விவிலியத் தேடல்: திருப்பாடல் 46-2, நம் உடனிருக்கும் கடவுள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒரு மனிதர் நெடும்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அது அவருடைய வாழ்க்கைப் பயணம். நீண்ட தூரம் சென்றபின் அவர் பின்னால் திருப்பி பார்த்தார். அவருடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள் இருந்தன. அவருக்கு மிகப்பெரும் வியப்பு! சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் தெரியவில்லை. அப்போது, "என்னுடன் வருவது யார்?" என்று மிகவும் சத்தமாகக் கேட்டார். அதற்கு, “நான்தான் கடவுள்” என்று வானத்திலிருந்து பதில் வந்தது. அவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. கடவுள் தன்னுடன் பயணம் செய்து வருகிறார்' என்ற பெருமிதத்துடன் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மேலும் அவர் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறுத்துவிட்டார். நன்றாகப் போய்க்கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்கத் தொடங்கின. நாளாக நாளாக அந்தச் சிறிய பிரச்சினைகள் பெரிதாகி துன்பமும் துயரமும் அதிகமாயின. ஒரு கட்டத்தில் அவரால் அப்பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தவித்தபோதுதான் அந்தக் கால் தடங்கள் பற்றிய நினைவு மறுபடியும் அவருக்கு வந்தது. 'கடவுள் உடன் நடக்கும்போதே இவ்வளவு துயரங்களா’ என்று தனக்குள் எண்ணியவராக, கால் தடங்களைக் கவனித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன. அவர் சுற்றி பின்னோக்கிப் பார்த்தார். அவருக்குத் துயர காலங்கள் தொடங்கிய கணத்திலிருந்து ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. இதை அறிந்ததும் அவருக்கு கண்களில் கண்ணீர் ததும்பியது. கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை நோக்கி, "கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்த நீங்கள், துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?" என்று கண்ணீர் சிந்தியவாறு கேட்டார். அதற்குக் கடவுள், "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை. உன் துன்ப காலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. அவை என்னுடையவை. இந்தக் கடின பயணத்தில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன். அதனால் தான் நீ உன்னுடைய காலடி சுவடுகளைக் காண முடியவில்லை" என்றார். அப்போது அந்த மனிதரின் கண்களிலிருந்து நன்றியுடன் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. கடவுளின் கருணைமிகு உடனிருப்பைக் குறித்து வியந்து மகிழ்ந்தார் அந்த நபர்.
கடந்த வார நமது விவிலியத் தேடலில் 'வாழ்வளிக்கும் இறையருள்' என்ற தலைப்பில் 46-வது திருப்பாடலில் 01 முதல் 05 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 6 முதல் 8 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறையமைதியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “வேற்றினத்தார் கலக்கமுற்றனர்; அரசுகள் ஆட்டம் கண்டன; கடவுளின் குரல் முழங்கிற்று; பூவுலகம் கரைந்தது. படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்” (வச.6-9).
முதலாவதாக, "வேற்றினத்தார் கலக்கமுற்றனர்; அரசுகள் ஆட்டம் கண்டன; கடவுளின் குரல் முழங்கிற்று; பூவுலகம் கரைந்தது" என்கின்றார் தாவீது. தான் இஸ்ரயேல் மக்களின் தலைவராக அருள்பொழிவு செய்யப்பட்ட பின்பு, இஸ்ரேல் நாட்டைச் சுற்றியிருந்த அனைத்து எதிரி நாடுகளையும் தாவீது வென்றார் என்பது நமக்குத் தெரியும். அவ்வாறு ஒவொவொரு நாடாக அவர் வென்றுகொண்டிருந்த வேளை, தாவீதின் போர்வீரத்தையும், கடவுள் அவருடன் இருக்கின்றார் என்பதையும் அந்நாட்டின் அரசர்கள் கண்டுணர்ந்தபோது அவர்கள் உடலளவிலும் உள்ளத்தளவிலும் கலக்கமும் பேரச்சமும் கொண்டிருந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வெற்றிகள் எல்லாம் கடவுள் தேடித்தந்த வெற்றிகள். என்னதான் அவர்கள் படைபலம் கொண்டு போராடினாலும், கடவுளின் உடனிருப்பும் அவர்கள் சார்பாக தன்னுடன் அவர் உடனிருந்து போராடியதுமே இந்த வெற்றிக்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்பதை தாவீது மனதில் கொண்டிருந்தார். ஆகவேதான், "வேற்றினத்தார் கலக்கமுற்றனர்; அரசுகள் ஆட்டம் கண்டன; கடவுளின் குரல் முழங்கிற்று; பூவுலகம் கரைந்தது" என்று கூறி புளங்காகிதம் அடைகின்றார். மேலும் ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கின்றேன். சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப்படையிலும் பெருமை கொள்கின்றனர்; நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம்” (காண்க திபா 20:6-7) என்றும் “அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர். இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது” (காண்க திபா 91-4-7) என்று வேறு சில திருப்பாடல்களிலும் தாவீது அரசர் எடுத்துரைப்பதைப் பார்க்கின்றோம். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், சவுலைப்போன்று, ஆயுதங்கள்மீதும் கொள்ளைப் பொருள்கள்மீதும் நம்பிக்கைகொள்ளாமல் வாழும் கடவுள்மீது நம்பிக்கை கொண்டவராக, தான் பெற்ற அனைத்து வெற்றிகளுக்கும் தன் தலைவராகிய கடவுளே தலையாயக் காரணம் என்பதைத் தாழ்ச்சியுடன் எடுத்துரைக்கின்றார் தாவீது.
