கிறிஸ்மஸ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் கிறிஸ்மஸ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்  (ANSA)

வாரம் ஓர் அலசல் – இது தயாரிப்பின் காலம்

இயேசு இவ்வுலகில் முதல் முறையாக வந்த நிகழ்வைக் கொண்டாட மக்களைத் தயாரிக்கவும், வரவிருக்கும் இயேசுவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்க மக்களைத் தூண்டவுமே திருவருகைக் காலம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. அடுத்த திங்கள் கிழமை, கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்க உள்ளோம். மூன்று வாரங்களாக திருவருகைக் காலத்தில், பெருவிழாக் கொண்டாட்டத்திற்காக நம்மை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த நாம், தற்போது அக்காலத்தின் நான்காவது வாரத்தில் உள்ளோம்.

திருவருகைக் காலம் என்றால் என்ன?

இயேசுவின் முதலாம் வருகையைக் கொண்டாடுவதற்கும் அவரது இரண்டாம் வருகையை எதிர்நோக்குவதற்கும் உரிய தயாரிப்பு காலமாக திருவருகைக் காலம் அமைந்துள்ளது.

இயேசு இவ்வுலகில் முதல் முறையாக வந்த நிகழ்வைக் கொண்டாட மக்களைத் தயாரிக்கவும், வரவிருக்கும் இயேசுவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்க மக்களைத் தூண்டவும் திருவருகைக் காலம் உதவுகிறது.

இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது.

திருவருகைக் காலமானது டிசம்பர் 25ஆம் தேதியில் இருந்து நான்கு ஞாயிறு முந்தித் தொடங்குகின்றது.

இருளில் நடந்த மக்கள் பேரோளியைக் கண்டார்கள்.

திருவருகைக் கால மெழுகுதிரி பாவத்தில் வாழும் மக்களுக்கு, இருளில் வாழும் மக்களுக்கு வழியைக் காட்டுவதுடன் இயேசு என்ற பெரிய ஒளியிடம் அழைத்துச் செல்கின்றது.

வருகையும் காத்திருத்தலும் நமது அன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வருகை மகிழ்ச்சியையும், காத்திருத்தல் நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பையும் தருகிறது. நாம் பலரின் வருகைக்காக காத்திருக்கிறோம். பல செயல்களைச் செய்ய காத்திருக்கிறோம். இவை அனைத்துமே நொடிப்பொழுதிலோ, மணித்துளியிலோ மகிழ்வைத் தந்து மறைந்துபோகும் மாயங்கள். ஆனால் திருவருகைக் காலம் என்பதோ கடவுளின் வருகைக்காக காத்திருப்பது.

ஏனெனில் இயேசுவே நம்மை நோக்கி, ‘விழிப்பாயிருங்கள் ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில்; மானிட மகன் வருவார்’, (மத்தேயு 24; 42, 44) என்று கூறியுள்ளார்.

உயிருள்ளதும், உண்மையானதும், என்றும் அழியாததுமான அவரின் வார்த்தையை மனதில் கொண்டவர்களாக, மனுவுருவான வார்த்தையின் வருகைக்காக நம்மைத் தயாரிக்க, நான்கு ஞாயிற்றுக்கிழமைகளை உள்ளடக்கிய இத்திருவருகைக் காலம் அழைப்பு விடுக்கிறது.

நமது காத்திருத்தல் ஆர்வமுள்ளதாக, அணுகுமுறையானதாக, சவாலானதாக இருக்கின்றதா என்பதை சிந்தித்து பார்க்க இத்திருவருகைக்காலம் நம்மை அழைக்கிறது. காத்திருப்பவன் கண்டடைவான் என்பது உண்மை. நாம் காத்திருந்தோமானால் நாமும் கண்டடைவோம். ஆனால் எப்படி காத்திருக்கிறோம் என்பது ஒவ்வொருவரைப் பொறுத்தது. காத்திருத்தல் அனுபவம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அதை அனுபவித்தால் மட்டுமே அந்த மகிழ்வை உணர முடியும். நாமும் காத்திருப்போம். நமது வாழ்வின் வழிகளை நல்ல முறையில் மாற்ற வரும் நம் பாலன் இயேசுவிற்காக காத்திருப்போம். நமது காத்திருப்பு இன்று முளைத்து நாளை மறையும் காளான் போன்ற திரைத்துறை, அரசியல் தலைவர்களின் வருகைக்காக இல்லாமல், நம்மை படைத்து மீட்கக் காத்திருக்கும் ஆண்டவனுக்காக மட்டுமே இருக்கட்டும். காத்திருப்போம் காலம் கடந்த கருணாமூர்த்திக்காக.

