இஸ்ரயேல் மக்களுக்கு அறிவுரை வழங்கும் சாமுவேல் இஸ்ரயேல் மக்களுக்கு அறிவுரை வழங்கும் சாமுவேல்  

தடம் தந்த தகைமை : ஆண்டவர் அளித்த அரசருக்கு செவிகொடுங்கள்!

ஆண்டவருக்கு மட்டுமே அஞ்சி நடந்து, முழு மனத்தோடு அவருக்கு ஊழியம் செய்யுங்கள். அவர் உங்களுக்கு ஆற்றிய மாபெரும் செயல்களை நினைத்துப் பாருங்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அந்நாட்களில் சாமுவேல் மக்களைப்பார்த்துக் கூறியது: "இதோ நீங்கள் விரும்பித் தேர்ந்து கொண்ட அரசர்! நீங்கள் வேண்டியவாறு உங்களை ஆள ஆண்டவர் ஓர் அரசரைத் தந்துள்ளார். நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்கு பணிந்து, அவர் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் கட்டளைக்கு எதிராகக் கலகம் விளைவிக்காமல் இருந்தால், நீங்களும் உங்களை ஆளும் அரசரும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றுபவராக இருப்பீர்கள். ஆனால், நீங்கள் ஆண்டவர் குரலுக்குச் செவிகொடுக்காமல், அவர் தம் கட்டளைக்கு எதிராக கலகம் விளைவித்தால், ஆண்டவரின் கை உங்கள் மூதாதையருக்கு எதிராக இருந்தது போல், உங்களுக்கும் எதிராகவும் இருக்கும். இப்பொழுது ஆண்டவர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யவிருக்கும் மாபெரும் நிகழ்ச்சியை நின்று பாருங்கள். இன்று கோதுமை அறுவடையன்றோ? இடியும் மழையும் அனுப்பும்படி நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன். எங்களுக்காக ஓர் அரசனைக் கேட்டது, ஆண்டவர் கண்முன் நீங்கள் செய்த மாபெரும் குற்றம் என்பதை இதனால் நீங்கள் கண்டுணர்வீர்கள்."

சாமுவேல் ஆண்டவரிடம் மன்றாட, ஆண்டவர் அன்று இடியும் மழையும் அனுப்பினார். மக்கள் அனைவரும் ஆண்டவரிடமும் சாமுவேலிடமும் மிகுந்த அச்சம் கொண்டனர். அனைத்து மக்களும் சாமுவேலை நோக்கி, “நாங்கள் சாகாவண்ணம், உம் அடியார்களுக்காக உம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும். ஏனெனில், நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தோடும் எங்களுக்காக ஓர் அரசனைக் கேட்ட இந்தக் குற்றமும் சேர்ந்து கொண்டது” என்றனர்.

பின் சாமுவேல் மக்களிடம் கூறியது: “அஞ்ச வேண்டாம், நீங்கள் இக்குற்றங்களை எல்லாம் செய்திருப்பினும் ஆண்டவரைப் பின்பற்றுவதிலிருந்து விலகாமல் அவரையே உங்கள் முழு மனத்தோடு வழிபடுங்கள். பயனற்ற, விடுவிக்க இயலாத சிலைகளை நாடிச் செல்லவேண்டாம். அவை வீணே. தம் மாபெரும் பெயரின் பொருட்டு ஆண்டவர் தம் மக்களைப் புறங்கணிக்கமாட்டார். ஏனெனில், உங்களை தம் மக்களாக்க அவரே திருவுளங்கொண்டார்" என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 December 2023, 14:57