தடம் தந்த தகைமை : பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சவுல் அரசராகி ஓராண்டு ஆனபின், இஸ்ரயேல் மீது இரண்டாம் ஆண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது சவுல் தமக்காக இஸ்ரயேலிருந்து மூவாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டார். மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும் சவுலுடன் இரண்டாயிரம் பேர் இருந்தனர். பென்யமினைச் சார்ந்த கிபயாவில் யோனாத்துடன் ஆயிரம் பேர் இருந்தனர். எஞ்சிய மக்களை அவர் அவரவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
யோனத்தான் கெபாவில் எல்லைக் காவலில் இருந்த பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினார். பெலிஸ்திய மக்கள் அதைக் கேள்வியுற்றனர். ‘எபிரேயரும் இதைக் கேட்கட்டும்’ என்று நாடெங்கும் சவுல் எக்காளம் ஊதுவித்தார். சவுல் பெலிஸ்தியரின் எல்லைக் காவலரை வெட்டி வீழ்த்தியதையும் அதனால் பெலிஸ்தியருக்கு இஸ்ரயேல்மீது கடும்பகை ஏற்பட்டதையும் அறிந்து இஸ்ரயேலர் அனைவரும் சவுலோடு சேர்ந்து கொண்டு கில்காலுக்குச் சென்றனர்.
பெலிஸ்தியர் இஸ்ரயேலோடு போரிட முப்பதாயிரம் தேர்களோடும் ஆறாயிரம் குதிரை வீரர்களோடும் கடற்கரை மணலளவு வீரர்களோடும் திரண்டு வந்து பெத்தேலுக்குக் கிழக்கே மிக்மாசில் பாளையம் இறங்கினார்கள். இஸ்ரயேலர் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் இன்னலுற்று குகைகளிலும், புதர்களிலும், பாறைகளிலும், கல்லறைகளிலும், பள்ளங்களிலும் ஒளிந்து கொண்டனர். எபிரேயர் சிலர் யோர்தனைக் கடந்து காத்து, கிலயாது நாடுகளுக்குச் சென்றனர். சவுல் இன்னும் கில்காலில் இருந்தார். மக்கள் அனைவரும் நடுங்கிக் கொண்டே அவரைப் பின்சென்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்