வாழ்வளிக்கும் இறையருள்! வாழ்வளிக்கும் இறையருள்!  (Copyright (c) 2020 Porstocker/Shutterstock. No use without permission.)

விவிலியத் தேடல்: திருப்பாடல் 46-1, வாழ்வளிக்கும் இறையருள்!

இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும், அடைக்கலமும், ஆற்றலுமாய், இருக்கின்ற நம் கடவுளுக்கு நற்கனிகள் தரும் மரங்களாகச் செழித்து வளர்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 46-1, வாழ்வளிக்கும் இறையருள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில் 'என்றுமுள அரசரின் மணமக்கள்!' என்ற தலைப்பில் 45-வது திருப்பாடலில் 10 முதல் 17 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வந்தோம். இவ்வாரம் 46-வது திருப்பாடல் குறித்த நமது சிந்தனைகளைத் தொடங்குவோம். 'நம்மோடு வாழும் கடவுள்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 11 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இது கடவுளின் பாதுகாப்பிலும், வலிமையிலும் நம்மை நம்பிக்கைகொள்ளத் தூண்டுகிறது. திருஅவை நெருக்கடியான வேளைகளில் சிக்கி துயருறும் வேளை, அவர் அருளும் பிரசன்னத்தை நம்பவும், அவர்மீதான நம்பிக்கையில் வளரவும் ஊக்குவிக்கிறது. மேலும் அவர் நமக்காக செய்துள்ள அரும்பெரும் செயல்களையும், வரும் காலங்களில் அவர் செய்யவிருக்கிற வியப்புக்குரிய காரியங்களையும் எண்ணி அவரை புகழ்ந்தேத்தவும், மகிமைப்படுத்தவும் நம்மை அழைக்கிறது. குறிப்பாக, ஆண்டவர் நம் உடனிருக்க நாம் அச்சமின்றி அவரது நிழலில் வாழலாம் என்ற எண்ணத்தையும் இத்திருப்பாடல் நமக்குத் தருகின்றது. அண்டை நாடுகள்மீது தாவீது கொண்ட வெற்றியின் காரணமாக இத்திருப்பாடல் எழுதப்பட்டிருக்கலாம் என்று விவிலிய ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர் (காண்க 2 சாமு 8)

இப்போது இத்திருப்பாடலில் 01 முதல் 05 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். முதலில் அவ்வார்த்தைகளை இறையொளியில் பக்தியுடன் வாசிப்போம். கடவுள் நமக்கு அடைக்கலமும்  ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு.

முதலாவதாக, "கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே" என்கின்றார் தாவீது அரசர். தனது எதிரிகள் தன்னை பலமாக அச்சுறுத்திய வேளைகளில் அல்லது எங்கே தான் தோல்வியைத் தழுவ வேண்டியிருக்குமோ, இதனால் எதிரிகளின் நகைப்புக்கும் எள்ளிநகையாடலுக்கும், ஏளனப் பேச்சுகளுக்கும் ஆளாக வேண்டியிருக்குமோ என்றெண்ணி அஞ்சிய வேளைகளில் தாவீது இந்த வார்த்தைகளை உதிர்த்திருக்கலாம். மேலும் போரில் ஆண்டவர் தனக்கு வழங்கிய வெற்றிக்காகவும் இந்த வார்த்தைகளை அவர் கூறியிருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், தாவீது இளைஞனாக ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது சிங்கம், புலி போன்ற வன விலங்குகளிடமிருந்து அவைகளைக் காப்பாற்ற கடவுள் தந்த வலிமை, திறமை, பாதுகாப்பு ஆகியவற்றை எண்ணியவராய் அவர் இசைத்த பாடல்களின் வார்த்தைகளை இங்கே அவர் மீண்டும் பயன்படுத்தி இருக்கலாம். ஏனென்றால், இங்கே 'இடுக்கணுற்ற வேளைகளில்' என்ற வார்தையைப் பயன்படுத்துகின்றார் தாவீது அரசர். அதுமட்டுமன்றி, மேற்கூறிய இந்த வார்த்தைகளை தாவீது வேறுசில திருப்பாடலிகளில் சொல்லியிருப்பதையும் நம்மால் காண முடிகிறது. “என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்” (திபா 18:1-2) என்று திருப்பாடல் 18-இல் கூறுகின்றார்.

இரண்டாவதாக, "நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை" என்றுரைக்கின்றார் தாவீது. இங்கே இயற்கைப் பொங்கியெழுந்து பேரச்சம் தந்தாலும் தங்களுக்கு அதைக் குறித்தெல்லாம் கவலை இல்லை என்கின்றார் தாவீது. அப்படியென்றால், ‘இம்மாபெரும் இயற்கையைப் படைத்ததே கடவுள்தானே, அவர் உடனிருக்கும்போது எங்களுக்கு எவ்விதத்தில் அச்சம் ஏற்படும்’ என்கின்றார். அதாவது, இயற்கையைக் காட்டிலும் பெரியவர் கடவுள் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகின்றார் தாவீது. "மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்" (எசா 54:10) என்று இறைவாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகள் இங்கே தாவீது கூறும் வார்த்தைகளுடன் மிகவும் ஒத்ததாக இருக்கின்றன. மேலும் இயேசு தனது சீடர்களுடன் படகில்  கடலில் பயணம் செய்கின்றார். அப்போது பெரும்புயல்காற்று வீசுகிறது. உடனே அச்சத்தால் அரண்டுபோன சீடர்கள் “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” (காண்க மாற் 4:35-41) என்று கேட்பத்தைப் பார்க்கின்றோம்.

