திருவருகைக் காலம் முதல் ஞாயிறு திருவருகைக் காலம் முதல் ஞாயிறு 

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு : விழிப்புணர்வே விடியல் தரும்!

கிறிஸ்தவர்களாகிய நாம் நமது அன்றாட வாழ்வில் கவனமுடனும் விழிப்புடனும் செயல்பட்டு விண்ணரசை உரிமையாக்கிக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வோம்.
திருவருகைக் காலம் முதல் ஞாயிறு: விழிப்புணர்வே விடியல்தரும்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. எசா  63: 16b-17; 64: 1,3b-8    II.  1 கொரி 1: 3-9    III.  மாற் 13: 33-37)

காட்டிற்குள் இருக்கும் கோவில் ஒன்றில் இளநீர் கடை ஒன்றினை ஒருவர் வைத்திருந்தார். அந்தப் பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகமென்பதால் அவற்றினை விரட்டுவதற்காகப் பெரிய குச்சியொன்றினை கையிலேயே வைத்திருந்தார்.  ஆனாலும் குரங்குகள் எப்படியாவது இளநீரை எடுத்தே ஆகவேண்டும் என முயற்சித்து அவர் கவனம் எப்போது சிதறும் என வாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருந்தன. அவரும் சளைக்காமல் வாய்ப்பினை கொடுக்காமல் அந்தக் குரங்குகளை விரட்டிக்கொண்டு இருந்தார். ஆனாலும் அவர் கவனம் சிதறிய அந்த ஒரு நொடியில் ஒரு இளநீரை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டது ஒரு குரங்கு. கடைக்காரரை விட அதிக விழிப்போடு அதன் குறிக்கோளை அடைய, வாய்ப்பு எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்து அதனை பயன்படுத்தி கொண்டதாலேயே அந்தக் குரங்கு வெற்றி பெற்றது. விழிப்புணர்வுடன் இருப்பவர்கள் வாய்ப்புகளை அறிந்து, அவற்றைப் பயன்படுத்தி வெல்கிறார்கள், விழிப்பற்று இருப்பவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டு தோற்கிறார்கள்.

கடந்த ஞாயிறன்று, கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடி பொதுக்காலத்தை நிறைவு செய்த நாம், இஞ்ஞாயிறு வழிபாட்டு ஆண்டின் புதிய ஆண்டை, அதாவது, திருவருகைக் காலத்தைத் தொடங்குகின்றோம். இக்காலத்தில், நமது மீட்பராம் இயேசுவின் பிறப்பு விழாவுக்காக நம்மைத் தயாரிக்க அழைக்கின்றது அன்னையாம் திருஅவை. இன்றைய வாசகங்கள் நாம் விழிப்பாய் இருந்து விடியல் பெறவேண்டும் என நமக்கு அறிவுறுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் தாங்கள் விழிப்பற்று இருந்த காரணத்தினாலேயே கடவுளின் அன்புக்கு எதிராகப் பாவம் இழைத்தாகப் புலம்பி அழுகின்றனர் இஸ்ரயேல் மக்கள். "இதோ, நீர் சினமடைந்தீர்; நாங்கள் பாவம் செய்தோம்; நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்?நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்; எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின; நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம்; எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல் எங்களை அடித்துச் சென்றன. உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை; உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை; நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்; எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர். ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் வேலைப்பாடுகளே" என்று அம்மக்கள் கூறும் வார்த்தைகள் அவர்கள் செய்த பாவங்களின் விளைவை நமக்குத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. அதனால்தான் இப்பகுதியை நாம் தொடர்ந்து வாசிக்கும்போது, "ஆண்டவரே, கடுஞ்சினம் கொள்ளாதிரும்; குற்றத்தை என்றென்றும் நினையாதிரும்; உம் மக்களாகிய எங்கள்  அனைவரையும் கண்ணோக்கும்" (வச 9) என்று அவர்கள் கடவுளை நோக்கி எழுப்பும் விண்ணப்பங்களையும் நாம் காண்கின்றோம்.

