தாலந்து உவமை தாலந்து உவமை 

பொதுக் காலம் 33-ஆம் ஞாயிறு : சந்தர்ப்பத்தை சாதனையாக்குவோம்!

இறைவன் நமக்குத் தரும் வாய்ப்புகளை வசமாக்கிக்கொண்டு, சிரியவற்றில் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து பெரியவற்றை, அதாவது, இறையாட்சியை உரிமையாகிக்கொள்வோம்.
பொதுக் காலம் 33-ஆம் ஞாயிறு : சந்தர்ப்பத்தை சாதனையாக்குவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. நீமொ  31: 10-13, 19-20, 30-31    II.  1 தெச 5: 1-6    III.  மத் 25: 14-30)

மிகப்பெரும் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். எனது அப்பா மிகப்பெரும் பணக்காரர், பின்னர் நான் ஏன் உழைக்கவேண்டும் என்ற எண்ணம் தன் மகனுக்குப் பிற்காலத்தில் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினார் அவர். எனவே, அவனை ஒரு நாள் காரில் கூட்டிக்கொண்டு கோவிலுக்குப் போனார். கோவிலுக்குச் சென்றதும் உள்ளே சென்று இறைவேண்டல் செய்துவிட்டு வெளியே வந்தார். அங்கே கோவில் வாசலில் மூன்று பிச்சைக்காரர்கள் அமர்ந்து பிச்சைக்கேட்டுக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் சென்ற அச்செல்வந்தர், "இனிமேல் நீங்கள் பிச்சை எடுக்க வேண்டாம், ஆளுக்கு 25,000 ரூபாய் பணம் கொடுக்கின்றேன். அதை வைத்துக்கொண்டு ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி அப்பணத்தை அவர்களிடம் கொடுத்தார். இதனைப் புரிந்துகொள்ளாத அச்செல்வந்தரின் மகன், “அப்பா, ஏன் இப்படி செய்தீர்கள்” என்று கேட்டான். அதற்கு அவர், “நாம் இவர்களுக்குப் பணம் கொடுத்திருக்கின்றோம், இவர்கள் மூவரும் இந்த வாய்ப்பை எப்படிப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்று பார்ப்போம்" என்று கூறி அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு சில ஆண்டுகள் கழித்து அக்கோவிலுக்கு வந்தார் அச்செல்வந்தர். அப்போது, தான் பணம் கொடுத்த மூன்று பிச்சைக்காரர்களில் ஒருவர் மட்டும் அங்கே மீண்டும் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரிடம் சென்று, "நான் உனக்குக் கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டு நீ தொழில் ஏதும் செய்யவில்லையா" என்று கேட்டார். அதற்கு அவர், “நீங்கள் கொடுத்த பணத்தை அப்படியே வைத்துக்கொண்டு தினமும் செலவு செய்து உண்டு வந்தேன். பணம் தீர்ந்துவிட்டதால் இப்போது, மீண்டும் பிச்சையெடுக்க வந்துவிட்டேன்" என்றார். "சரி போகட்டும், மற்ற இருவர் எங்கே" என்று கேட்டார். “இதோ இந்தக் கோவிலுக்கு எதிரே ஒருவர் ஐஸ்கிரீம் கடையும், இன்னொருவர் மளிகைக் கடையும் வைத்துள்ளனர்” என்றார். அவ்விரண்டு கடைகளும் மிகப்பெரிய கடைகளாகக் காட்சியளித்ததுடன் அங்கே கூட்டம் நிரம்பி வழிந்தது. உடனே அச்செல்வந்தர் அவர்களிடம் சென்று விசாரித்தார், அப்போது அவர்கள் இருவரும், "ஐயா, நீங்க செய்த பேருதவியால்தான் இன்றைக்கு நாங்கள் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறோம்" என்றனர். அப்போது அச்செல்வந்தர் அவர்களிடம், “நான் உங்களுக்குப் பணம் கொடுத்தது உண்மைதான், ஆனால், அவற்றைக்கொண்டு நீங்கள் சோம்பேறித் திரியவில்லை, உட்கார்ந்துகொண்டு உண்டுகொழுக்கவில்லை. மாறாக, விழிப்புடன் அவற்றைப் பயன்படுத்தி உங்கள் உழைப்பால் உயர்ந்துள்ளீர்கள், வாய்ப்பை வசமாக்கிக்கொண்டு வளர்ந்து வளம்கொழிக்கிறீர்கள். நீங்கள் இன்னும் வாழ்வில் உ.யர உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்றார். இதனையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மகன், "அப்பா கொடுக்கப்படும் வாய்ப்பைப் பயன்படுத்தி எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது என்பதையும், சோம்பித்திரிந்தால் வாழ்க்கை எப்படி மோசமாகிவிடும் என்பதையும் இம்மூவரிடத்திலிருந்தும் நான் கற்றுக்கொண்டேன் என்று கூறினான்.

