பெருவில் மனித உயிர்களைப் பாதுகாக்கத் தலத்திருஅவை அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பெரு நாட்டில் நிகழ்ந்த தாக்குதல் ஒன்றில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட வேளை, நாட்டில் அனைத்துக் குற்றங்களுக்கான சித்திரவதைகளையும் அகற்றுவதற்கான உத்தரவாதம் அளிக்குமாறு அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவரும், Trujillo-வின் பேராயருமான Miguel Cabrejos.
இதுகுறித்து தான் வெளியிட்டுள்ள இரண்டு கடிதங்களில், வடமேற்கு பெருவில் உள்ள ஒரு சுரங்க நிறுவனத்தில் நடந்த இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், நாட்டை உலுக்கிய ஊழல்களுக்கு எதிராகவும் உரையாற்றியுள்ளார் பேராயர் Cabrejos.
இப்படி கோழைத்தனமாக ஒரு மனிதனால் இன்னொருவரின் உயிரை எடுப்பது எப்படி சாத்தியம்? என்றும், பண ஆசை அல்லது அதிகார மோகம் மனித வாழ்க்கையின் புனிதமான மதிப்பை விட மேலானதா?" என்று அக்கடிதத்தில் கேள்வியெழுப்பியுள்ளார் பேராயர் Cabrejos,
மத்திய அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகள் அனைவரும் இந்தக் கொடூரமான கொலையை விசாரிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்ட பேராயர் Cabrejos அவர்கள், உயிர் வாழ்வதற்கான உரிமை எல்லாவற்றிற்கும் மேலானதாக இருப்பதால், சட்டத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தி, அதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்திலுள்ள அனைவருடனும் தலத் திருஅவை என்றும் உடனிருக்கின்றது என்று உரைத்துள்ள பேராயர் Cabrejos அவர்கள், இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்வதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடுந் துயரத்திலிருந்து விடுபட்டுளோம் என்று மக்கள் நம்பிக்கைக்கொள்ளும் அளவிற்கு அரசு அதிகாரிகள் செயல்படவேண்டும் என்று விண்ணப்பித்துள்ள பேராயர் Cabrejos அவர்கள், அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை வேண்டுமெனவும், அது நெறிமுறையாக இருக்க வேண்டும், எந்தயொரு தனிப்பட்ட நலன்களிலிருந்தும் விடுபட வேண்டும் மற்றும் மனித மாண்பு மற்றும் அனைத்து பெருவியன் குடிமக்களின் நலனில் அக்கறைக் காட்டவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
டிசம்பர் 2, சனிக்கிழமையன்று, ஆயுதமேந்திய சிலர் நடத்திய தாக்குதலில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஏழு பாதுகாவலர்கள் மற்றும் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். மேலும் 23 தொழிலாளர்கள் கடத்தப்பட்டு ஒரு செயற்கை சுரங்கப்பாதைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்