கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின்போது கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின்போது  

இந்திய பிரதமரின் அலுவலகத்தில் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டம்!

இந்தக் கிறிஸ்மஸ் சந்திப்பின்போது பிரதமர் மோடியிடம் வெளிப்பட்ட வார்த்தைகள் உறவுகளில், குறிப்பாக வட மாநிலங்களில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கைக்கான முதல் படியாக அமைந்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2014-ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு முதல் முறையாக, கிறிஸ்து பிறப்பு தினத்தன்று, புது தில்லியிலுள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கிறிஸ்தவ சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்ததாக ஆசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, மற்றவர்களுக்கு சேவை செய்வதில் நல்லொழுக்கத்தை வலியுறுத்தும் திருவிவிலியத்தை மேற்கோள் காட்டி, இந்தியாவில் உள்ள பல்வேறு மத நம்பிக்கைகளுக்கு இடையிலான மதிப்புகளின் ஒற்றுமையை எடுத்துரைத்தார் மோடி.

திருவிவிலியத்தில் உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், உண்மை மட்டுமே நமக்கு மீட்பின் வழியைக் காண்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி,  இது கிறிஸ்தவவரிகளின் புனித நூலான திருவிவிலியத்திற்கும்,  புனிதமான இந்து உபநிடதங்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கோடிட்டுக் காட்டுகிறது என்றும் உரைத்தார்.

பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பாரம்பரியத்தில் கவனம் செலுத்துவதன் வழியாக, 21- ஆம் நூற்றாண்டில், அனைவரின் ஒத்துழைப்பின் வலிமையே நவீன இந்தியாவை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் கூறினார் மோடி.

இந்தச் சந்திப்பின்போது மும்பை பேராயர் கர்தினால் Oswald Gracias, டெல்லி பெருநகர் பேராயர் Anil Joseph Thomas Couto, Gurgaon-வின் புனித John Chrysostom-இன் ஆர்த்தடாக்ஸ் ஆயர் Thomas Mar Anthonios Valiyavilayil, திருப்பீடத்திற்கான தூதரக அலுவகத்தின் இரண்டாம் நிலை செயலர் Kevin J. Kimtis, ஆங்கிலிக்கன் சபையின் டெல்லி ஆயர் Paul Swarup மற்றும் பலர் உடனிருந்தனர்.

2014-இல் பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து ஒரு நல்லிணக்கமில்லாத சூழலே நிலவுகின்றது. அந்த ஆண்டே அதாவது, 2014-இல் 147 வன்முறை சம்பவங்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கைதுகள் பதிவாகியுள்ளன, ஆனால், அதனைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே உள்ளது. 2015-இல் 177, 2016-இல் 208, 2017-இல் 240, 2018-இல் 292, 2019-இல் 328, 2020-இல் 279, 2021-இல் 505, 2022-இல் 599 மற்றும் நவம்பர் 2023-இல் 687 என இதன் எண்னிக்கை நீள்கிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2023, 15:03