விமானம் ஒன்று 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நடு வானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது வானிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தினால் அவ்விமானம் மேலும் கீழுமாகத் தத்தளிக்கத் தொடங்கியது. அச்சத்தின் பிடிக்குச் சென்ற பயணிகள் அனைவரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலறத் தொடங்கினர். ஆனால், அப்படிப்பட்ட பேரச்சத்திலும் ஒரு சிறுமி மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வயது முதிர்ந்த ஒருவர் அச்சிறுமியிடம், "ஏம்மா, நாங்களெல்லாம் ஊருக்குப் போய்ச்சேருவோமான்னு பயந்துகிட்டு இருக்கோம். ஆனா நீ கொஞ்சம்கூட பயமில்லாம ஆட்டம்போட்டுகிட்டு இருக்கியே" என்று கேட்டார். அதற்கு அச்சிறுமி, "நான் ஏன் தாத்தா பயப்படணும்... இந்த விமானத்தை ஒட்டுறதே என்னோட அப்பத்தானே. அவருக்கு நானும் இந்த விமானத்தில் இருக்கேன்னு தெரியும். அதனால எப்படியும் பத்திரமா நம்ம எல்லாரையும் கொண்டுபோய் சேர்த்திடுவாரு... நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க தாத்தா" என்று சொன்னாளாம். கடவுள்மீதான இத்தகையதொரு ஆழமான நம்பிக்கையைத்தான் தாவீது அரசரும் கொண்டிருந்தார் என்பது திண்ணம்.

மூன்றாவதாக, "ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு" என்று கூறுகின்றார் தாவீது. இங்கே தாவீது அரசர், ஏன் திடீரென்று ஆற்றைக் குறித்துப் பேசுகின்றார் என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. அவர் கூறும் ஆறானது கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிப்பது போன்று இறைவனிடம் இருந்து புறப்பட்டு வரும் அருள் என்னும் ஆறு உள்ளம் எனும் நகருக்குப் பேரின்பம் தரும் என்பதை உருவகமாக எடுத்துக்காட்டுகின்றார். இந்த ஆறானது வற்றாமல் ஓடிச்சென்று நிலத்தை வளம்கொழிக்கச் செய்வதுபோல கடவுளிடமிருந்து இறங்கிவரும் அருளும் மனிதரின் வாழ்வை வளமாக்கும் என்பதை தாவீது எடுத்துரைப்பதாக நாம் உணர்ந்து கொள்ளலாம். அடுத்ததாக இந்த ஆறு ஓடிச்செல்லும் நகரின் நடுவே கடவுள் இருப்பதைப்போல அவரின் அருள் ஓடிச்செல்லும் நமது இதயங்களிலும் கடவுள் இருக்கின்றார் எனத் தாவீது கூற விரும்புகிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம். கோவிலினின்று புறப்படும் ஓடை என்ற தலைப்பில் இறைவாக்கினரான எசேக்கியேல் புத்தகத்தில் அருமையான நிகழ்வொன்று வருகின்றது. அந்நிகழ்வின் இறுதியில், இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும். என்றும், பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும் (காண்க எசே 47:9,12) என்று கூறப்பட்டுள்ளது. இங்கே தூயகத்திலிருந்து தண்ணீர் பாய்வதாகச் சொல்லப்பட்டுள்ளது. தூயகம் என்பது கடவுளின் இருப்பிடம் அல்லது கடவுளின் இதயம் என்றும் நாம் பொருள்கொள்ளலாம். அப்படியென்றால், கடவுளின் தூயகத்திலிருந்து தண்ணீர் பாய்ந்து மரங்களை கனிகொடுக்கச் செய்வதுபோல, கடவுளின் உள்ளத்திலிருந்து மானிடரின் இதயங்களுக்குப் பாய்ந்தோடும் அருளானது அம்மானிடரை கடவுளுக்கு உகந்த கனிகளைத் தரும் மரங்களாக மாற்றும் என்ற கருத்தும் இதில் பொதிந்துள்ளது என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம். யோவான் நற்செய்தியில் வரும் ‘இயேசுவே உண்மையான திராட்சைச் செடி’ என்ற உவமையில், "நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்” என்று கூறும் இயேசு, "நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது" என்றும் இயேசு உரைப்பதைப் பார்க்கின்றோம். (காண்க யோவா 15:4-5,8). ஆகவே, இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும், அடைக்கலமும், ஆற்றலுமாய், இருக்கின்ற நம் கடவுளுக்கு நற்கனிகள் தரும் மரங்களாகச் செழித்து வளர்வோம். அதற்கான அருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2023, 12:33