மனித உடன்பிறந்த உறவின் அடையாளமான கிறிஸ்துபிறப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
தொடர்ந்து அதிகமான துன்பங்களை அனுபவித்து வரும் நிலையிலும், ஹைட்டி மக்கள் இயேசுவின் பிறப்பை நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள் என்றும், மறுபிறப்பாக மனித உடன்பிறந்த உறவின் அடையாளமாகக் கிறிஸ்து பிறப்பு விளங்குகின்றது என்றும் கூறியுள்ளனர் ஹைட்டி ஆயர்கள்.
அதிகாரத்திற்கான போராட்டங்கள், பேராசை, பிளவுபடுத்தும் அரசியல், கட்டுக்கடங்காத இலாப முறைகள், வெறுக்கத்தக்க கருத்தியல்கள் ஆகியவற்றால் காயப்பட்டு துன்புறும் ஹைட்டி மக்களிடையே மனித உடன்பிறந்த உறவைக் கட்டியெழுப்ப உறுதியுடன் செயல்பட வேண்டிய நேரம் கிறிஸ்து பிறப்புக் காலம் என்று வலியுறுத்தியுள்ளனர் ஹைட்டி தலத்திருஅவை ஆயர்கள்.
நம்பிக்கையை வெளிப்படுத்தும் இயேசுவின் பிறப்பால் நாம் அனைவரும் முதிர்ச்சியடையவும், ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும், உரையாடலின் பாதையில் இணைந்து செல்லவும் கிறிஸ்து பிறப்பு நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்று திருவருகைக்கால தயாரிப்பிற்கான செய்தியாக எடுத்துரைத்துள்ளனர் ஹைட்டி தலத்திருஅவை ஆயர்கள்.
திருஅவையின் மேய்ப்புப்பணிச்சுழல் ஹைட்டியில் வித்தியாசமாக செயல்பட நம்மை அழைக்கிறது என்றும், ஒருவருக்கொருவர் செவிசாய்க்கவும், நேர்மையான உரையாடலில் ஈடுபடவும், ஒன்றாக நடக்கவும், ஒன்றாக வாழவும், தூய ஆவியின்படி சிறப்பாக பகுத்தறிந்து, நமது நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்பவும் வலியுறுத்துகின்றது என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், மக்களிடத்தில் அமைதியையும் அமைதியின் நாளை உருவாக்கவும் விழித்தெழுங்கள் என்றும் அழைப்புவிடுத்துள்ளனர்.
சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார வாழ்வின் அனைத்து அம்சங்களையும் குறிக்கும் தோல்வி மற்றும் தீமையை எதிர்க்கவும், தனிப்பட்ட மற்றும் கூட்டு மாற்றத்திலிருந்து உண்மையான ஆன்மீக விழிப்புணர்வை மேற்கொள்ளவும் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ள ஆயர்கள், ஹைட்டி பகுதியிலுள்ள மக்களின் மீட்புக்கு ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்