கருப்பு நாசரேன் திருவிழாவில் பங்குபெற்ற பக்தர்களின் ஒரு பகுதியினர் (கோப்புப்படம்) கருப்பு நாசரேன் திருவிழாவில் பங்குபெற்ற பக்தர்களின் ஒரு பகுதியினர் (கோப்புப்படம்)   (AFP or licensors)

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற கருப்பு நாசரேன் பெருவிழா

மெக்சிகன் சிற்பி ஒருவர் 16 -ஆம் நூற்றாண்டில் வடித்த கறுப்பு நாசரேன் சுரூபத்தை ஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்கள் 1606-இல் பிலிப்பீன்ஸ் நாட்டிற்குக் கொண்டு வந்தனர். திருத்தந்தை பத்தாம் இன்னோசென்ட் இச்சுரூபத்தை வழிபடுவதற்கு அனுமதி வழங்கினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 9, இச்செவ்வாயன்று, பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற கருப்பு நாசரேன் பெருவிழாவில் ஏறத்தாழ 20 இலட்சம் மக்கள் பங்கேற்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும், ஜனவரி 9-ஆம் தேதி சிறப்பிக்கப்படும் கருப்பு நாசரேன் திருவிழாவில் இவ்வாண்டு வழக்கத்திற்கும் மேலாக பக்தர்கள் திரண்டு வந்ததாகவும், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, அதாவது, 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு, பாரம்பரிய ஊர்வலம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்த இவ்விழாவின் செய்தித் தொடர்பாளர் அருள்தந்தை Hans Magdurulang,  அவர்கள், அதிகாலையில் இருந்தே பதிமூன்று இலட்சத்திற்கும் அதிகமான விசுவாசிகள் இங்கே குழுமியிருந்தனர் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் மிதியடியின்றி நடைபயணமாக வந்த திருப்பயணிகள் என்றும் கூறினார்.

மெக்சிகன் சிற்பி ஒருவர் 16 -ஆம் நூற்றாண்டில் வடித்த கறுப்பு நாசரேன் சுரூபத்தை ஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்கள் 1606-ஆம் ஆண்டு பிலிப்பீன்ஸ் நாட்டிற்குக் கொண்டு வந்தனர் என்றும், திருத்தந்தை பத்தாம் இன்னோசென்ட் இச்சுரூபத்தை வழிபடுவதற்கு அனுமதி வழங்கினார் என்றும் இப்பெருவிழா பற்றிய வரலாறுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும், இயேசு கல்வாரிக்குச் சிலுவையைச் சுமந்துகொண்டு செல்வதாக வடிக்கப்பட்டுள்ள இச்சுரூபம், பெரும் வல்லமை கொண்டதாக நம்பப்படுவதுடன், இச்சுரூபம் இரண்டு முறை தீ விபத்திலிருந்தும், இரண்டு நிலநடுக்கங்களிலிருந்தும் மற்றும் ஏராளமான சூறாவளி மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் இருந்தும் தப்பியுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2024, 15:50