பரிசேயரின் வெளிவேடத்தைச் சுட்டிக்காட்டும் இயேசு பரிசேயரின் வெளிவேடத்தைச் சுட்டிக்காட்டும் இயேசு  

பொதுக் காலம் 31-ஆம் ஞாயிறு : முன்னுதாரணமாய்த் திகழ்வோம்!

நாமும் பணிவும் துணிவும் கொண்டவர்களாக முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து இயேசுவுக்குச் சான்று பகரும் உண்மைத் தலைவர்களாக வாழ்வோம்.
பொதுக் காலம் 31-ஆம் ஞாயிறு : முன்னுதாரணமாய்த் திகழ்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. மலா 1: 14b-2: 1-2,8-10    II.  1 தெச 2: 7b-9,13    III.  மத்  23: 1-12)

இன்றைய நம் இந்தியாவில் மக்களின் உழைப்பையும் இரத்தத்தையும் உறிஞ்சிக்குடிக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் விரல்விட்டு சொல்லும் அளவிற்குப் பல நல்ல தலைவர்களும் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? நமது தமிழகச் சூழலில் இரண்டு தலைவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வை இன்றைய நமது ஞாயிறு சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளாவோம். ஜீவா என்ற ஒரு தலைவர் நம் தமிழகத்தில் இருந்தார் அவர் கம்னியூஸ்ட் கட்சியைத் சேர்ந்தவர். அவர் ஒரு நாள் கட்சியின் கூட்டத்திற்குச் சென்றுவிட்டு மிகவும் தாமதமாக சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வந்து இறங்கி தனது இல்லத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஓர் ஆட்டோகாரர் அவரருகே வந்து, “ஐயா வந்து ஆட்டோவுல உட்காருங்க, 60 காசு மட்டும் கொடுங்க போதும்” என்றார். அவருடைய காலத்தில் 60 காசுகள் என்பது இன்றைய மதிப்புக்கு குறைந்தது 400 ரூபாய் இருக்கும். “என்னிடம் அவ்வளவு காசு இல்லையப்பா, என் வீடு அருகில்தான் உள்ளது. நான் நடந்தே போய்விடுகிறேன்” என்றார் ஜீவா. ஆனால் அவருடைய கட்சிக்காரர்கள் கட்சிக்கு நிதியாகக் கொடுத்த பணத்தை மூட்டையாகக் கட்டி தனது கையில் வைத்திருந்தார் ஜீவா. அதைப்பார்த்துவிட்ட அந்த ஆட்டோக்காரர், "அதான் மூட்டை நிறைய காசு வைத்திருக்கிறீர்களே, அதிலிருந்து கொடுக்க வேண்டியதுதானே" என்று கேட்டார்.  அதற்கு ஜீவா, “அது என்னுடைய காசு இல்லப்பா, கட்சியினுடைய காசு. இதைக் கட்சியின் வளர்ச்சிக்காக மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இதிலிருந்து ஒரு காசு கூடத் தொட எனக்கு உரிமையில்லை” என்றாராம்.  

இவருடைய காலத்தில் காமராஜர் இவருக்கு நல்ல நண்பராக இருந்திருக்கின்றார். ஒரு நாள் ஜீவாவும் காமராஜரும் ஒரே கூட்டத்திற்குப் பேசுவதற்குப் போகவேண்டும். அப்போது முன்னதாகவே காரில் புறப்பட்ட காமராஜர் ஜீவாவின் வீட்டிற்கு முன் காரை நிறுத்தி தன்னோடு காரில் வருமாறு அழைத்திருக்கிறார். அப்போது ஜீவா, "நீங்க போங்க தலைவரே, இன்னும் 20 நிமிடங்களில் மேடைக்கு வந்துவிடுகிறேன்" என்று கூறி அவரை அனுப்பிவைத்திருக்கிறார். காமராஜரும் சரியென்று போய்விட்டார். சொன்னமாதிரியே ஜீவா, 20 நிமிடங்களில் மேடைக்கு வந்துவிட்டார். அப்போது காமராஜர் அவரிடம், “நான்தான் காத்திருக்கேன், இரண்டு பெரும் சேர்ந்து போகலாமுன்னு சொன்னேனே, நீதான் போ போன்னு என்னைய அனுப்பிவிட்ட” என்று சொன்னாராம். அதற்கு, ஜீவா, “அது ஒன்னும் இல்ல தலைவரே, என்னிடம் இருப்பதே ஒரு வேட்டியும் சட்டையும்தான், நீங்க வந்து என்னைய கூப்பிட்டப்ப, அத இரண்டையும் தொவச்சு காயப்போட்டுட்டு வெறும் கோவணத்துடன்தான் வீட்டுக்குள்ள இருந்தேன். அதான், நீங்க போங்க நான் பின்னால வாரேன்னு சொன்னேன்” என்றாராம் ஜீவா.  

