கடவுளின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கும் அன்னை மரியா கடவுளின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கும் அன்னை மரியா  

திருவருகைக் காலம் 4-ஆம் ஞாயிறு : கடவுளின் கோவில் அன்னை மரியா!

ஆண்டவரின் கோவிலாக வாழ்வது அவ்வளவு சுலபம் அல்ல, அது மாபெரும் சவால்களை உள்ளடக்கியுள்ளது என்பதை மரியாவின் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
திருவருகைக் காலம் 4-ஆம் ஞாயிறு : கடவுளின் கோவில் அன்னை மரியா!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. 2 சாமு 7: 1-5, 8b-12, 14-16    II.  உரோ  16: 25-27    III.  லூக் 1: 26-38)

திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய வாசகங்கள் அன்னை மரியாவே ஆண்டவரின் சிறந்த  என்பதையும் அந்தக் கோவில் என்னும் பேழையில் வாழ்பவர்தான் இறைவன் என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. 'அடிவயிற்றில் அறை தந்து, அதிலிருந்து அவதரிக்க அவகாசமும் அன்பும் தந்து, அழகுமிகு அவனியிலே அம்மா என்றழைக்க அருள் தந்த அன்னையே' என்கின்றான் ஒரு கவிஞன். அம்மா என்ற மூன்றெழுத்து மந்திரம்தான் இவ்வுலகையே ஆள்கிறது என்பார்கள். அம்மா என்பது ஒன்று இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சமே அர்த்தமிழந்து போய்விடும். அம்மா என்றால் அழகு, அம்மா என்றால் அறிவு, அம்மா என்றால் ஆளுமை, அம்மா என்றால் ஆற்றல், அம்மா என்றால் வலிமை, அம்மா என்றால் ஆறுதல், அம்மா என்றால் செல்வம், அம்மா என்றால் வீரம், அம்மா என்றால் விவேகம், அம்மா என்றால் அனைத்தும் என்று நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்தப் பெண்ணின் பெயர் சுமித்ராதேவி. அவருக்கு வயது 60. ஜார்க்கண்ட் மாநிலம் ராஜபுரா நகராட்சியில் பெண் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்தவர். அங்கு அவருக்குப் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. அவரின் பாராட்டு விழாவை நகராட்சி நிர்வாகமும், சக ஊழியர்களும் இணைந்து நடத்தினார்கள். விழா தொடங்குவதற்கு அரை மணி நேரம் இருக்கும்போது, சைரன் ஒலிக்க ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பீகார் மாநிலம் சிவாஞ்சலி மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் (collector) மகேந்திரகுமார் இறங்கினார். அவரை அங்கு இருந்தவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு காரில் ரெயில்வே பொறியாளர்
ஒருவர் வந்து இறங்கினார். அவரைத் தொடர்ந்து மருத்துவர் ஒருவரும் வந்திறங்கினார். அவர்களையும் விழா ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று மேடையில் அமர்த்தினர். ஒரே நேரத்தில் இம்மூவரும் விழாவிற்கு வந்திருப்பதை  பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்தனர். "முப்பது ஆண்டுகள் சுமித்ராதேவி இங்கே மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி இருக்கின்றார். தன்மீது எந்தயொரு  புகாரும் இல்லாமல் இந்நாள்வரை சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். அவரைப் போல ஒரு பணியாளர் கிடைப்பது மிகவும் அரிது’’ என்று நகராட்சி நிர்வாகிகள் பலர் அவரை மனம் திறந்து பாராட்டிய வண்ணம் இருந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் மகேந்திரகுமார் பேசத் தொடங்கினார். “கடந்த 30 ஆண்டுகளாக ஒரு பெண்மணி, அதுவும் ஒரு பெண் துப்புரவுப் பணியாளர் தன்னுடைய கடுமையான உழைப்பின் வழியாக, அதில் கிடைத்த சொற்ப சம்பளத்தைக் கொண்டு குடும்பத்தையும் நடத்திக் கொண்டு அதில் தனது பிள்ளைகள் மூவரையும் படிக்கவைத்து சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டுச் சென்றிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்கும் பெருமைக்கு உரியது” என்று குறிப்பிட்டார்.

