நம்பிக்கையுடன் செபித்தல் நம்பிக்கையுடன் செபித்தல்  (©4Max - stock.adobe.com)

தடம் தந்த தகைமை – மத்தத்தியாவின் பற்றுறுதி

யூதேயாவிலும் எருசலேமிலும் மக்கள் இறைவனைப் பழிப்பதைக் கண்ட மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தங்கள் ஆடைகளைக் கிழித்து, சாக்கு உடை உடுத்திக் கொண்டு மிகவும் புலம்பினார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அக்காலத்தில் யோவாபின் குடும்பத்தைச் சேர்ந்த குருவான சிமியோனின் பேரனும் யோவானின் மகனுமான மத்தத்தியா எருசலேமைவிட்டுப் புறப்பட்டு மோதயினில் குடியேறினார். அவருக்கு ஐந்து மைந்தர்கள் இருந்தார்கள்.  யூதேயாவிலும் எருசலேமிலும் மக்கள் இறைவனைப் பழிப்பதைக் கண்ட மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தங்கள் ஆடைகளைக் கிழித்து, சாக்கு உடை உடுத்திக் கொண்டு மிகவும் புலம்பினார்கள்.

இதற்கிடையில் கடவுளைப் புறக்கணிக்குமாறு யூதர்களைக் கட்டாயப்படுத்துவதற்காக மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள், மக்களைப் பலிசெலுத்த வைக்கும்படி மோதயின் நகருக்குச் சென்றார்கள். இஸ்ரயேல் மக்களுள் பலர் அவர்களிடம் போய்ச் சேர்ந்தனர். மத்தத்தியாவும் அவருடைய மைந்தர்களும் தனியே கூடிவந்தார்கள். மன்னனின் அலுவலர்கள் மத்தத்தியாவை நோக்கி, “நீர் இந்த நகரத்தில் மதிப்பிற்குரிய பெருந்தலைவர். உம் மைந்தர்கள், சகோதரர்களுடைய ஆதரவு உமக்கு உண்டு. ஆதலால் இப்பொழுது நீர் முன்வாரும்; பிற இனத்தார், யூதேயா நாட்டு மக்கள், எருசலேமில் எஞ்சியிருப்போர் ஆகிய அனைவரும் செய்தவண்ணம் நீரும் மன்னரின் கட்டளையை நிறைவேற்றும். அப்படியானால் நீரும் உம் மைந்தர்களும் மன்னரின் நண்பர்கள் ஆவீர்கள்; பொன், வெள்ளி மற்றும் பல்வேறு பரிசுகளால் சிறப்பிக்கப் பெறுவீர்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு மறுமொழியாக மத்தத்தியா உரத்த குரலில், “மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா மக்களினத்தாரும் அவருக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் மூதாதையரின் வழிபாட்டு முறைகளைக் கைவிட்டு, அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற இசைந்தாலும், நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள் மூதாதையரின் உடன்படிக்கையின்படியே நடப்போம். திருச்சட்டத்தையும் அதன் விதிமுறைகளையும் நாங்கள் கைவிட்டு விடுவதைக் கடவுள் தடுத்தருள்வாராக! மன்னரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியமாட்டோம்; எங்கள் வழிபாட்டு முறைகளினின்று சிறிதும் பிறழமாட்டோம்” என்று கூறினார். மத்தத்தியா இச்சொற்களைக் கூறி முடித்ததும், மன்னரின் கட்டளைப்படி மோதயின் நகரத்துப் பீடத்தின் மேல் பலியிட யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான். மத்தத்தியா அதைப் பார்த்ததும் திருச்சட்டத்தின்பால் கொண்ட பேரார்வத்தால் உள்ளம் கொதித்தெழுந்தார்; முறையாக சினத்தை வெளிக்காட்டி அவன்மீது பாய்ந்து பலிபீடத்தின்மீதே அவனைக் கொன்றார். அதே நேரத்தில், பலியிடும்படி மக்களை வற்புறுத்திய மன்னனின் அலுவலனைக் கொன்று பலிபீடத்தையும் இடித்துத் தள்ளினார். இவ்வாறு சாலூவின் மகன் சிம்ரிக்குப் பினகாசு செய்ததுபோல, திருச்சட்டத்தின்பால் தாம் கொண்டிருந்த பேரார்வத்தை மத்தத்தியா வெளிப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2023, 11:05