விடை தேடும் வினாக்கள் – ஏன் என்னைத் தேடினீர்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இன்றைய நம் விடை தேடும் வினாக்கள் நிகழ்ச்சியில், இயேசு முதன்முதலாக கூறியதாக விவிலியத்தில் நாம் காணும் வார்த்தைகள் குறித்துக் காண்போம். இயேசுவுக்கு 12 வயதாக இருக்கும்போது அவரின் பெற்றோர், ஒவ்வோர் ஆண்டும் செய்வதுபோல், பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குச் செல்கிறர்கள். விழா முடிந்ததும் நாசரேத்துக்குத் திரும்பியபோது, இயேசு அவர்களுடன் திரும்பவில்லை. உறவினர்களுடன் கூட்டத்தில் அவர் திரும்பிக் கொண்டிருப்பார் என பெற்றோர் எண்ணியதால் அவரைத் தேடவும் இல்லை. ஆனால் ஒரு நாள் பயணத்திற்குப்பின் ஓய்வெடுக்க வண்டிகள் நின்றபோதுதான் உண்மை அந்த பெற்றோருக்கு தெரிய வருகிறது. உடனேயே திரும்பத் தேடிவருகின்றனர். அதாவது, மீண்டும் எருசலேம் நோக்கிய ஒரு நாள் பயணம். எருசலேம் வந்து தேடுதல், என மூன்று நாட்களுக்குப்பின் இயேசுவை எருசலேம் கோவிலில் காண்கின்றனர். அதுவும் எப்படி? அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்ததையும், அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயிருந்ததையும் காண்கின்றனர். இப்போதுதான் இயேசுவின் முதல் கேள்வி இடம்பெறுகிறது.
இந்த நிகழ்வின் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போம். கலிலேயப் பகுதியான நாசரேத்தில், அதாவது எருசலேமுக்கு வடக்கே வாழ்ந்த இவர்கள் எருசலேமுக்கு வர சமாரியாவைச் சுற்றி வரவேண்டுமானால், 80 மைல் கடந்து வரவேண்டும். இதை நடந்து சென்று கடக்க வேண்டுமானால், எப்படியும் 4 நாட்கள் ஆகும்.
ஆண்டில் மூன்று முறை உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும், பாஸ்கா எனப்படும் புளிப்பற்ற அப்ப விழாவிலும், வாரங்கள் விழா என்னும் அறுவடை விழாவிலும், உன் களத்தின் பலனையும் ஆலையின் பலனையும் சேகரித்தபின் இடம்பெறும் கூடார விழாவிலும் வரவேண்டும் என இறைவன் கட்டளையிட்டுள்ளதை பழைய ஏற்பாட்டில் காணலாம் (வி.ப. 23:14–17; 34:22–23; இ.ச. 16:16).
எகிப்தில் 430 ஆண்டுகள் அடிமையாய் இருந்து பின்னர் விடுதலைப் பெற்று விடுதலைப் பயணத்தைத் துவங்கியதை நினைவுகூரும் புளியாத அப்பத்திருவிழாவுக்கு, அதாவது பாஸ்கா விழாவுக்குச் சென்றபோதுதான் இது நடக்கிறது. 7 நாடகள் கொண்டாடப்படுவது இந்த பாஸ்காப் பெருவிழா. 12 வயது வந்துவிடால் ஒரு பெண்ணையும், 13 வயது என்றால் ஓர் ஆணையும் வயது வந்தவர் என கணிக்கிறது யூத சமூகம். ஆண்டொன்றுக்கு மூன்று முறை எருசலேமுக்கு வரவேண்டும் என கடவுளின் கட்டளை இருப்பினும், ஏழைகளால் அவ்வாறு வரமுடியாத நிலையில், ஆண்டிற்கு ஒருமுறையாவது வந்துவிடவேண்டும் என ஏழைகள் எண்ணியதால், அவர்கள் அனைவரும் பாஸ்கா விழாவிற்கே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். இத்தகைய ஒரு விழாவில்தான் இயேசு காணாமல் போகிறார். 13 வயதில் கடவுளின் அனைத்துக் கட்டளைகளையும் கடைபிடிக்கவேண்டிய கடமையைக் கொண்டுள்ள ஆண்மகவாகிய யூத புதல்வன் இயேசு, தன்னை அதற்காக தயாரிக்கும் நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். லூக்கா நற்செய்தியாளர் இந்த எருசலேம் பயணம் குறித்து கூறத் துவங்குவது 2ஆம் பிரிவு வசனம் 41ல் என்றால், வசனம் 40லேயே நம்மிடம் கூறிவிடுகிறார், ’குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது’ என்று. அதாவது, எருசலேமில் நடக்கவிருப்பதற்கு, ஒரே வரியில் முன்னுரைக் கொடுத்துவிடுகிறார் நற்செய்தியாளர் லூக்கா. இயேசு இங்கு தன் வயதிற்கு மீறிய ஞானத்தைக் கொண்டிருந்ததைப் பார்க்கிறோம். போதகர்களிடமிருந்து இயேசு கற்றுக்கொள்வதும், அவர்கள் இவரிடமிருந்து கற்றுக்கொள்வதும் இங்கு தெரிகிறது.
அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்று கேட்கும்போது, இயேசு அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று பதிலுடன் கூடிய மறு கேள்வியைக் கேட்கிறார். நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிக்க வேண்டும் என்ற இந்த வார்த்தையின், ‘வேண்டும்’ என்பது ஒரு கட்டாயத்தைப் பற்றிக் கூறுவதை நோக்கினோமானால், அவர் வாழ்வின் இன்னும் சிலபகுதிகளும் நம் நினைவுக்கு வருகின்றன. “நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” (லூக் 4:43) “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (லூக் 9:22; 17:25; 24:7, 26), இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே! (லூக் 13:33) “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” (லூக் 19:5), ‘கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்’ என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும் (லூக் 22:37), “மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” (லூக் 24:44) என ஒரு கட்டாயத்தின் இணையாக இங்கு, வேண்டும் என்பது பயன்படுத்தப்பட்டிருப்பதுபோல், என் தந்தையின் அலுவல்களில் நான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, தந்தையின் அலுவல்களில் ஈடுபடவேண்டியது, அவரின் கட்டளைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டியது ஒரு மகனின் கடமை என்கிறார். இங்கு, இதனைத் தொடர்ந்து நற்செய்தியாளர் கூறும் வார்த்தைகள் நமக்கு புரியாத புதிராக உள்ளன. இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை யோசேப்பும் மரியாவும் புரிந்துகொள்ளவில்லை என்கிறார் லூக்கா. நமக்கு குழப்பம் இயல்பாகவே வருகிறது. ஏனெனில், இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்(லூக் 2:11) என இடையர்களுக்கு ஆண்டவரின் தூதர் அறிவித்ததை அந்த இடையர்கள் அப்படியே வந்து மரியாவிடமும் யோசேப்பிடமும் தெரிவித்ததாக விவிலியமே கூறுகிறது. அதைத்தான் 12 வயது இயேசு இங்கு மீண்டும் உறுதிப்படுத்துகிறார். உம் குழந்தை கடவுளின்மகன், இறைமகன் எனப்படும் என கபிரியேல் தூதர் ஏற்கனவே கூறிவிட்டார். என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் என தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத்து கூறியிருந்தார். எருசலேம் கோவிலில் சந்தித்த சிமியோன், ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா, மூன்று ஞானியர் ஆகியோரின் சாட்சியங்கள் என பலவிருந்தும், இவை அவர்களுக்கு தெரிந்திருந்தும் இயேசுவின் பெற்றோர் இயேசு கூறியதை புரிந்துகொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். இயேசுவின் வாழ்வில் நடந்த வியத்தகு செயல்கள் அனைத்தையும் மனதில் இருத்தி தியானித்து வந்த அன்னை மரியாகூட, 12 வயதிலேயே இயேசு தன் தந்தையின் பணிக்கென தன்னை வெளிப்படுத்தி வெளியேறிவிடுவார் என எதிர்பார்க்கவில்லை என்றுகூட நாம் சொல்லலாம். ஆனால், அதற்கு அடுத்துவரும் வரிகள் ஒரு பெரும் திருப்புமுனையாக வருகின்றன. பின்பு, அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்(லூக் 2:51,52) என வாசிப்பது எதிர்பார்க்காதது.
