நேர்காணல் - 16ஆவது உலக ஆயர்கள் மாமன்ற அனுபவம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஒன்றிப்பு, பங்கேற்பு, பணி என்னும் மூன்று கருத்தை வலியுறுத்தி நடைபெற்ற 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் பகுதியானது அக்டோபர் மாதம் 29ஆம் நாளோடு நிறைவுற்றது. புலம்பெயர்ந்தோர், இடம்பெயர்ந்தோர், ஏழைகள், பெண்கள், சிறார், இளையோர், மேய்ப்புப்பணி, உலக அமைதி என பலவற்றைக் குறித்து இம்மாமன்றத்தில் கலந்துரையாடப்பட்டன. ஒன்றிணைந்து பணியாற்ற அழைப்புவிடுத்த இந்த ஒருங்கிணைந்த பயணம் குறித்த அனுபவங்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் 1952 ஆம் ஆண்டு பிறந்த பேராயர் பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி அவர்கள் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலையையும் உரோம் உர்பானோ திருப்பீடக் கல்லூரியில் முதுகலையையும் பயின்றவர். 1980 ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவுபெற்ற இவர், திருச்சி உலக மீட்பர் ஆலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். அதன்பின் உரோம் உர்பானோ பாப்பிறைக் கல்லூரியில் திருஅவை சட்டங்களில் மேற்கல்வியையும், லாத்தரன் பல்கலைக்கழகத்தில் மேய்ப்புப்பணி இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார். திருஅவை சட்டங்களில் சிறப்பு பட்டங்களையும், பன்னாட்டு சட்டங்கள் மற்றும் நடைமுறைகளில் பட்டயப் படிப்புக்களையும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இத்தாலியம், ஜெர்மானியம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துக்கீசியம், இந்தோனேசியம் என பல மொழிப்புலமை உடையவர்
1984ஆம் ஆண்டு இந்தோனேசியா, 1990 ஆம் ஆண்டு அல்கேரியா தூனிஸ், லிபியா மொரோக்கோ பகுதிகள், 1992 ஆம் ஆண்டு மத்திய ஆப்ரிக்கா, கோங்கோ, சாத், 1995ஆம் ஆண்டு பங்களாதேஷ், 1998ஆம் ஆண்டு லித்துவானியா, லாத்வியா, எஸ்தோனியா பின்லாந்து பகுதிகளின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றியவர். 1998முதல் 2002 அவரை எஸ்தோனியா, பால்டிக், 2002 முதல் 2005 வரை ஜோர்தான் போன்ற பகுதிகளுக்கு அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றியவர். 2005ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் தென் இத்தாலியின் சர்தீனியா பகுதிக்குத் TITULAR பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உமது பாதுகாப்பின் கீழ் என்ற விருதுவாக்குடன் அதேஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் திருச்சிராப்பாள்ளியில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1952ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தமிழகத்தின் திருச்சியில் பிறந்த பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள், 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி, திருச்சியில் ஆயராகத் திருப்பொழிவுசெய்யப்பட்டார். மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கான திருப்பீடத் திருத்தூதராகப் பணியாற்றிய இவர், 2012ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி சென்னை மற்றும் மயிலாப்பூரின் புதிய பேராயராக நியமிக்கப்பட்டு இன்று வரை சிறப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
சென்னை மயிலை உயர்மறைமாவட்ட பேராயர், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை துணைத்தலைவர், பெங்களூரு புனித ஜான் தேசிய மருத்துவக் கல்லூரியின் தலைவர், வத்திக்கானின் நற்செய்தி அறிவிப்பு திருப்பீடத்துறையின் உறுப்பினர், தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் என பல பொறுப்புக்களை திறம்பட ஆற்றிவருபவர். 2022 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற 35ஆவது பேரவைக் கூட்டத்தில் இந்திய ஆயர் பேரவையின் துணைத் தலைவராக பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேராயர் அவர்களை 16ஆவது உலக ஆயர் மாமன்ற அனுபவங்களை வத்திக்கான் வானொலி நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்