நாம் வாழும் இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதரும் தன்னைக்குறித்து அறிந்துணர்ந்துகொள்ளாத காரணத்தினால்தான் பாவங்கள் மலிந்துபோயுள்ளன என்பதே உண்மை. அப்படியென்றால், ஒவ்வொரு மனிதருக்கும் ‘தன்னை உணர்தல்’ என்பது மிகவும் அவசியமாகிறது. தான் யாரால் படைக்கப்பட்டிருக்கின்றோம், எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றோம், எனது கடமைகளும் பொறுப்புகளும் என்ன என்பதை ஆய்ந்துரணர்த்து, தெளிந்துதேர்ந்து செயல்படும்போது ஒவ்வொரு மனிதரும் பாவம் என்னும் கொடிய நஞ்சிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் அது நடப்பதில்லை, காரணம், ஆணவம், அதிகாரவெறி, பொருளாசை, தனது சுயநலத்திற்காகத் தன் இனத்தை, நண்பர்களை, உடன்பணியாளர்களைக் காட்டிக்கொடுத்து, பிரிவுகளையும் பிளவுகளையும் உண்டாக்குவது, சண்டை சச்சரவுகளை வளர்ப்பது, சாதி வெறியாட்டம், மத வன்முறைகள் ஆகிய யாவும் பாவத்திற்கான வாய்க்கால்களாக அமைகின்றன. ஆக, தங்களைப் படைத்து, பராமரித்து, பாதுகாத்து, வழிநடத்தி, அடிமைத்தளையிலிருந்து மீட்டு பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குக் கொணர்ந்து வாழ்வளித்த இறைவனை அடிக்கடி மறந்து பாவத்தில் வீழ்ந்தனர் இஸ்ரயேல் மக்கள். ஆனால் அவர்கள் பாவத்தில் வீழ்ந்த ஒவ்வொரு கணமும், 'அவர்கள் எப்படிப்போனால் எனக்கென்ன' என்று நினைத்து அவர்களைக் கைவிட்டுவிடாது அவர்கள் இழைத்த கொடிய பாவங்களை மன்னித்து ஏற்றவர்தான் நமது இறைத்தந்தை என்பதை இன்றைய முதல் வாசகம் பதிவு செய்கிறது.

மேலும் "நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே; என் குரலுக்குச் செவி கொடுங்கள்; அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும். அவர்களோ செவி சாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை; பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்” (காண்க எரே 7:23-24) என்று கூறும் கடவுளின் வார்த்தைகள் அவரது மக்கள்மீது அவர் கொண்டிருந்த மனவேதனையை வெளிப்படுத்துகிறது. ஆனால் அதேவேளையில், "மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்" (காண்க எசா 54:10) என்றுரைக்கும் கடவுளின் வார்த்தைகள், பாவங்களால் புண்பட்ட அம்மக்களின் மனங்களுக்கு அன்பையும், ஆறுதலையும், ஆதரவையும், மன்னிப்பையும், ஏற்றுக்கொள்ளுதலையும் வழங்குகின்றன என்பதையும் நம்மால் காண முடிகின்றது.

ஆக, தன்னை அறிந்தவர் மட்டுமே, தன்னையும் இவ்வுலகையும் ஆளமுடியும். அவரால் மட்டுமே கடவுள் விரும்புவது எது வெறுப்பது எது என்பதைத் தேர்ந்து தெளிந்து பாவமின்றி வாழ்ந்திட முடியும். விழிப்பாய் இருப்பது என்பது இதுதான். விழிப்புணர்வே விடியல் தரும். இதனைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் கொரிந்து நகர மக்களின் இறைநம்பிக்கை நிறைந்த வாழ்வை நினைந்து அவர்களை போற்றிப் பாராட்டுகின்றார். "கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில், நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள். மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்.  கடவுள் நம்பிக்கைக்குரியவர்; தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்" என்ற பவுலடியாரின் வார்த்தைகள், விழிப்புணர்வுடன் வாழும்போது நமக்குக் கிடைக்கும் ஆண்டவராம் இயேசுவின் அருள்கொடைகள் பற்றி விரித்துரைக்கின்றன.

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் அறிவுரை, திருவெளிப்பாட்டு உரையில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நிறைவேறும் காலத்தைக் குறித்துக்காட்டுவதாக இருக்கின்றது. இவை நிகழும் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவிற்கு இவை நிகழும் காலம் ஓர் இரகசியம் என்பதும் உண்மை. ஏனென்றால், மானிட மகனின் வெற்றி வருகையின் மகத்துவம் இது! இயேசு வெளிப்படப்போகும் இந்த நாள்தான் மக்களைத் தீர்ப்பிடப்போகும் நாளாகவும் கருதப்பட்டது (காண்க லூக் 21:34, 2 தெச 1:10; 2 திமொ 1:12, 4:8). இந்தத் தீர்ப்புகள் இரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால், அது யாருக்கும் தெரியாது என்றும், மக்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றி அந்தத் தீர்ப்பு நாளை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும் என்பதும் இயேசு கூறும் இந்த வார்த்தைகளுக்குப் பொருத்தமாக அமைகின்றது. காரணம் என்னவென்றால், கிறிஸ்தவ வாழ்வில் நிரந்தரமாக ஓர் ஒழுக்க நிலை இருக்கவேண்டும் என்பதும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒவ்வொரு நாளையும் கிறிஸ்துவின் வருகை நாளாகவே கருத வேண்டும் என்பதும் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய சிந்தனைகளை உள்வாங்கியவர்களாக இப்போது, நற்செய்தி வாசகத்திற்குச் செவிமடுப்போம். கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில், அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில், வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.”