இப்படி அவர் பீடிகையோடு தொடங்கிய பேச்சை பார்வையாளர்கள் கூட்டம் உன்னிப்பாகக் கேட்கத் தொடங்கியது. அவர் தொடர்ந்து பேசுகையில், “தான் ஒரு துப்புரவுப் பணியாளராக இருந்தாலும் தனக்குக் கொடுத்த பணியை நேசித்து, இரசித்து, ருசித்து செய்திருக்கிறார். கடமை உணர்வுடன் பணியாற்றி இருக்கிறார். தன்னுடைய வசதிகளை எல்லாம் குறைத்துக்கொண்டு, படிப்பு ஒன்றே குறியாக இருக்க வேண்டும் என்றெண்ணி தனது 3 மகன்களையும் படிக்க வைத்தார். அவர்களைச் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று வைராக்கியம் கொண்டவராக செயலாற்றினார். அவரின் எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் குறை வைக்காமல் 3 பேரும் படித்தார்கள். வாழ்க்கையில் உயர்ந்தார்கள். அம்மூவரும் வேறுயாருமல்ல நாங்கள்தான்’’ என்று கூறி பேச்சை நிறுத்தியபோது, அந்த அரங்கமே அதிர்ந்தது. “கடந்த 30 ஆண்டுகளாக இதுவரை வெளியே வராத ஓர் உண்மையை உங்களிடம் சொல்கிறேன் அந்தக் கலெக்டர் நான்தான். இவர்தான் ரெயில்வே பொறியாளர், இவர்தான் மருத்துவர்” என்று பார்வையாளர்களுக்குத் தனது சகோதர்களை அறிமுகப்படுத்தினார். அப்போது அரங்கமே அதிர்ந்துபோய் உணர்ச்சிப் பிழம்பாய் மாறியது. அங்கிருந்த பார்வையாளர்களின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. அங்கு எழுந்த கைதட்டல்கள் அடங்குவதற்குப் பல வினாடிகள் ஆனது. மேலும் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், "செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து பணியாற்றியவர்தான் எங்களின் தாய். துப்புரவுப் பணியாளர் என்றாலும் அது தரக்குறைவான பணி என்றெண்ணி அவர் அதனை உதறித்தள்ளவில்லை. எங்களிடம் அந்த வேலையைப் பற்றி சொன்னதும் நாங்களும் அதனை விட்டுவிடச் சொல்லி அவரை வற்புறுத்தவுமில்லை. அவரும் அந்த வேலையைத் தொடர்ந்தார். எங்களைப் படிக்க வைத்தார். இன்று நாங்கள் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம். அவர் வாழ்க்கையில் எத்தனையோ தியாகங்களை செய்து எங்களைக் கரையேற்றி இருக்கிறார். எங்களின் பார்வையில் அவர் வெறும் தாய் அல்ல, உண்மையிலேயே தெய்வத்தாய்" என்று சொல்லி நிறுத்தியபோது பார்வையாளர்கள் மீண்டும் எழுந்துநின்று கரங்களைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தனக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள், அவர்கள் மூவருமே உயர் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை வெளி உலகத்திற்கு, ஏன் உடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களுக்குக் கூட சொல்லாமல் கடமையில் கண்ணும் கருத்துமாய் இருந்து குடும்பத்தைக் கரையேற்றி இருக்கும் சுமித்திரா தேவியினுடைய அந்த உழைப்பை, எளிமையை, பண்பை, பாசத்தைப் பார்த்து ஒட்டுமொத்த அரங்கமே மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் திளைத்தது.