யூதர்களைப் பொறுத்தவரையில் கடவுளை தங்கள் தந்தை (இ.ச. 32:6; எசா. 63:16; 64:8), என்று உரைப்பார்களேத் தவிர, எவரும் என் தந்தை என்று உரைக்கத் துணிந்ததில்லை. ஆனால், இயேசு இங்கு என் தந்தை என துணிவுடன் கூறுகிறார். அதுவும் 12 வயதில், அதுவும், போதகர்கள் நடுவில் இவ்வார்த்தைகளைக் கூறுகிறார். கடவுளை தந்தை எனக் கூறியதால் யூதர்கள் கோபமுற்றதை யோவான் நற்செய்தி 5ஆம் பிரிவில் காண்கிறோம். ஓய்வு நாளில் குணமளித்ததைப் பற்றிய விவாதத்தில் இயேசு யூதர்களிடம், “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்” என்றார். இவ்வாறு, அவர் ஓய்வு நாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள் (யோவா 5:17,18) என வாசிக்கிறோம். நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்(யோவா 10:30) என்றுகூட துணிந்து கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறு, இறைமகன் தான் என்பதை 12 வயதிலேயே அறிந்திருந்த இயேசு, அதேவேளை மனுமகனாகவும் இருந்தார். அதனால்தான் 30 வயதுவரை தன் பெற்றோருடன் ஒரு சாதாரண வாழ்க்கையை மேற்கொள்கிறார். இதனால்தான் இந்த எருசலேம் கோவில் நிகழ்ச்சிக்குப்பின் நாம், அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார் என்ற வாக்கியத்தை வாசிக்கிறோம். இறைமகனாகவும் மனுமகனாகவும் இருந்த இயேசு, தன் இருவித கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றுவதைத்தான் இன்று நாம் எடுத்துக்கொண்ட நற்செய்திப் பகுதி எடுத்துக்காட்டுகிறது. நாசரேத்துக்கு திரும்பவேண்டிய நேரத்தில் எருசலேமிலேயே தங்கிவிடுகிறார். தன்னை வெளிப்படுத்திய இவர், தன் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டு எருசலேமிலேயே தங்கிவிடுவார் என எண்ணும்போது, அமைதியாக நாசரேத்துக்கு தன் பெற்றோருடன் சென்று விடுகிறார். இங்கு நாம் ஒரு சிறு எடுத்துக்காட்டை முன்வைக்கலாம். பிரபல கால்பந்து வீரர் ஒருவர் தன் குழந்தைகளுடன் மைதானத்தில் இறங்கி அவர்களோடு விளையாடினால், அந்த விளையாட்டு எப்படியிருக்கும்? குழந்தைகளை விட வேகமாக ஓடக்கூடிய அவர், பல விளையாட்டு நுட்பங்களைத் தெரிந்த அவர், அதையெல்லாம் பயன்படுத்தி வெற்றியடைந்துக் கொண்டேயிருப்பார் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. அவர்களுக்கு இயைந்த வகையில் தன்னையே சிறுமையாக்கி அவர்களுக்கு ஏற்றாற்போல் மெதுவாகத்தான் விளையாடுவார். அதைத்தான், அனைத்தும் அறிந்த இறைமகன், மனுமகன் என்ற நிலையில் ஆற்றுகிறார் என நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இப்போது, இந்த இயேசுவின் நிகழ்வு, இயேசுவின் இன்றைய கேள்வி, அதாவது, ஏன் என்னைத் தேடினீர்கள்? என்பது நம்மிடம் என்னச் சொல்ல வருகிறது? என பார்ப்போம்.
ஏன் நாம் இயேசுவைத் தேடுகிறோம்?. இயேசுவை திருவிழாக்களில், அதாவது வெளியடையாளக் கொண்டாட்டங்களில் தொலைத்து விட்டுத் தேடுகிறோமா?, அல்லது நம் வாழ்விலிருந்தே தொலைத்து விட்டுத் தேடுகிறோமா?
நம் தேவைகள் நிறைவேற்றப்படவும், அதற்காக அவரிடம் பேரம்பேசவும் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறோமா_?
நானே ஒளி என்றவரை, நம் வாழ்வை ஒளிர்விக்கத் தேடுகிறோமா? அல்லது, இருண்ட இந்த உலகில் நம்பிக்கையின் ஒளியாக அவரைத் தேடுகின்றோமா?,
நானே வழி என்றவரை, நம் வாழ்வின் பாதையைக் காட்டத் தேடுகிறோமா?,
நம் வாழ்வின் உண்மையை கண்டுகொள்ள அவரைத் தேடுகிறோமா?,
மரணத் தறுவாயில் மட்டும் அவரைத் தேடுபவர்களாக இருக்கிறோமா?,
பிறருக்காக இறந்த அவரை, நாம் பிறருக்காக வாழவேண்டியதை சொல்லித்தர அவரைத் தேடுகிறோமா?.
ஏன் என்னைத் தேடினீர்கள்? என்று நம்மைப் பார்த்து இன்று கேட்கும் இயேசு, திருமுழுக்கு யோவானின் சீடர்களை நோக்கி, என்ன தேடுகிறீர்கள்? என கேட்பதை வரும் வார, நம் விடை தேடும் வினாக்கள் நிகழ்ச்சியில் நோக்குவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்