இயேசு, எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவிக்கிறார். அதன்பிறகு, இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்தபோது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் தனியாக வந்து, “நீர் கூறியவை எப்போது நிகழும்? இவையனைத்தும் நிறைவேறப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும்”  (காண்க மாற் 13:1-3) என்று கேள்விகள் எழுப்புகின்றனர். அப்போதுதான், வரப்போகும் கேடு, கொடும் வேதனைகள் குறித்தெல்லாம் அவர்களிடம் பேசுகிறார் இயேசு. அதனைத் தொடர்ந்து மானிட மகனின் வருகைப் பற்றி பேசும்போதுதான் 'விழிப்பாய் இருங்கள்' என்று அறிவுறுத்துகின்றார். குறிப்பாக, சீடர்கள் விழிப்பாய் இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையை இயேசு நான்கு முறை விடுகின்றார் (வச. 33, 34, 35, 37). அப்படியென்றால், 'விழிப்பாய் இருங்கள்' என்ற வார்த்தை எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றது பாருங்கள்! இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் அறிவுரைப் பகுதி ஒத்தமை நற்செய்தியான மத்தேயுவில் மட்டும் இடம்பெறுகின்றது. மேலும், விழிப்பாய் இருப்பது பற்றிய 'பத்துத் தோழியர்’ உவமையின் இறுதியில், "விழிப்பாயிருங்கள்; ஏனெனில், அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.” (காண்க மத் 25:13) என்று இயேசு உரைப்பதாக மத்தேயு நற்செய்தியாளரும் எடுத்துரைக்கின்றார்.

விழிப்பாய் இருப்பது பற்றி இயேசு கூறும் இவ்வுரையில், ஒரு வீட்டுத் தலைவரிடம் அவரது பணியாளர் எந்தளவுக்கு விழிப்பாய் இருக்க வேண்டும் என்பதை ஒரு சிறிய எடுத்துக்காட்டு வழியாக விளக்குகின்றார். நம் அன்றாட வாழ்வில் கூட இதனை நாம் கண்கூடாகக் காணலாம். எடுத்துக்காட்டாக ஓர் அலுவலகம் இருக்கின்றது. அதில் பணியாற்றும் பலர் மேலாளர் பதவிக்குப் போட்டிபோடுகின்றனர், ஆனால் அவர்கள் உழைக்க மனமில்லாதவர்களாக, பொறுப்பற்றவர்களாக இருக்கின்றனர். அதே அலுவகத்தில் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவரும் வேலைபார்க்கிறார். அவர் உண்மையும் நேர்மையும் உள்ளவராக மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, அந்த அலுவலகத்தின் தலைவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் கடமையைக் கவனமாகவும் விழிப்பாகவும் செய்கிறார். ஒருநாள் அந்நிறுவனத்தின் தலைவர் திடீரென்று ஆலுவலகத்திற்கு வருகிறார். அங்கே எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டு நேரத்தைக் கடத்திக்கொண்டுள்ளனர். ஆனால் இவ்வூழியரோ, தன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார். அந்நிறுவனத்தின் தலைவர் அங்கு வந்திருப்பதைக் கூடக் கவனிக்காமல் தன் கடமையைச் செய்துகொண்டிருக்கிறார். இப்போது அங்கே என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நாம் நன்கு யூகித்துக்கொள்ளலாம். அதாவது, அந்தத் தலைவர் அவ்வூழியருக்கு நிச்சயமாக அந்த மேலாளர் பதவியை வழங்கியிருப்பார் அன்றோ? ஆக, விழிப்புணர்வு என்பது, பார்த்தால் ஒன்று, பார்க்காவிட்டால் ஒன்று என்பதல்ல. ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மனநிலையில் உண்மையாக நடந்துகொள்வது. எனவே, உண்மைத்தன்மை கொண்ட விழிப்புணர்வே வெற்றி என்னும் விடியலைத் தரும் என்பதையும் நம் மனங்களில் இருத்துவோம்.

'தூங்காதே தம்பி தூங்காதே நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே' என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் ஒன்று விழிப்புணர்வின் மேன்மையை உணர்த்துகிறது. அதில் வரும் வரிகள் அனைத்தும் மிகவும் அற்பதமானவை. "நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார். சிலர் அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார். விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார் உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார் என்று கூறும் அவர், அப்பாடலின் இறுதியில், "ஓர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்... உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்... கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்... கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்... இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா" என்று முடிக்கின்றார். இங்கே தூங்குவது என்பது கவனமின்மையையும், விழிப்புணர்வின்மையையும் குறிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாமும் நமது அன்றாட வாழ்வில் கவனமுடனும் விழிப்புடனும் செயல்பட்டு விண்ணரசை உரிமையாக்கிக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2023, 11:13