இறைவாக்கினர் எலியா இறைவாக்கினர் எலியா  

தடம் தந்த தகைமை – ஒபதியா, இறைவாக்கினர் எலியாவைச் சந்தித்தல்

எலியா, “நான் பணியும் படைகளின் ஆண்டவர் மேல் ஆணை! இன்று அவன் காணுமாறு அவன்முன் நிற்பேன்” என்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

போகும் வழியில் ஒபதியா திடீரென எலியாவைச் சந்தித்தார். அவர் அவரை அடையாளம் கண்டு கொண்டு, தாழ்ந்து வணங்கி, “நீர் என் தலைவர் எலியா தாமோ?” என்றார். அவர், “ஆம், நான்தான்! நீ உன் தலைவனிடம் சென்று, ‘எலியா வந்துள்ளார்’ என்று சொல்” என்றார். அப்பொழுது ஒபதியா, “நான் என்ன பாவம் செய்தேன்? உம் அடியானாகிய என்னை ஆகாபு கொலை செய்யும்படி நீர் ஏன் அவனிடம் கையளிக்கிறீர்? வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவன் உம்மைத் தேடிப் பிடிக்கும்படி ஆளனுப்பாத நாடோ பேரரசோ இல்லை. எந்த நாடோ அரசோ ‘உம்மைக் காணவில்லை’ என்று சொன்னால், ‘உம்மைக் காணவில்லை’ என்று ஆணையிடச் செய்தான். ஆனால் நீரோ, ‘எலியா வந்துள்ளார்’ என என் தலைவனிடம் சொல்லச் சொல்கிறீர். நான் உம்மைவிட்டு அகன்றவுடன், ஆண்டவரின் ஆவி உம்மை எனக்குத் தெரியாமல் தூக்கிக் கொண்டு போய்விடலாம். ஆகாபிடம் சென்று நான் தெரிவிக்கையில், உம்மை அவன் காணவில்லையெனில், என்னைக் கொன்று விடுவான். உம் அடியானாகிய நான் இளமை முதல் ஆண்டவருக்கு அஞ்சி நடந்திருக்கின்றேன்.

ஆண்டவரின் இறைவாக்கினரை ஈசபேல் அழிக்க முயன்றபோது, அவர்களில் நூறு பேரைக் குகைக்கு ஐம்பதாக மறைத்து வைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து வந்தது பற்றி நீர் கேள்விப்படவில்லையா? இப்படியிருக்க, நான் என் தலைவனிடம் சென்று, ‘எலியா வந்துள்ளார்’ என்று சொல்லச் சொல்கிறீர். என்னை அவன் கொன்றுவிடுவான்” என்றார். அப்பொழுது எலியா, “நான் பணியும் படைகளின் ஆண்டவர் மேல் ஆணை! இன்று அவன் காணுமாறு அவன்முன் நிற்பேன்” என்றார். ஒபதியா புறப்பட்டு ஆகாபைச் சந்தித்து இதைத் தெரிவித்தார். உடனே ஆகாபு எலியாவைச் சந்திக்கச் சென்றான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2023, 10:49