திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு  

திருவருகைக் காலம் 3ம் ஞாயிறு: தாழ்ச்சியில் வெளிப்படும் மகிழ்ச்சி

நாம் எத்தகையதொரு மேன்மையான பணியில் இருந்தாலும் தாழ்ச்சி என்னும் உயரிய கொடையை ஆடையாக அணிந்துகொண்டு அதில் உண்மையான மகிழ்ச்சி காண்போம்.
திருவருகைக் காலம் 3-ஆம் ஞாயிறு : தாழ்ச்சியில் வெளிப்படும் மகிழ்ச்சி!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

(வாசகங்கள்  I. எசா 61: 1-2a, 10-11    II.  1 தெச  5: 16-24    III.  யோவா 1: 6-8,19-28)

மௌரிய வம்சத்தின் தலைசிறந்த மன்னராகத் திகழ்ந்தவர் அசோகர். கலிங்கப்போரே இவர் செய்த கடைசி போர். அந்தப் போரில் வீரர்கள் பட்ட வேதனைகளைக் கண்டு மனம் மாறி, இனி தான் போரே செய்வதில்லை என்று முடிவெடுத்து நாட்டு நலப் பணிகளில் கவனம் செலுத்தி தலைசிறந்தவராக விளங்கினார் அசோகர். புத்த மதத்தை உலகமெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டு அதில் தம் மகளையும் மகனையும் ஈடுபட செய்த பெருமைக்குரியவர் அவர். இத்தகைய பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான மாமன்னர் அசோகர், ஒருநாள் தனது அமைச்சர் ஒருவருடன் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் துறவி ஒருவர் வந்தார். அத்துறவியைப் பார்த்ததும் மாமன்னர் அசோகர் ஓடிப்போய் காலில் விழுந்து வணங்கினார். இச்செயல், அருகில் இருந்த அவரின் அமைச்சருக்கு மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. உடனே அவ்வமைச்சர் அசோகரைப் பார்த்து, “மாமன்னரே மிகப்பெரிய மாண்புக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய உங்கள் தலையானது சாதாரண ஒரு துறவியின் காலில் படுவதா?” என்று கேட்டார். அதற்கு பேரரசர் அசோகர் எந்தப் பதிலும் கூறாமல், சற்று புன்னைகைத்தபடி சென்றுவிட்டார். அதற்கடுத்த நாள் மன்னர் அசோகர் அந்த அமைச்சரை கூப்பிட்டு, “அமைச்சரே, எனக்கு ஒரு ஆட்டின் தலையும், ஒரு புலியின் தலையும், ஒரு மனிதனின் தலையும் வேண்டும். போய் அவைகளைக் கொண்டு வாருங்கள் என்று கேட்டார். அமைச்சர் மிகவும் சிரமப்பட்டு மூன்று தலைகளையும் எடுத்துக்கொண்டு வந்து அரசரின் முன் நின்றார். அவற்றைக் கண்ட மன்னர் அசோகர், “மிகவும் நல்லது அமைச்சரே, இப்பொழுது இந்த மூன்று தலைகளையும் எடுத்துக்கொண்டு போய் சந்தையில் விற்றுவிட்டு வாருங்கள்” என்றார். மன்னர் பணித்தவாறே, அமைச்சர் சந்தைக்குச் சென்றார். சந்தையில் ஆட்டின் தலையை அதிக விலைக்கு ஒருவர் வாங்கிக் கொண்டு போய்விட்டார். அவ்வாறே, புலி தலையை வீட்டில் மாட்டிக் வைக்கலாம் என்று எண்ணி இன்னொருவர் அதனை  வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். ஆனால், மனித தலையை மட்டும் யாருமே வாங்க முன்வரவில்லை. அமைச்சர் எவ்வளவோ முயன்று பார்த்தார், ஆனால் அதனை விற்கவே முடியவில்லை. விரக்தியின் உச்சிக்கே சென்ற அமைச்சர் அரசரிடம் திரும்பி வந்து, “மாமன்னரே, ஆட்டுத்தலையையும் புலி தலையையும் இருவர் வாங்கிச் சென்று விட்டனர். ஆனால், மனித தலையை மட்டும் எவருமே விலை கொடுத்து வாங்க முன் வரவில்லை” என்றார். அதற்கு அரசர் அவரைப் பார்த்து, “அமைச்சரே, மனித தலையை இலவசமாகவே கொடுத்து விடுங்கள்” என்றார். “சரி”, என்று சொல்லிவிட்டு மீண்டும் சந்தைக்குச் சென்றார் அமைச்சர். ஆனால், மனித தலையை இனாமாகக் கொடுக்க முன் வந்தும் கூட யாருமே அதனை வாங்க முன்வரவில்லை. அதுமட்டுமன்றி, அதனைக் கண்ட மக்கள் பயந்துகொண்டு ஓட்டம்பிடித்தனர். மறுபடியும் அமைச்சர் மன்னரை சந்தித்து நிலமையை எடுத்துக் கூறினார். அப்போது அசோகர் அமைச்சரைப் பார்த்து, “அமைச்சரே, பேரரசராக இருக்கும் என் தலைக்கும் இது பொருந்தும் அல்லவா? உயிர் இருக்கும் வரையில்தான் இந்த மனித தலைக்கு மதிப்பு. உயிர் போன பிறகு அதன் மதிப்பும் போய்விடுகிறது. எனவே, மதிப்பு இருக்கும்போதே தலையால் பெரியோர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி அந்தப் புனிதத்தைப் பெற்றுக் கொள்வதுதான் நல்லது” என்றார். அமைச்சரோ உண்மையை உணர்ந்தவராக அமைதி காத்தார்.

திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். நம் அன்னையாம் திருஅவை இஞ்ஞாயிரை ‘மகிழ்வின் ஞாயிறு’ என்று கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைய மூன்று வாசகங்களும் உண்மையான தாழ்ச்சியில்தான் மகிழ்ச்சி பிறக்கின்றது என்ற அருமையானதொரு சிந்தனையை நமக்குத் தருகின்றன. இன்றைய நம் உலகத் தலைவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தாழ்ச்சியைவிட ஆணவம்தான் பெருகி நிற்கின்றது என்பதை நாம் துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது. நம்மைச்சுற்றி நிகழ்ந்து வரும் போர்களும், கலவரங்களும், வன்முறைகளும், தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களும் இவற்றை உண்மை என்று நிரூபிக்கின்றன. பணிவும் தாழ்ச்சியும் இல்லாமல் வாழ்பவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வதுடன் தங்களைச் சார்ந்தவர்களையும் அழித்துவிடுகிறார்கள் என்பதை நம் வரலாற்றின் பக்கங்கள் நமக்குத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அதேவேளையில், நாம் என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் பணிவுதான் நம்மை உயர்த்தும் என்பதற்கு ஆபிரகாம் லிங்கன், காந்தியடிகள், காமராஜர், கக்கன், ஜீவா போன்ற நல்ல தலைவர்களும் தங்களின் வாழ்க்கையால் வாழ்ந்துச் சென்றிருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இயேசு என்னும் மீட்பராகிய அரசர் எவ்வாறு தாழ்மையான மனதுடன் மக்களை விடுவித்து அவர்களை ஆட்சி செய்வார் என்பதை இன்றைய முதல் வாசகம் பதிவு செய்கின்றது. "ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு  செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்" என்று முதல் பகுதி முடிவடைகின்றது. அதேவேளை, தாழ்ச்சி நிறைந்த இத்தகைய பணிகள் வழியாக மெசியா என்னும் அரசர் வழங்கும் விடுதலை அவர்தம் மக்களுக்கு நிலைத்த நீடித்த மகிழ்ச்சியை வழங்கும் என்பதன் அடையாளமாகத்தான், அதனைத் தொடர்ந்து, "ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்" என்ற செய்தியுடன் நிறைவடைகின்றது. பொதுவாகத் திருமணங்கள் மகிழ்வையும் நம்பிக்கையையும் தரக்கூடியவை. தனித்து வாழும் மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் உற்ற துணையைப் பெறுகின்றனர், இதன்வழியாக, அவர்கள் ஒருவருக்கொருவர் நிறைந்த அன்பும், ஆறுதலும், அமைதியும் நிறைமகிழ்வும் பெறுகின்றனர். என்னதான் அவர்கள் தங்கள் தாய்தந்தையருடன் வாழ்ந்தாலும் திருமண பந்தத்தின் வழியாக அவர்கள் ஒருவருக்கொருவர் துணையைத் தேடிக்கொள்ளும்போதுதான் அவர்களின் வாழ்வு முழுமையடைகிறது. அவர்கள் திருமணம் என்னும் அருளடையாளத்தின் வழியாகப் புது வாழ்விற்குள் நுழைகின்றனர். அதேவேளையில் மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளாமல், பணிவுடனும் தாழ்ச்சியுடனும் நடந்துகொள்ளும்போதுதான் அக்குடும்பத்தில் உண்மையான மகிழ்ச்சித் திளைக்கும். அக்குடும்பம் எல்லோராலும் போற்றப்படும். இவர்களிடம் செழித்து வளரும் இம்மகிழ்ச்சி இவர்களுடைய பிள்ளைகளுக்கும் கடத்தப்படும். ஆகவே, இதனையெல்லாம் கருத்தில்கொண்ட வண்ணமாக இங்கே மணமகன் மணமகள் குறித்து பேசப்படுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

