குண்டு வெடிப்பிற்கு கண்டனம் குண்டு வெடிப்பிற்கு கண்டனம்  (ANSA)

குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலும், செபமும்

பிலிப்பீன்ஸ் குண்டு வெடிப்பிற்கு பின் மூடப்பட்ட பல்கலைக்கழகம் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

கடந்த டிசம்பர் 3ஆம் தேதியன்று பிலிப்பீன்ஸின் மராவியில் உள்ள மின்டனாவோ தேசிய பல்கலைக்கழக (MSU) வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த  பல்கலைக்கழகம் எட்டு நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 11, திங்கள் கிழமை, மீண்டும் திறக்கப்பட்டது.

இக்குண்டு வெடிப்பில் பலியானவர்கள் இரண்டு கத்தோலிக்க மாணவர்கள், விரிவுரையாளர் இவாஞ்சலின் ஆரோமின் Evangeline Aromin மற்றொரு மாணவியின் தாய் ரைசா டேனியல் ஆகியோர் ஆவர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பல்கலைக்கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள், ஆதரவு சேவைகள், உளவியல் உதவி மற்றும் சிறப்பு தங்குமிடம், போக்குவரத்து, மற்றும், சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கற்பித்தல் நடவடிக்கைகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

லானோ டெல் சுர் மாநிலத்தை உள்ளடக்கிய முஸ்லீம் தன்னாட்சிப் பிரதேசத்தின் பிரதம மந்திரி முராத் இப்ராஹிம் அவர்கள், இந்நிகழ்வினால் காயமடைந்த சுமார் ஐம்பது பேரின் மருத்துவச் செலவுகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், சிறப்பு உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்று அறிவித்திருந்தார்.

மராவி கத்தோலிக்க சமூகம் மற்றும் பிலிப்பீன்ஸின் கத்தோலிக்க ஆயர் மன்றம் டிசம்பர் 6 அன்று பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக சிறப்பு துக்க நாள் அனுசரித்து, செப வழிபாடுகளை நடத்தியது.

பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் ஆயர் பாப்லோ விர்ஜிலியோ டேவிட், இறந்தோருக்கான திருப்பலியை நிறைவேற்றியதோடு, இத்திருவருகையின் போது, நாடு முழுவதும் உள்ள விசுவாசிகள் திருப்பலி கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளவும்,   செபமாலை செபிக்கவும், சிறப்பு தொண்டு செய்யவும் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2023, 14:08