'ஒரு பொண்ணு நெனச்சா.. இந்த மண்ணு மலரும்...' என்று சொல்வார்கள். பாவத்தில் வாழ்ந்த இப்பூவுலகம், அன்னை மரியா 'ஆம்' என்று கூறிய ஒற்றை வார்தையால் மாறிப்போனது. அதாவது, பாவத்தைப் போக்கி இப்பூவுலகைப் புதுப்பிக்க விரும்பிய இறைவனின் முயற்சிக்கு 'ஆம்' என்ற கூறிய வார்த்தை வழியாக உடன் நின்றவர் நம் அன்னை மரியா. பெண்களுக்கு ஒரு நீதி ஆண்களுக்கு ஒரு நீதி என்று தீர்ப்பு எழுதிய அந்த யூதச் சமுதாயத்தில் தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, கடவுள் பார்த்துக்கொள்வார் என்று உறுதியான மனம் கொண்டவராக, கடவுளுக்கு 'ஆம்' என்று சொன்னார் அன்னை மரியா. 'இது எப்படி நிகழும் நான் கணவனை அறியாத கன்னியாயிற்றே' என்று தனது நியாயமான வாதத்தை கடவுளிடம் எடுத்து வைத்தபோது, “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும் என்றும், உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்று வானதூதர் கொடுத்த விளக்கத்தால் அமைதியடைந்த அன்னை மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று கூறி முழுவதுமாக ஆண்டவரிடம் சரணடைகின்றார். ‘இறைவனே என் வாழ்வின் மையம்’ என்றாகிவிட்ட பிறகு இனி இந்த உலகம் என்னைக் குறித்து என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை, அச்சமில்லை என்றெண்ணியவராக, கடவுளின் கரங்களில் தன்னை முழுவதுமாக ஒப்படைக்கிறார் அன்னை மரியா. இது நாம் அனைவரும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினையாக அமைந்துள்ளது.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, “பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என்று கூறி ஆண்டவருக்கு ஒரு கோவில் இல்லாதது குறித்து மிகவும் வருந்துகின்றார். ஆனால், ஆண்டவர் நாத்தானிடம் மறுமொழியாக, ‘நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாரா தாவீது? என்று எதிர்க்கேள்வி எழுப்புகின்றார். இவ்வதிகாரத்தின் ஆறாவது வசனம் இன்றைய முதல் வாசகத்தில் கொடுக்கப்படவில்லை. அவ்வசனத்தில், “இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்தது முதல் இந்நாள் வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை; மாறாக, ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடமாய் இருந்தது. இஸ்ரயேலர் அனைவரும் சென்றவிடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது ‘எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாததேன்?’ என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா? என்று கடவுள் கேள்வி எழுப்புவதாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால், தான் தங்குவதற்குத் தனக்கு சிறந்ததொரு கோவில் வேண்டும் என்பதைவிட, தன் மக்கள் தங்களுக்கான இல்லங்களை எழுப்பிக்கொண்டு நலமுடன் வாழவேண்டும் என்பதையே கடவுள் விரும்புகின்றார். அதனால்தால், ‘ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்’ என்று தாவீதிடம் கூறுமாறு, கடவுள் நாத்தானிடம் அறிவுறுத்துவதைப் பார்க்கின்றோம். இங்கே அன்னை மரியாதான் அவ்வில்லம் அல்லது கோவில் என்பதையும் அதில் நிரந்தரமாகத் தங்கியிருந்து அரசாளப்போகிறவர் தன் ஒரே மகன் இயேசு என்பதையும் மறைமுகமாகத் தெரிவிக்கின்றார் கடவுள்.

இதன் காரணமாகவே, "உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.' எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான்” என்றும், “என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!’ என்றும் கடவுள் உரைக்கின்றார். இங்கே கடவுள் உரைத்தவாறு தாவீதின் மகன் சாலமோன் ஆண்டவருக்கு அழகியதொரு கோவில் எழுப்பியபோதிலும், அழியாத கோவில் அன்னை மரியா என்பதையும் அதில் நிலைத்து நீடித்து வாழப்போகிறவர் இயேசு என்னும் ஒப்பற்ற அரசர் என்பதையும் நாம் நன்கு உணர்ந்துகொள்ள முடிகின்றது. மேலும் நமதாண்டவர் இயேசு தாவீதின் வம்சத்தில் உதித்தெழும் இறைமகன் என்பதையும் நாம் அறிவோம். இன்றைய நற்செய்தியில் அன்னை மரியாவுக்கு வானதூதர் வழங்கு செய்தியில், “இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்று கூறுகின்றார். ஆக, தாவீதின் உண்மையான மகனாக இங்கே இயேசு குறித்துக் காட்டப்படுகின்றார். மேலும், பார்வையற்ற பர்த்திமேயு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று உரக்கக் கத்தி இயேசுவை அழைப்பதைக் காண்கின்றோம் (காண்க மாற் 10:47) அவ்வாறே, வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழையும்போது, “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர் (காண்க மத் 21:9) என்று வாசிக்கின்றோம்.