பொதுக்காலத்தின் 31-ஆம் ஞாயிறை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இன்றைய வாசகங்கள், தங்களை மக்களின் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் எப்படிப்பட்ட எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை நமக்குப் பாடமாகக் கற்பிக்கின்றன. ‘தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்ற பழமொழிக்கேற்ப இன்றைய நம் அரசியல் வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் வீதிக்கொருவராக தலைவர்கள் எழும்பி மக்களை என்ன பாடாய்ப்படுத்திகிறார்கள் என்பதை நாம் அறிந்திட முடிகிறது. ஒரு தலைவன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இன்றைய நம் இந்திய அரசியலில் பலர் முன்னுதாரணங்களாகத் திகழ்கின்றனர். மக்களை அடக்கி ஒடுக்கி, பலிக்கடாக்களாக்கி தாங்கள் விரும்புவதையெல்லாம் சாதித்துக்கொள்ளும் சுயநலவாதிகளாக வலம்வருகின்றனர் இன்றைய நம் தலைவர்கள். பணபலம், ஆள்பலம், அரசியல்பலம், சாதிபலம் எனப் பல்வேறு பலங்களுடன் புல்லுருவிகளாக வாழ்ந்து புளங்காங்கிதமடைகின்றனர். வேறுபாடுகளாலும் மாறுபாடுகளாலும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்தச் சமுதாயத்தைக் கூறுபோடுகின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இஸ்ரயேல் மக்களை ஆண்ட தலைவர்களிடம் விளங்கியதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. "நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச்செய்தீர்கள். லேவியோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கிவிட்டீர்கள்.” என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர். “ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையிலும் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்; ஏனெனில், நீங்கள் என் வழிகளைப் பின்பற்றி ஒழுகவில்லை; உங்கள் போதனையில் ஓரவஞ்சனை காட்டினீர்கள்.” என்று வெளிப்படும் இறைத்தந்தையின் கடுமையான வார்த்தைகள் குருக்களின் இறைநம்பிக்கையற்ற வாழ்வையும், கடவுளுக்கு எதிராக அவர்கள் இழைத்த துரோகச் செயல்களையும் எடுத்துக்காட்டுகின்றன. மேலும் இந்த வாசகத்திற்கு முன்னுள்ள பகுதியை வாசிக்கின்றபோது அக்குருக்கள் என்னமாதிரியான வெறுக்கத்தக்க செயல்களை செய்தார்கள் என்பதையும் கடவுள் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார். என் பலிபீடத்தின் மேல் தீட்டான உணவைப் படைத்து என்னை அவமதித்தீர்கள். நீங்களோ ‘எவ்வாறு நாங்கள் உம்மைக் களங்கப்படுத்தினோம்’ என்கிறீர்கள். ஆண்டவரின் பலிபீடத்தை அவமதிக்கலாம் என்றல்லவோ நினைக்கிறீர்கள்! குருடானவற்றைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? நொண்டியும் நோயுமாய்க் கிடந்தவற்றைப் பலியிடக் கொண்டுவருகிறீர்கள் அது குற்றமில்லையா? அவற்றை உன் மாநிலத் தலைவனுக்குக் கொடுத்துப் பார். அவன் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவானோ? உனக்கு ஆதரவு அளிப்பானோ?” (காண்க. மலா 1:7-8) என்று கூறி தனது கண்டனக் குரலை எழுப்புகின்றார் கடவுள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மக்கள் மத்தியில் தங்களைத் தலைவர்களாகக் காட்டிக்கொண்டு எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழாத மறைநூல் அறிஞரையும், பரிசேயரையும் கடுமையாகக் கண்டிக்கிறார் இயேசு. “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்” என்று இயேசு கூறும் வார்த்தைகள், இறைத்தந்தை வெளிப்படுத்திய கடுமையான வார்த்தைகளை ஒத்திருக்கின்றன.