கடவுளின் அன்பும் பிறரன்பும்

கடவுள் நம்மேல் கொண்டுள்ள அன்பு அளவிடற்கரியது, எல்லையில்லாதது, மற்றும் உண்மையானது. இறைவாக்கினர்கள் வாயிலாக பேசிய இறைவன் இறுதியில் மனித உரு எடுத்து நம்மோடு இணைந்து நடக்க கீழிறங்கி வந்தார். அவர்தான் நம்மை நோக்கி, இறையன்பும், பிறரன்பும் நாம் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள் என படிப்பினைத் தந்தார். இறையன்பை அனுபவிக்கச் செல்லும் நம் இந்த பாதை பிறரன்பு நிறைந்ததாக இருக்கட்டும். பிறரன்பு எக்காலத்தையும் விட அதிகம் அதிகமாகத் தேவைப்படுகின்றது. ஏன் என்று கேட்பவர்கள் கொஞ்சம் நின்று இன்றைய உலகின் அவல நிலைகளைப் பாருங்கள்.

அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் வீதியெங்கும் அதிகரித்துள்ளது தெரிகின்றதா?. இங்கு கருவறையே கல்லறையாகிறது. சிசுக்கொலையும், பாலியல் பலாத்காரமும், குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்துள்ளனர். அநீதியின் கைகள் ஓங்கி வெற்றிக் களியாட்டம் இடுகின்றன. ஜாதி, மதம், இனம் என்னும் பெயரில் இரத்த ஆறு ஓடுகின்றது. இன்றும் கிராமப்புறங்களில் வரதட்சணையின் பிடியில் சிக்கி, கலாச்சாரமும், பண்பாடும் அழிந்து வருகின்றன. அரசியலும், சினிமாவும், சீரியலும்தான் வாழ்க்கை என்றாகி, வெள்ளித்திரையில், நாட்டை ஆள்பவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். குடி, போதை, கஞ்சா, என இளைஞர் சமுதாயம் தன்னை மறந்து கொண்டிருக்கிறது.  முதலாளித்துவம் தழைத்தோங்க அரசுகள் ஊக்கமளித்து, பெருமுதலாளிகளை தங்கள் இருப்புக்கு சார்ந்திருப்பதால், ஏழைகள் மூலைக்குத் தள்ளப்படுகின்றனர், அவர்கள் தேர்ந்தெடுத்த அரசாலேயே.  இப்படிப்பட்ட நிலைகளுக்கு யார் அல்லது எது காரணம் என்று கேட்டுப் பாருங்கள். உலகில் அன்பின்மையே, அதாவது அயலார் மீது அன்பின்மையே முக்கியக் காரணம். அன்பில்லாதபோது, இயேசுவின் பிறப்பு நம்மிலே எப்படி சாத்தியமாகும்?.

கடவுள் நம்மோடு

இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவார். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள் (மத்தேயு 2„ 22-23). மனித குலம் மீது கொண்ட அன்பால் மனுவுரு எடுத்த இறைமகன் நம்மோடு இருக்கும்போது, நம்மால் பிறரை அன்புகூராமல் வாழமுடியுமா?.

“மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கிறேன்” (லூக்கா 1:10) என்று வானதூதர் இடையர்களுக்கு சொன்னது நமக்குத் தெரியும். தொடக்கத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்த  போது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே ஆழமான அன்புறவு இருந்தது, அது மகிழ்ச்சியான உறவாக இருந்தது, அதேவேளை அது 100 விழுக்காடு முழுமையானதாக இருந்தது. ஆனால் மனிதர்களின் கீழ்ப்படியாமையால் அந்த அன்புறவில் பிளவு ஏற்பட்டது, உறவில் விரிசல் ஏற்பட்டது. அதிலிருந்து பாவம், துன்பம், சாவு உருவெடுத்தது. அந்த நொடியிலிருந்து கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகமானதே தவிர குறையவே இல்லை. இதுதான் மனித குலத்தின் மகிழ்ச்சியற்ற செய்தியானது.

மகிழ்ச்சிக்கு எதிரான துன்பத்திலிருந்து, தூய்மைக்கு எதிரான பாவத்திலிருந்து, வாழ்வுக்கு எதிரான சாவிலிருந்து நம்மை மீட்க மனிதராகப் பிறக்கிறார் இயேசு. அதுதான் மகிழ்ச்சியூட்டும் மாபெரும் நற்செய்தி. இழந்த உறவை மீட்டு இறைவனுக்கும் நமக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க இயேசு பிறந்ததே மகிழ்வுதரும் நற்செய்தி. இதுதான் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. இந்த பெருவிழாவை, மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியின் விழாவை வெளியடையாளங்களில் மட்டும்தான் நாம் சிறப்பித்துக்கொண்டிருக்கிறோம் என்பது உண்மை.

