மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அருள்பணியாளர் விடுதலை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் குழந்தை உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட கார்மெல் துறவுசபையைச் சேர்ந்த அருள்பணியாளர் Anil Mathew அவர்கள், கைது செய்யப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும், இது கிறிஸ்தவ பணிகளை ஒடுக்கும் மாநில அரசின் ஒரு முயற்சியாகும் என்று தலத் திருஅவையின் தலைவர்கள் கூறியுள்ளனர் என்றும் யூகான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்த அருள்பணியாளர் Anil Mathew இம்மாதம் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்யப்பட்டார் என்றும், பின்னர் ஜனவரி 28, இஞ்ஞாயிறன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
போபாலில் உள்ள அஞ்சல் பெண்கள் விடுதியின் இயக்குநர் Mathew, சிறார் நீதிச் சட்டத்தின் விதிகளை மீறுதல், சட்டவிரோதமாகக் குழந்தைகள் இல்லம் நடத்துதல் மற்றும் மதமாற்ற முயற்சிகளில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் அச்செய்திக் குறிப்பு, சட்டவிரோதமாக குழந்தைகள் இல்லம் நடத்தியதற்காக அருள்பணியாளர் Anil Mathew-வை தண்டிக்க முடியாது, அதற்குச் சட்டத்தில் இடமில்லை என்றும் நீதிமன்றம் இவ்வழக்குக் குறித்துத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அருள்பணியாளர் மேத்யூவின் வழக்கறிஞர் Kuttianickal அவர்கள், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் அவர்மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, ஏனெனில் அவர் இயக்கும் விடுதி சிறார் இல்லம் அல்ல என்று அறிக்கையொன்றில் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் அச்செய்தி எடுத்துரைக்கிறது.
மேலும் அவ்விடுதியிலுள்ள அனைத்து சிறுமிகளும் அவர்களது பெற்றோரின் எழுத்துப்பூர்வ வேண்டுகோளின் பேரில்தான் பெண்கள் விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்டனர் என்றும், சட்டத் தேவையின்படி இவ்விடுதி பள்ளிக் கல்வித் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு விளக்குகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்