இந்தியாவின் கொல்கத்தாவில் மறுவடிவமைக்கப்பட்ட புனிதக் கதவு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையின் யூபிலி ஆண்டு 2025-ஐக் கருத்தில் கொண்டு, கிழக்கு இந்திய நகரமான கொல்கத்தாவின் உயர் மறைமாவட்டம் புனித செபமாலை அன்னை பேராலயத்தில் புதிதாகச் சீரமைக்கப்பட்ட புனிதக் கதவை மக்கள் பார்வைக்கென திறக்கும் நிகழ்வை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 24, ஞாயிறன்று, புனிதக் கதவினை மக்கள் பார்வைக்கெனத் திறக்கும் இந்நிகழ்வு கொல்கத்தாவின் பேராயர் Thomas D’Souza அவர்களின் தலைமையில் நடைபெற்றது என்றும், இந்நிகழ்வில், சிறப்பாக, மேற்கு வங்காளத்தின் முதல்வர் Mamata Banerjee அவர்களும் கலந்துகொண்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
கிறிஸ்மஸ் குடிலைத் திறந்து வைத்து, குழந்தை இயேசுவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு, பேராயர் D’Souza மற்றும் முதல்வர் Banerjee ஆகியோர் ரிப்பன் வெட்டி புதிய புனிதக் கதவை மக்கள் பார்வைக்கெனத் திறந்து வைத்தனர் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட இப்பேராலயத்தின் வட்டார அதிபர் அருள்பணியாளர் Franklin Menezes அவர்கள், மோதல்கள் மற்றும் வன்முறைகளால் குறிக்கப்பட்ட இக்காலங்களில், யூபிலி ஆண்டு புனிதக் கதவு புதிதாக சீரமைக்கப்பட்டுள்ளதன் முக்கியத்துவம் இன்னும் ஆழமான பொருளைப் பெறுகிறது என்றும், இது மோதல்களுக்கு மத்தியில் நம்பிக்கை, நல்லிணக்கம், இரக்கம் மற்றும் அமைதியின் அடையாளமாக அமைந்துள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.
இவ்வாண்டு டிசம்பர் 8ஆம் தேதி அன்னைமரியின் விழாவின்போது, 2025ஆம் ஆண்டு ஜூபிலியை ஒட்டி உலகின் பேராலயங்களில் புனிதக்கதவு திறக்கப்படும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்