உண்மையிலேயே அவை மனதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றனவா என ஒரு நொடிகூட சிந்திப்பதில்லை. நமது கோபம், ஆணவம், அகங்காரம், பொறாமை ஆகியவைகளை மனதிற்குள் வைத்துக்கொண்டே கிறிஸ்துவை வரவேற்கிறோம். வீட்டை சுத்தப்படுத்தவும், இயேசுவுக்கான குடிலைக் கட்டவும் நேரம் செலவழிக்கும் நாம், நம் மனங்களை சுத்தப்படுத்தத் தயாரா? கிறிஸ்துமஸ் என்றாலே பரிசுப்பொருள்களைப் பரிமாற்றம் செய்வதும், வாழ்த்துச் செய்திகளை அனுப்புவதும், விருந்துக்கு ஏற்பாடுச் செய்வதும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் நம் குழந்தைகளுக்கும் சொல்லி வளர்த்து வருகிறோம். ஆனால் இந்த நடைமுறைகள் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கான மனநிறைவைத் தருகின்றனவா என நாம் எண்ணிப் பார்த்ததுண்டா?.  'அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல' என்றுதான் பலவேளைகளில் பதில் கிட்டுகிறது. ஏனென்றால், நாம் அவசரம் அவசரமாக, ஆரவாரமாக எங்கு செல்கிறோம் என்பது தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறோம்.

இன்றைய உலகின் நிலை

டிசம்பர் மாதம் 12ஆம் தேதிதான் cop-28 என்ற சுற்றுச்சூழலியல் குறித்த துபாய் கருத்தரங்கு நிறைவுக்கு வந்தது. உலக வெப்பநிலை உயர்வை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. உலக வெப்பநிலையை நாம் எடுத்துக்கொண்டோமால், கடந்த 2000 ஆண்டுகளுக்கு உயராத அளவு தற்போது உயர்ந்துவருகிறது. கதிரவன், நிலவு, விண்மீன் ஆகியவற்றில் தோன்றும் மாற்றங்கள், கடல் நீர்மட்டம் உயர்தல் போன்றவை, உலகிற்கு என்ன நேருமோ என்ற அச்சத்தையும் எச்சரிக்கைகளையும் தந்துகொண்டிருக்கின்றன. தற்போது நிலவும் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்ந்தால், இதுவரை, 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவான கடல்நீர்மட்ட உயர்வு, 21ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஒவ்வோர் ஆண்டும் நிகழக்கூடும் என்றும், பல கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளதென்றும் கூறப்பட்டுள்ளது. அளவுக்கு மீறிய பேராசையால், நமது சுற்றுச்சூழல் சீரழிந்து வருவதையும், காலநிலை மாற்றங்களால், மக்கள், குறிப்பாக, வறியோர், பெரும் அழிவுகளுக்கு உள்ளாவதையும் அறிவோம்.

இவ்வாறு, அழிவையும், அவநம்பிக்கையையும் வளர்க்கும் செய்திகள், அண்மைய ஆண்டுகளில், நம் உள்ளங்களை நிறைத்துவந்துள்ளன. சுற்றுச்சூழல் சீரழிவு, இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார வீழ்ச்சி, பயங்கரவாதம், கோவிட் பெருந்தொற்று என்ற பல்வேறு செய்திகளைக் கேட்டு மனம் தளர்ந்துபோயிருக்கிறோம். இந்த வேளையில், நம் உள்ளங்கள் நம்பிக்கையில் வேரூன்றி, நன்மைகளை தோற்றுவிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல, பிறருக்கும் நம்பிக்கையூட்டுபவர்களாக இந்த திருவருகைக்காலத்தில் செயல்பட வேண்டும். ஏனெனில், வாழ்வைக் குறித்த நம்பிக்கையை வளர்க்க உருவாக்கப்பட்டுள்ளது, திருவருகைக் காலம்.

திருவருகைக் காலத்தைக் குறிக்கும் நான்கு மெழுகுவர்த்திகள், வாரத்திற்கு ஒன்றாக நம் ஆலயங்களில் ஏற்றப்படுகின்றன. இவற்றில் முதல் வாரத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி நம்பிக்கையைக் குறிக்கிறது. இரண்டாம் வாரத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி அமைதியையும், மூன்றாம் வாரத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி மகிழ்ச்சியையும், நான்காம் வாரத்தில் ஏற்றப்படுவதோ அன்பையும் குறிக்கின்றன. இத்திருவருகைக்காலத்தில் நம்பிக்கை, அமைதி, மகிழ்ச்சி, அன்பு ஆகியவை நிரம்பி வழிந்து கிறிஸ்து பிறப்பு குடிலை நோக்கி நம்மை அழைத்துச் செல்லட்டும்.                       

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2023, 09:25