இயேசு ஆண்டவர் மறைநூல் அறிஞரையும், பரிசேயரையும் கண்டிப்பதை மிக நீண்டதாகக் கொடுத்திருக்கின்றார் மத்தேயு நற்செய்தியாளார், அதாவது 1- முதல் 36 வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் முதல் 12 வசனங்களே இன்றைய நற்செய்தியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விருவரின் தவறான வாழ்வியல் நெறிமுறைகளையும், பொய்யும் புரட்டும் நிறைந்த போலியான வாழ்வையும் மக்களுக்கு எடுத்துக்காட்டும் இயேசு, அவர்கள் கூறுவது அனைத்தையும் செய்யுங்கள் என்று  கூறுகின்றார். அப்படியென்றால் என்ன அர்த்தம்? இயேசு கூறும் இறையியல் கருத்துக்கள் பரிசேயரின் இறையியல் கருத்துக்களுடன் ஒத்திருந்தன. அவர்கள் வழிநின்று பழைய உடன்படிக்கையின் 39 நூல்களையும் இயேசு ஏற்றுக்கொண்டிருந்தார். அவர்களின் மரபு போதனைகளில் காணப்பட்ட திருச்சட்டச் சுருக்கமும், அவர்கள் போதித்து வந்த உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கையும் அவருக்கு ஏற்புடையதாக இருந்தன. இதுபோல இன்னும் பல போதனைகளிலும் கருத்துக்களிலும் இயேசுவின் கருத்துக்கள் பரிசேயரின் கருத்துக்களையே பிரதிபலித்தன. ஆகவே, இறையியல் போதனைகளைப் பொறுத்த வரையில் பரிசேயர்களைப் பின்பற்றுங்கள், ஆனால் அறநெறி போதனைகளைப் பொறுத்தவரையில் அவர்களின் வழிகளை ஏற்கவேண்டாம் என்பது இயேசுவின் கருத்தாக இங்கு ஒலிக்கின்றது. அதனால்தான் குருட்டு வழிகாட்டிகளே என்கின்றார். அத்துடன், வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார் இயேசு.