பொதுக்காலத்தின் 33-ஆம் ஞாயிற்றுக்கிழமையை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் கடவுள் தரும் வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளும்போது வாழ்க்கை வளப்படுகின்றது என்ற பேருண்மையை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அதேவேளையில், அத்தகைய வாய்ப்பை நாம் பயன்படுத்திகொள்ளத் தவறும்போது அவை நம்மிடமிருந்து பறிக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் நமக்கு விடுகின்றன. மத்தேயு நற்செய்தியாளர் கூறும் இவ்வுவமை, ஒத்தமை நற்செய்தியான லூக்காவிலும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், இவ்விருவரும் இந்த உவமையை கையாளும் விதம் சற்று வேறுபடுகிறது. லூக்கா நற்செய்தியாளர் செல்வந்தர் என்பதற்குப் பதிலாக உயர்குடிமகன் என்றும், மூன்று பேருக்குப் பதிலாக 10 பேர் என்றும் குறிப்பிடுகின்றார். மேலும் மத்தேயு தாலந்து என்றும் லூக்கா மினா என்றும் குறிப்பிடுகின்றனர். "அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில், உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்று இயேசு கூறுவதாக மத்தேயு பதிவு செய்யும் அதேவேளையில், அவரோ, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார். மேலும் அவர், ‘நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக் கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்’ என்று சொன்னார்.” (காண்க லூக் 19:26-27) என்று லூக்கா பதிவு செய்கின்றனர். இங்கே லூக்கா அரசர் என்ற வார்த்தையை (இயேசுவை) வெளிப்டையாகப் பயன்படுத்துகிறார், ஆனால், மத்தேயு 'நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர்' என்று கூறுகின்றார். இங்கே ஒருவர் என்பதை கிறிஸ்து என்னும் அரசர் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம். மேலும் மத்தேயு இதற்கு முன்பு கூறிய உவமைகள் அனைத்திலும், இயேசுவைக் குறிக்க, நிலக்கிழார், மணமகன், தலைவர், ஆயர் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். எப்படியிருப்பினும், பரிசேயர், சதுசேயர், தலைமைக்குருக்கள், மூப்பர்கள், திருச்சட்ட அறிஞர்கள் ஆகிய அனைவரும் கடவுள் தங்களுக்குக் கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதாலும்,  அவற்றை அவர்கள் உதாசீனப்படுத்தினர்கள் என்பதாலும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மீட்பு என்னும் இந்த அறிய வாய்ப்பு அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு பாவிகளாகக் கருதப்பட்ட வரிதண்டுவோர், நோயாளர்கள், விலைமகளிர் ஆகியோரிடம் வழங்கப்படும் என்றும் மறைமுகமாகத் தெரிவிக்கின்றார் இயேசு. இதன் காரணமாகவே, “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில், யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” (காண்க மத் 21:31-32) என்று இயேசு அவர்களைச் சாடுவதைப் பார்க்கின்றோம். ஆனால் லூக்கா, கடவுள் என்னும் அரசர் வழங்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்திகொள்ளத் தவறியது மட்டுமன்றி, அவரைத் தங்கள் அரசராக ஏற்றுகொள்ளத் தவறியதால் அவர்களைப் பழிவாங்குவதாகவும் காட்டுகின்றார்.

இன்றைய முதல் வாசகம் 'திறமைவாய்ந்த மனத்திடமுள்ள' ஒரு பெண்ணை தனக்கு மனைவியாக்குக்கொள்ளும் ஒருவன் அவளை நல்லதொரு வாய்ப்பாகவும் கொடையாகவும், தனது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள உதவும் அரியதொரு சந்தர்ப்பமாகவும் பார்க்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார் அந்நூலின் ஆசிரியர்.  அப்படி அவரைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும் பட்சத்தில் அம்மனிதருடைய வாழ்வு பாழ்பட்டுப்போகும் என்றும் எடுத்துக்காட்டுகின்றார். மேலும் அப்பெண்ணின் எழிலோ, அழகோ உதவாது அழிந்துபோகும் என்றும், ஆண்டவரிடம் அவர் கொள்ளும் அச்சமும், அவளது அயராத உழைப்புமே அவளுக்கு நீடித்த நிலைத்த வாழ்வைத் தரும் என்றும் சுட்டிக்காட்டுகின்றார். இதனால்தான், ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றும் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை, இணைக்கும் கல்யாணமாலை, இன்னார்க்கு இன்னாரென்று எழுதிவைத்தானே தேவன் அன்று’ என்றும் தமிழ் திரைப்படப் பாடல் ஒன்று கூறுகின்றது. இம்முதல் வாசகக்தில் 18-வது வசனம் இப்படிக் கூறுகின்றது. 'தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்; அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.' ஆக, இறைவன் நமக்கு அளிக்கும் ஒவ்வொரு வாய்ப்புமே நம் வாழ்வில் அவர் ஏற்றவிரும்பும் ஒரு விளக்குதான் என்பதையும் அவ்விளக்கே விண்ணகத்தை நோக்கிய நமது பயணத்தில் நம்மை விழிப்படன் வழிநடத்துகிறது என்பதை இக்கணம் உணர்வோம்.

