” என்று கூறினார்.

அவர்கள் ஓடிச் சென்று அங்கிருந்து அவரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். மக்கள் நடுவே நின்ற போது, அவர் அனைவரிலும் உயரமாக இருந்தார். மக்கள் அனைவரும் அவர் தோளுயரமே இருந்தார்கள். சாமுவேல் மக்கள் அனைவரையும் நோக்கி, “ஆண்டவர் தேர்ந்தெடுத்ததைப் பாருங்கள். மக்கள் அனைவரிலும் அவரைப்போல் வேறொருவரும் உண்டோ?” என்றார். அப்போது மக்கள் அனைவரும் 'அரசர் நீடூழி வாழ்க!' என்று ஆர்ப்பரித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2023, 13:24