சவுலைக் கண்டிக்கும் சாமுவேல் சவுலைக் கண்டிக்கும் சாமுவேல்  

தடம் தந்த தகைமை : ஆண்டவரின் கட்டளையை புறக்கணித்த சவுல்!

சாமுவேல் சவுலை நோக்கி, “நீர் அறிவீனமாய்ச் செயல்பட்டீர். உம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படி நீர் நடக்கவில்லை” என்றார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சவுல் சாமுவேல் குறிப்பிட்ட படி ஏழு நாள்கள் காத்திருந்தார். ஆனால், சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஆகவே, மக்கள் அவரைவிட்டுச் சிதறத் தொடங்கினர். அப்போது சவுல் “எரிபலியையும் நல்லுறவுப் பலியையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று சொல்லி அவ்வாறே எரிபலி செலுத்தினார். அவர் எரிபலி செலுத்தி முடிந்தவேளை சாமுவேல் அங்கு வந்தார். சவுல் அவரை சந்திக்கச் சென்று வரவேற்றார்.

சாமுவேல், “நீர் என்ன செய்தீர்? என்று கேட்க அதற்கு சவுல், “மக்கள் என்னிடமிருந்து சிதறிப் போவதைக் கண்டேன். நீரும் குறித்த காலத்தில் வரவில்லை. பெலிஸ்தியரும் மிக்ஸ்பாவில் ஒன்று திரண்டு கொண்டிருந்தார்கள். அப்பொழுது ‘பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு இறங்கி வருவர்; நானோ இன்னும் ஆண்டவரின் தயவை நாடவில்லை’ என்று உணர்ந்ததால்,  நான் எரிபலி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானேன்.” என்று கூறினார்.

சாமுவேல் சவுலை நோக்கி, “நீர் அறிவீனமாய்ச் செயல்பட்டீர். உம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படி நீர் நடக்கவில்லை. இல்லையேல் ஆண்டவர் இஸ்ரயேல் மீது உமது அரசை என்றென்றும் நிறுவியிருந்திருப்பார். ஆனால், உமது அரசு நிலைக்காது. ஆண்டவர் தம் மனதிற்கு ஏற்ப ஒருவரைத் தமக்கெனத்தேடி அவரையே தம் மக்களின் தலைவராய் நியமித்துள்ளார். ஏனெனில், ஆண்டவர் கட்டளையின் படி நீர் நடக்கவில்லை” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2024, 13:07