தடம் தந்த தகைமை – அரசன் ஆகாபு மரணமடைதல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் இராமோத்து-கிலயாதை நோக்கிச் சென்றனர். இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, “நான் மாறுவேடம் பூண்டு போர்க்களத்திற்கு வருவேன். ஆனால், நீர் அரச உடைகளை அணிந்துகொள்ளும்” என்று சொன்னான். அவ்வாறே, இஸ்ரயேலின் அரசன் மாறுவேடம் பூண்டு போர்க்களம் புகுந்தான். இப்படியிருக்க, சிரியாவின் மன்னன் தன் முப்பத்திரண்டு தேர்ப்படைத் தலைவர்களை நோக்கி, “நீங்கள் சிறியோர், பெரியோர் யாரோடும் போரிடாமல் இஸ்ரயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்” என்று கட்டளையிட்டிருந்தான். ஆதலால், தேர்ப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டவுடன், இவன்தான் இஸ்ரயேலின் அரசன் என்று நினைத்து அவனைத் தாக்குவதற்காக அவன்மேல் பாய்ந்தார்கள். அப்பொழுது யோசபாத்து பெரும் கூக்குரலிட்டான்.
அதனால், அவன் இஸ்ரயேலின் அரசன் இல்லை என்று கண்டுகொண்ட தேர்ப்படைத் தலைவர்கள் அவனை மேலும் தொடரவில்லை. ஆயினும், ஒருவன் வில்லை நாணேற்றிச் சரியாய்க் குறிவைக்காது அம்பை எய்தான். அது இஸ்ரயேல் அரசனது கவசத்தின் இடைவெளியே பாய்ந்தது. எனவே, அவன் தன் தேரோட்டியை நோக்கி, “தேரைத் திருப்பிப் போர் முனையினின்று வெளியே என்னைக் கொண்டு போ; ஏனெனில், நான் காயமுற்றிருக்கிறேன்” என்றான். அன்று முழுவதும் போர் தீவிரமாய் இருந்ததால், தேரிலேயே சிரியருக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டான். அவனது காயத்திலிருந்து இரத்தம் வழிந்து தேரின் அடித்தளத்தை நனைத்தது. அன்று மாலையே அவன் இறந்தான். கதிரவன் மறைந்த நேரத்தில் ‘ஒவ்வொருவரும் அவரவர் தம் நாட்டுக்கும், தம் நகருக்கும் திரும்பட்டும்’ என்ற குரல் படை முழுவதும் எதிரொலித்தது. இவ்வாறு, அரசன் இறந்து, சமாரியாவிற்குக் கொண்டு வரப்பட்டான். சமாரியாவில் அவனை அடக்கம் செய்தனர். சமாரியாக் குளத்தில் அவனது தேரையும் கவசத்தையும் கழுவினர். ஆண்டவரின் வாக்கின்படியே நாய்கள் அவனது இரத்தத்தை நக்கின. ஆகாபின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் அவன் மாளிகை கட்டியதும், பல்வேறு நகர்கள் எழுப்பியதும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? ஆகாபு தன் மூதாதையரோடு துயில் கொண்ட பின், அவன் மகன் அகசியா அரியணை ஏறினான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்