இதைத்தான் "எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக" என்று புனித பவுலடியாரும் எடுத்துக்காட்டுகின்றார். இறைவேண்டல் இருக்கும் இடத்தில் தாழ்ச்சியும், தாழ்ச்சி இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.

இன்று நாம் காணும் நற்செய்தி பகுதியானது, திருமுழுக்கு யோவான் பற்றி அன்றைய சீடர்கள் சிலர் கொண்டிருந்த பார்வைகளின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. யோவான் நற்செய்தி உருவான பகுதிகளில் வாழ்ந்தோர் சிலர் திருமுழுக்கு யோவான், காலத்தால் இயேசுவைவிட முந்தியவராக இருந்ததாலும், இயேசுவுக்கே அவர் திருமுழுக்கு வழங்கியதாலும், அவரே இயேசுவைவிடப் பெரியவர் என்றும், அவரே மெசியா என்றும் நம்பியிருந்தனர். இந்த நம்பிக்கை தவறானது என்பதை எடுத்துக்காட்டுவதே இன்றைய நற்செய்தியில் வரும் இப்பகுதியின் நோக்கமாக அமைத்துள்ளது. திருமுழுக்கு யோவான் ஒரு பாலைநில குரலொலி மட்டுமே. அவர் கொடுக்கும் திருமுழுக்கு என்பது வெறும் தண்ணீரே. மேலும், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்று கூறுவதிலிருந்தே அவர் தான் மெசியாவோ, எலியாவோ, இறைவாக்கினாரோ அல்ல என்பதை வெளிப்படையாக மறைக்காமல் ஒத்துக்கொள்கிறார். குறிப்பாக, தண்ணீரால் வழங்கப்படும் திருமுழுக்கைவிட ஆவியால் வழங்கப்படும் திருமுழுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது என்பதையும், அவரே என்றும் வாழும் கடவுள் என்பதையும் பின்வரும் யோவானின் வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன. இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்" “தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால், தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்: (காண்க யோவா 1:29-34)

நான் மெசியா அல்ல :

மெசியா என்றால் விடுதலை தரும் தலைவர் என்று பொருள்படுகிறது. யோவான் இர்க்கான், கலிலேயராகிய யூதா, தெயுதா, மெனாகெம் போன்ற பலரை மக்கள் மெசியா எனக் கருதி ஏமாந்துபோனதால்தான், திருமுழுக்கு யோவான் ஒருவேளை மெசியாவாக இருப்பாரோ என்றெண்ணி அவர்கள் இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர். 'அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்' (காண்க லூக் 3:15) என்று லூக்கா நற்செய்தியாளர் கூறுகின்றார்.

