பாலஸ்தீனர்கள் மீதான உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. அறிக்கை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
West Bank பகுதியில் இஸ்ராயேல் துருப்புக்களால் காரணமற்ற எண்ணற்ற கைதுகளும், தடுப்புக்காவல்களும், சித்ரவதைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஐ.நா.வின் அண்மை அறிக்கை தெரிவிக்கின்றது.
வெஸ்ட் பேங்க் பகுதியில் குடியமர்த்தப்பட்டவர்களாலும், இஸ்ராயேல் இராணுவ துருப்புகளாலும், அங்குள்ள பாலஸ்தீனர்கள் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து எடுத்துரைக்கும் இவ்வறிக்கை, பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் வன்முறைகளின் தொடர் அச்சுறுத்தலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கிறது.
ஜனவரி முதல் தேதியிலிருந்து டிசம்பர் 27ஆம் தேதி வரை இஸ்ராயேல் இராணுவத்தால் நேரடியாக 492 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறும் இவ்வறிக்கை, வெஸ்ட் பேங் பகுதியில் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பம் ஒன்றை முன்வைத்துள்ளது.
இதற்கிடையே, குழந்தைகளுக்கான ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வெஸ்ட் பேங் மற்றும் கிழக்கு எருசலேமில் வாழும் குழந்தைகளுக்கு இவ்வாண்டு மிகவும் கொடுமையான ஆண்டாக இருந்ததாகவும், கடந்த 12 வாரங்களில் மட்டும் 83 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது 2022ஆம் ஆண்டு முழுவதும் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் இரண்டு மடங்கிற்கு மேல் எனவும் கவலையை வெளியிட்டுள்ளது.
உயிரிழப்புக்கள் தவிர, 576 குழந்தைகள் காயமுற்றுள்ளதாகவும், பலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் யுனிசெப் அமைப்பு, இவ்வாண்டு துவக்கத்திலிருந்து மோதல்கள் தொடர்புடைய வன்முறைகளால் 124 பாலஸ்தீனிய குழந்தைகளும் 6 இஸ்ராயேல் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இதற்கிடையே, இஸ்ரயேல்-லெபனோன் எல்லைப் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதால் தென் லெபனோன் பகுதியின் கிறிஸ்தவர்கள் 90 விழுக்காட்டினர் வரை வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்