ஹைட்டியின் Port-au-Prince பகுதி ஹைட்டியின் Port-au-Prince பகுதி 

ஹைட்டியில் ஆறு அருள்சகோதரிகள் கடத்தப்பட்டுள்ளனர்

“கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்; கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரை நோக்கி மன்றாடுகின்றேன்”

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் பகுதியில் பேருந்தில் பயணித்த ஆறு கத்தோலிக்க அருள்சகோதரிகள் வெள்ளிக்கிழமை கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர் என்றும், கடத்தப்பட்ட அருள்சகோதரிகள், கனடா நாட்டு புனித அன்னாள் சபையைச் சார்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் Morachel Bonhomme.

சனவரி 19 வெள்ளிக்கிழமை, ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் பகுதியில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த அருள்சகோதரிகள் ஆறுபேர் கடந்தப்பட்ட நிலையில் அவர்களுடன் பேருந்தில் பயணித்த வேறு சில பயணிகளும் கடத்தப்பட்டுள்ளதாகத் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார் CHR (Haitian Conference of the Religious) எனப்படும் கத்தோலிக்க திருஅவையுடன் இணைக்கப்பட்ட ஹைட்டி துறவற அமைப்பின் தலைவர் Morachel Bonhomme.

அண்மையில் ஹைட்டி பகுதியில் மனித கடத்தல்கள் அதிகரித்து வருவதாக எடுத்துரைத்துள்ள Bonhomme அவர்கள், இதனால் ஹைட்டி பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் அச்சம் மற்றும் கவலையினால் நிறைந்துள்ளதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த துயரமான நிகழ்விலிருந்து மீண்டு வர தூய அன்னாள் சபை அருள்சகோதரிகளுக்கு தூய ஆவியின் வல்லமையும் ஆற்றலும் கிடைக்கப்பெற செபிப்போம் என்றும், உலக மக்கள் அனைவரும் செபத்தால் ஒன்றிணைந்து இந்த கடினமான சூழலைச் சமாளிக்க அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் Bonhomme.

“கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்; கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரை நோக்கி மன்றாடுகின்றேன்” என்ற திருப்பாடல் வரிகளை குறிப்பிட்டு துன்பமான இச்சூழலில் ஹைட்டி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் Bonhomme.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2024, 08:41