எனவே, இந்தத் தாவீதின் மகனைத் தன் கருவில் தாங்குவதுடன் என்றென்றும் அவர் தன்னில் வாழும் கோவிலாகவும் மாறுகின்றார் அன்னை மரியா. கடவுள் மரியாவைத் திடீரென்று அழைத்து இயேசுவின் தாயாக இகமதில் வாழப் பணிக்கவில்லை. மாறாக, படைப்பின் தொடக்கத்திலேயே அவரை முன்குறித்து வைத்தார் (காண்க தொநூ 3:15). பாவம் என்னும் கொடிய சாத்தானை வெல்லும் பேராயுதமாக, இவுலகை மீட்கும் திட்டத்தில் தன் உடன் பங்காளராக, துணை மீட்பராக அன்னை மரியாவைக் கடவுள் தெரிந்துகொள்கின்றார். தொடக்கத்திலேயே இவ்வுலகிற்குக் கடவுளால் அறிமுகம் செய்து வைக்கப்படும் மரியா, மறுவுலகிலும் என்றென்றும் ஆட்சி செய்யும் ஆண்டவரின் அழியாதக் கோவிலாக, கடவுளின் பேழையாக எடுத்துக்காட்டப்படுகின்றார் (திவெ 11:19).

அதேவேளையில், ஆண்டவரின் கோவிலாக வாழ்வதென்பது அவ்வளவு சுலபம் அல்ல, மாறாக, அது மாபெரும் சவால்களை உள்ளடக்கியுள்ளது என்பதையும் அன்னை மரியாவின் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. சோதனைகளை வெல்லாமல் சாதனைகளை கைகொள்ள முடியாது என்பதும், சிகரம் ஏறாமல் சிம்மாசனத்தில் அமர முடியாது என்பதும் நம் அன்னை மரியாவிடமிருந்து நாம் கற்றறிந்துகொள்ள வேண்டிய உன்னதமான பாடங்களாகும். 'ஆகட்டும்' என்று அன்னை மரியா உரைத்ததில் ஆயிரம் சவால்கள் அடங்கியிருந்தன. அவற்றை வென்று காட்டுவதில் அவர் ஏழு வியாகுலங்களைத் தாங்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு வியாகுலமும் கொடிய வலி நிறைந்ததாய் இருந்தது. அவற்றை வென்று காட்டுவதில் அவர் இயேசுவுடன் இணைந்து துன்புற்றார். இதனால்தான் என்றென்றும் வாழும் இயேசு என்னும் ஒப்புயர்வற்ற அரசரின் அன்னையாக, மூவொரு கடவுளின் தாயாக, விண்ணக மண்ணக அரசியாக அவர் உயர்வு பெறுகின்றார். இவ்வுலகத்தை ஒரு சொல்லால் படைத்த மாபெரும் வலிமை பொருந்திய கடவுள், யாருடைய துணையுமின்றி அதனை மீட்கும் திறனிருந்தும் கூட, தனது படைப்புப் பொருளாகிய ஒரு பெண்ணின் துணையுடன் இவ்வுலகை மீட்க நினைத்தது மாபெரும் வியப்பன்றோ! அப்படிப்பட்ட அன்னையின் பிள்ளைகளாக நாம் இருப்பது நமக்கெல்லாம் பெருமையன்றோ! அந்த அன்னையின் வழியில் நாமும் இறைவனின் கோவில்களாக ஒளிர்வோம். அதற்கான அருளுக்காக ஆண்டவரிடம் அன்னை மரியா வழியாக இறையருள் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2023, 12:45