இதனைத்தான் இன்றைய இரண்டாம் வாசகமும் பதிவுசெய்கிறது.  ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே, அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே, மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம். உறங்குபவர் இரவில்தான் உறங்குவர்; குடிவெறியர் இரவில்தான் குடிபோதையில் இருப்பர். ஆனால், பகலைச் சார்ந்த நாம் அறிவுத்தெளிவோடு இருப்போம். நம்பிக்கையையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புபெறுவோம் என்னும் எதிர்நோக்கைத் தலைச்சீராவாகவும் அணிந்துகொள்வோம்.

கடந்த வாரம் நாம் சிந்தித்த பத்துத் தோழியர் உவமையில், விழிப்பும் முன்மதியும் கொண்டோரே வெற்றிபெற முடியும் என்பதை எடுத்துக்காட்டும் இயேசு, அதனைத் தொடர்ந்து வரும் இன்றைய நற்செய்தியின் உவமையில் விழிப்புணர்வுடன் கடவுள் தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் பன்மடங்கு வாழ்வில் உயரலாம் என்பதை உணர்த்துகின்றார். இதனைத்தான், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்று அத்தலைவர் உரைப்பதாக இன்றைய நற்செய்தியில் எடுத்துக்காட்டுகிறார் இயேசு.

அறிஞர் சாக்கரட்டீஸிடம் வந்த மாணவன் ஒருவன் "ஐயா, ஒரு மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்" என்று கேட்டான். அதற்கு சாக்கரடீஸ், "ஒரு மாணவன் என்பவன், கொக்கைப்போல, கோழியைப் போல, உப்பைப்போல, உன்னைப்போல இருக்க வேண்டும்" என்றார். மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. "கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள் ஐயா" என்றான். "கொக்கு ஒற்றைக்காலில் நீண்ட நேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி அறிய செயல்களைச் செய்யவேண்டும்" என்றார் சாக்கரடீஸ். "கோழியைப்போல இருக்கவேண்டும் என்றீர்களே, அதற்கு என்ன அர்த்தம்" என்று வினவினான் மாணவன். "கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால் அந்தக் குப்பைகளை விட்டு விட்டு அதிலிருந்து தனக்குத் தேவையான உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும். அதேபோல மாணவர்கள் தாங்கள் சந்திக்கும் தீமைகளைத் தூரத் தள்ளி அதிலிருந்து நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார் சாக்கரடீஸ். "அடுத்து உப்பைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே, என்று கேட்டான் மாணவன்." "ஆமாம் உப்பை எந்த உணவில் கலந்தாலும் அது கண்ணுக்குத் தெரியாது, ஆனால், அதன் சுவையை மட்டுமே நம்மால் உணர முடியும். அதுபோல மாணவர்கள் எந்தத் துறையில் பணியாற்றினாலும் தங்களின் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி தனது மறைவுக்குப் பின்னும் ‘அவர்தான் இதைச் செய்தார்’ என்று கூறும்படி செய்யவேண்டும்" என்றார் சாக்கரடீஸ். "எல்லாம் சரி ஐயா, கடைசியில் உன்னைப்போல் இருக்கவேண்டும் என்றீர்களே, அதற்கு என்ன அர்த்தம்" என்று கேட்டான் அவன். ஒரு மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவுபெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் என்றேன்" என்றார் சாக்கரடீஸ்.

‘செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே, சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே, சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது நம்மை அழைக்கிறது, பூவெல்லாம் மாலைகள் ஆகும் ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும். வானகம் தூரம் இல்லை, வங்க கடல் ஆழம் இல்லை, நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே. சூரியனை வட்டம் இட்டு, தன்னை தானே சுற்றும் பூமி, நம்மை சுற்றி வருமே அந்த வானிலே. புது சந்தோசம் எங்கே புது சங்கீதம் எங்கே அது நம்பிக்கை வாழும் நெஞ்சில் தானடா’ என்கின்றார் கவிஞர் பழனி பாரதி. இந்த உலகில் நாம் காணும் யாவுமே இறைவன் நமக்கு அருளிய வாய்ப்புகள் என்பதை உணர்வோம். நமது ஆணவத்தாலும், சுயநலத்தாலும் சோம்பேறித்தனத்தாலும் அவற்றை நாம் விரயமாக்கிவிடாமால் விழிப்புணர்வுடன் பயன்படுத்தக் கற்றுக்கொள்வோம்.

ஆகவே, இறைவன் நமக்குத் தரும் வாய்ப்புகளை வசமாக்கிக்கொண்டு, சிரியவற்றில் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து பெரியவற்றை, அதாவது, இறையாட்சியை உரிமையாகிக்கொள்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2023, 12:55