இரண்டாவதாக, "படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்": என்கின்றார் தாவீது அரசர். 'இங்கே படைகளின் ஆண்டவர்' என்ற வார்தையைப் பயன்படுத்துகிறார் தாவீது. அப்படியென்றால், அவர் கடவுள் தனக்களித்த வெற்றியைக் குறித்து மட்டும் பேசவில்லை, மாறாக, யாக்கோப்பின் காலத்திலிருந்து இறைவன் அளித்த வெற்றியைக் குறித்தும் பேசுகின்றார் தாவீது, அதனால்தான், 'யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்' என்கின்றார். எகிப்திலிருந்து மோசே இஸ்ராயேல் மக்களை செங்கடல் வழியாக அழைத்து வரும் வேளை, அவர்கள் முதலில் அமலேக்கியர்களோடு போர் தொடுத்து வெற்றியடைகின்றனர். அதனைத் தொடர்ந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு நுழைவதற்கு முன்பாக அவர்கள் அதன் எதிரிகளையெல்லாம் முறியடிக்கவேண்டியிருந்தது. அப்போரில் அவர்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. அவ்வாறே நீதித்தலைவர்கள் காலத்திலும் கடவுள் இவர்கள் வழியாக இஸ்ரயேல் மக்களுக்குப் பல்வேறு வெற்றிகளை வாரி வழங்கினார், இதேபோல் கடவுள் தன் மூதாதையர்களுக்கு அளித்த இன்னும் பல வெற்றிகளையும் தாவீது நினைவுகூர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் "படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்" என்றுகூறி பேருவகை கொள்கின்றார் தாவீது. மேலும் “நீரே என் அரசர்; நீரே என் கடவுள்! யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே. எங்கள் பகைவர்களை உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்; எங்களுக்கு எதிராய் எழுந்தோரை உமது பெயரால் மிதித்துப் போடுவோம். என் வில்லை நான் நம்புவதில்லை; என் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை. நீரே பகைவரிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்; எங்களை வெறுப்போரை வெட்கமுறச் செய்தீர். எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டோம். என்றென்றும் உமது பெயருக்கு நன்றி செலுத்தி வந்தோம்” (காண்க திபா 44:4-8) என்று 44-வது திருப்பாடலில் தாவீது கூறும் வார்த்தைகள் தான் பெற்ற வெற்றிகள் அனைத்தும் யாக்கோப்பின் கடவுளின் உடனிருப்பால் நிகழ்ந்தன என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.
மூன்றாவதாக, "வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்" என்று தாவீது கூறும் வார்த்தைகள், கடவுள் ஆற்றியுள்ள வியக்கத்தக்க செயல்களை காணுமாறு இஸ்ரயேல் மக்களை அவர் அழைப்பதாக அமைத்துள்ளது. அது என்ன திகைப்பூட்டும் வெற்றி என்று இங்கே நாம் சிந்திக்க வேண்டும். அதாவது, போருக்குச் செல்லும் அரசர்கள் தங்கள் கொண்டிருக்கின்ற ஆள்பலத்தையும் ஆயுதபலத்தையும் நம்பி போகாமல் ஆண்டவரை மட்டுமே நம்பி செல்லுதல் என்று பொருள்படுகிறது. தாவீது, இஸ்ரயேல் மக்களின் அரசராக அரியணை ஏறியவுடன் அவர் பல நம்பமுடியாத, அதிசயிக்கத்தக்க, வியப்பு நிறைந்த வெற்றிகளைப் பெற்றார் என்பது கண்கூடு. இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், அவர் ஓர் இளைஞனாக, யாருமே வெல்லமுடியாத பிலிஸ்தியர்களின் படைத்தலைவன் கோலியாத்தை வென்றதே ஒரு திகைப்பும் பிரமிப்பும் தந்த வெற்றிதானே! இப்போது அக்காட்சியை நம் கண்முன்னே கொண்டு வருவோம். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ, நீ இகழ்ந்த இஸ்ராயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார். நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர். மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள்கூட்டம் அறிந்துகொள்ளட்டும்; ஏனெனில், இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்” என்றார் (காண்க 1 சாமு 17:45-47). ஆக, தாவீது தான் கொண்டிருந்த வலிமையில் அல்ல, மாறாக, யாக்கோப்பின் கடவுளாம் யாவே மீது கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால்தான் இந்தத் திகைப்பூட்டும் வெற்றியைப் பெற முடிந்தது என்பதை நம்மால் தியானிக்க முடிகின்றது.
ஆகவே, கடவுளுக்காக நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் அவர் நம் உடனிருந்து செயல்பட்டு நமக்குத் திகைப்பூட்டும் வியக்கதக்க வெற்றிகளைத் தருகின்றார் என்பதை உணர்வோம். இப்படிப்பட்ட மாபெரும் கடவுளின் அரும்பெரும்செயல்களைப் போற்றிப் புகழ்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் யாக்கோபின் கடவுளாம் இறைவனிடம் அருள்வேண்டி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்