இயேசுவின் கல்லறையில் உரோமையர்களால் கட்டப்பட்ட கோவில் பெர்சியர்களால் தீக்கிரையாக்கப்பட்டபின் அவ்விடத்தில் எழும்பி நிற்கும் புனித தலம் இயேசுவின் கல்லறையில் உரோமையர்களால் கட்டப்பட்ட கோவில் பெர்சியர்களால் தீக்கிரையாக்கப்பட்டபின் அவ்விடத்தில் எழும்பி நிற்கும் புனித தலம்  (AFP or licensors)

தடம் தந்த தகைமை - உரோமையருடன் உடன்படிக்கை

உரோமையர்களோடு நட்பும் ஒப்பந்தமும் செய்துகொள்ள தன் தூதர்களை உரோமைக்கு அனுப்பிவைத்தார் யூதா. கிரேக்கர்களின் அடிமைத்தனத்தினின்று யூதர்களை விடுவித்துக் கொள்ளவே இவ்வேற்பாடு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அக்கோனின் பேரனும் யோவானின் மகனுமான யூப்பொலேமையும் எலயாசரின் மகன் யாசோனையும் யூதா தேர்ந்தெடுத்தார்; உரோமையர்களோடு நட்பும் ஒப்பந்தமும் செய்துகொள்ள அவர்களை உரோமைக்கு அனுப்பிவைத்தார். கிரேக்கர்களின் அடிமைத்தனத்தினின்று யூதர்களை விடுவித்துக் கொள்ளவே அவர் இவ்வாறு செய்தார்; ஏனெனில் கிரேக்கப் பேரரசு இஸ்ரயேலை அடிமைப்படுத்தியிருந்ததை உரோமையர்கள் கண்டார்கள். அவர்கள் நீண்ட பயணத்திற்குப்பின் உரோமையை அடைந்தார்கள். ஆட்சி மன்றத்தில் நுழைந்து, “மக்கபே எனப்படும் யூதாவும் அவருடைய சகோதரர்களும் யூத மக்களும் உங்களோடு ஒப்பந்தமும் சமாதானமும் செய்து கொள்வதற்கும், எங்களை உங்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் நீங்கள் பதிவு செய்துகொள்வதற்கும் எங்களை உங்களிடம் அனுப்பியுள்ளார்கள்” என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னது மன்றத்தாருக்கு ஏற்புடைதாய் இருந்தது. சமாதானம், ஒப்பந்தம் ஆகியவற்றின் நினைவாக எருசலேமில் யூதர்களிடம் இருக்கும்படி அங்கு அவர்கள் வெண்கலத் தகடுகளில் எழுதி அனுப்பிவைத்த மடலின் நகல் பின்வருமாறு; “உரோமையருக்கும் யூத இனத்தாருக்கும் நீரிலும் நிலத்திலும் என்றும் நலம் உண்டாகுக. வாளும் பகைவரும் அவர்களைவிட்டு அகலட்டும். உரோமையர்களுக்கு எதிராக அல்லது அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட நட்பு நாடுகளுக்கு எதிராக முதலில் போர் மூண்டால், யூத இனத்தார் சூழ்நிலைக்கு ஏற்ப முழு மனத்துடன் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். உரோமையில் முடிவுசெய்தபடி, எதிர்த்துப் போர்புரிவோருக்குத் தானியமோ படைக்கலங்களோ பணமோ கப்பல்களோ கொடுக்கக்கூடாது; எதையும் எதிர்பாராமலே அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

இவ்வாறே முதலில் யூத இனத்தாருக்கு எதிராகப் போர் மூண்டால், உரோமையர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முழு மனத்துடன் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உரோமையில் முடிவுசெய்தபடி, அவர்களின் பகைவர்களுக்கு தானியமோ படைக்கலங்களோ பணமோ கப்பல்களோ கொடுக்கப்பட மாட்டாது. கள்ளமின்றி அவர்கள் இக்கடமையைச் செய்யவேண்டும்.

இத்தகைய நிபந்தனைகளோடு உரோமையர்கள் யூத மக்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2023, 09:06