‘அவர்கள் சொல்வார்கள் ஆனால் செயலில் காட்டமாட்டார்கள்’ என்ற இயேசுவின் வார்த்தைகள் இன்றைய நம் பெரும்பாலான அரசியல் மற்றும் சமயத் தலைவர்களுக்குப் பொருத்தமாக அமைகின்றன. அதாவது, இவர்கள் வாய்ச்சொல்லில் மட்டும் வீரர்களாக விளங்குகிறார்கள். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் சில சமயத் தலைவர்களின் வாழ்வு செயலற்ற செத்த விசுவாசமாக இருக்கின்றது. பணத்தை மட்டுமே தங்களின் மூலதனமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். இன்றைய நிலையில் மறைமாவட்டங்களில் உள்ள அதிகமான குருக்கள் விரும்புவது வளமான செல்வச் செழிப்பு நிறைந்த பங்குத்தளங்களை மட்டுமே என்பது கண்கூடு. அதிலும் நகரப் பங்குகள் மட்டுமே அதிகம் விரும்பப்படுகின்றன. தான் பணியாற்றும் பங்கில் பிற்காலத்தில் தனது பெயர் நினைவுகூரப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதாவதொன்றைக் கட்டியெழுப்ப நினைக்கின்றனர். அதற்காக மக்கள்மேல் தாங்கமுடியாத அளவிற்குப் பளுவான சுமைகளை சுமத்துகின்றனர். இதனால் சில வேளைகளில் மக்கள் பணத்தை வட்டிக்கு வாங்கி கொடுக்கும் அளவிற்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் தேவையானது ஒன்றுதான், அதாவது மக்களின் ஆன்மிகத்தை கட்டியெழுப்புவதற்கே குருக்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் காண்கின்றோம். "தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம். இவ்வாறு உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில், நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள். அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம். என்றும் கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம்" என்றும் உரைக்கின்றார் புனித பவுலடியார். இங்கே ஒருபுறம் மாசிதோனிய மக்களின் எடுத்துக்காட்டான வாழ்வுக்கு நற்சான்று தருகின்ற அதேவேளை, இறைவார்த்தையை எடுத்துரைக்கும் தாங்களும் எப்படிப்பட்ட இறைநம்பிக்கை நிறைந்த, நேர்மையான, முன்மாதிரியான வாழ்க்கை வாழ்கின்றோம் என்பதையும் எடுத்துரைக்கின்றார் புனித பவுலடியார்.

இன்றைய கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் விளம்பரம் தேடும் கிறிஸ்தவர்களாகவே இருக்கின்றனர். எல்லாவற்றிலும் தங்கள் பெயர் முதலில் இருக்கவேண்டும் என்று விரும்புவதைப் பார்க்கின்றோம். மேலும் கல்வெட்டுகளில் தனது பெயரோ அல்லது குடும்ப பெயரோ பொறிக்கப்படுவதாக இருந்தால் எத்தனை பெரிய தொகையையும் கொடுக்க முன்வருகின்றனர் பலர். இல்லையென்றால், நமக்கென்னவென்று அப்படியே ஒதுங்கிக்கொள்கின்றனர். ஆனால் அதேவேளையில், எங்கள் பெயரை அறிவிக்க வேண்டாம் என்று கூறி உதவிசெய்யும் எத்தனையோ கிறிஸ்தவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். இன்றையத் துறவற வாழ்விலும் கூட பல துறவியர் தான் ஒரு அருள்பணியாளர், அருள்சகோதரி என்பதைத் தாண்டி, சபைத்தலைவர், மாநிலத்தலைவர், இல்லத்தலைவர், தாளாளர், தலைமையாசிரியர், முனைவர், ஒருங்கிணைப்பாளர், முதன்மைகுரு, மறைவட்ட குரு என்ற பட்டங்களில் எதாவது ஒன்றைத் தனதாக்கிக்கொள்ள பாடாய்ப்படுகின்றனர். அதாவது இவ்வுலகம் தரும் வெற்றுப்புகழ்ச்சிகளிலும், ஆடம்பர இன்பங்களிலும் தங்களைத் தாங்களே முற்றிலும் கரைத்துக்கொள்கின்றனர். இன்றைய உலகின் மக்கள் விரும்புவது வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அரசியல் மற்றும் சமயத் தலைவர்களை அல்ல மாறாக, தங்கள் வாழ்க்கையை முற்றிலுமாக் மக்களுக்காக அர்பணிக்கக் கூடியவர்களைத்தான். நன்கு விளைந்த பயிர்கள்தாம் தலைசாயும் என்பார்கள். அவ்வாறே, அறிவிலும், அனுபவத்திலும், மனதிலும் பக்குவப்பட்ட தலைவர்கள்தாம் தாழ்மையான மனதுடன் தலைநிமிர்ந்து வாழ்வர். இதனைத்தான் இயேசுவும்,  "தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்" என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் கூறுவதைக் காண்கின்றோம். ஆகவே, நாமும் பணிவும் துணிவும் கொண்டவர்களாக முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து இயேசுவுக்குச் சான்று பகரும் உண்மைத் தலைவர்களாக ஒளிர்வோம். அதற்கான இறையருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2023, 12:17