நான் எலியா அல்ல

இன்னொருபக்கம் திருமுழுக்கு யோவான் எலியாவாக இருப்பாரோ என்றும் மக்கள் எண்ணினர். காரணம், பல காரியங்களில் யோவான் எலியாவை ஒத்திருந்தார். எடுத்துக்காட்டாக, இவ்விருவரின் வாழ்வும் போதனைகளும் ஒத்திருந்தன. அவர்கள் அணிந்திருந்த ஆடைகளில் கூட ஒற்றுமை இருந்தது. 'இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்' (காண்க மத் 3:4) என்று நற்செய்தியாளர் மத்தேயு கூறுகின்றார். அதேவேளையில், “அவர் மயிரடர்ந்த மனிதர்; இடையில் தோற்கச்சை அணிந்திருந்தார்” (காண்க 2 அர 1:8) என்று எலியா பற்றியும் இரண்டாவது அரசர் நூலில் கூறப்பட்டுள்ளது. மேலும் யோவான் எலியாவாக இருப்பாரோ என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் எழுந்ததற்குக் காரணம், எலியா இறக்கவில்லை, மாறாக, அவர் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் (காண்க 2 அர 2:11), அவர் திரும்பி வருவார் என்றும் அவர்கள் நம்பினர் (காண்க மலா 3:1;4:5; சீஞா 48:9-11).

நான் இறைவாக்கினர் அல்ல

திருமுழுக்கு யோவான் ஓர் இறைவாக்கினர் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்கத் தேவையில்லை. காரணம், 'மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள்' (காண்க மாற் 11:32) என்று மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். மேலும் இயேசு மக்கள் கூட்டத்திடம் திருமுழுக்கு யோவானைப் பற்றி பேசத்தொடங்கியபோது, "யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றும், "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (காண்க மத் 11:9,11) என்றும், இயேசுவே அவரைக் குறித்துப் புகழ்ந்து பேசுகின்றார். ஆக, இவ்வளவு சிறப்புக்களைக் கொண்டிருந்த திருமுழுக்கு யோவான், ‘ஆமாம், நான்தான் மெசியா’ என்று சொல்வதற்கு அவருக்கு வாய்ப்பு இருந்தும்கூட அவர் அதைச் செய்யவில்லை. மாறாக, தாழ்ச்சிநிறை மனதுடன் இவற்றையெல்லாம் அவர் மறுக்கின்றார்.

யோவான் சொல்லக்கூடிய வார்த்தைகளில் ஒன்றை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அதாவது, “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்று திருமுழுக்கு யோவான் கூறுகின்றார் இல்லையா?. இங்கே 'மிதியடிவாரை' என்ற வார்த்தையை திருமுழுக்கு யோவான் பயன்படுத்துகிறார். அதாவது, மிதியடிவாரை அவிழ்க்கும் பணி அடிமைகளுக்குரிய பணி. கிமு 250-ஆம் ஆண்டில் வாழ்ந்த ஜோசுவா பென் லேவி என்பவர், "ஒரு சீடர் மிதியடிவாரை அவிழ்ப்பது தவிர அடிமைகள் செய்யும் மற்ற எல்லாவிதமான பணிகளையும் அவர் தம் குருவுக்குச் செய்ய வேண்டும்" என்கின்றார். ஆக, ஒரு சீடர் செய்ய கூடாத பணி மிதியடிவாரை அவிழ்ப்பது. அதனைக் கூட செய்ய முன்வரும் யோவான், அதற்குக் கூடத் தனக்குத் தகுதியில்லை என்கின்றார். இதிலிருந்தே அவர் எப்படிப்பட்ட தாழ்மையான மனதுடன் வாழ்ந்தார் என்பதைப் பார்க்கின்றோம்.

ஆகவே, வாய்ப்புகள் கிடைத்துவிட்டது என்பதற்காக நாம் நமது உண்மைத்தன்மையிலிருந்து நெறிபிறழாமல் இருக்கக் கற்றுக்கொள்வோம். நாம் எத்தகையதொரு மேன்மையான பணியில் இருந்தாலும் தாழ்ச்சி என்னும் உயரிய கொடையை ஆடையாக அணிந்துகொண்டு அதில் உண்மையான மகிழ்ச்சி காண்போம். தாழ்ச்சியே மகிழ்ச்சி தரும் என்ற பேருண்மையை நாம் புரிந்துகொண்டால் நமது வாழ்வு என்றும் சிறக்கும். இத்தகைய கொடையை இறைவன் நமக்கு அருளுமாறு இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2023, 08:37