2024 கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் 2024 கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் 

வாரம் ஓர் அலசல் – கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகள்

நல்ல எண்ணமுடையோர் சேர்ந்து வருகிறபோதுகூட, பிரச்சனைகளே இருக்காது என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் இருப்பது இயல்பே.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சனவரி 18, வியாழன் முதல், 25, வருகிற வியாழன் முடிய கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு செபிக்கும் வாரம் கத்தோலிக்கத் திருஅவையில் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், சனவரி 25ஆம் தேதி, திருத்தூதர் பவுல் மனமாற்ற திருநாளன்று நிறைவு பெறுகிறது. சனவரி 25, வியாழன் மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகர் திருத்தூதர் புனித பவுல் பசிலிக்காவில் மாலை வழிபாட்டை தலைமையேற்று நடத்தி, இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை நிறைவுக்குக் கொணர்கிறார்.

தொடக்க கால திருஅவையில், அனைவரும் ஒரே எண்ணத்தோடு, நல்ல எண்ணத்தோடு, கிறிஸ்தவ மதிப்பீடுகளின்படி வாழ்வதற்கு எல்லாவிதத்திலும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுக்குள்ளாக ஒரு சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அந்த கருத்து வேறுபாடுகளுக்கு, அவர்கள் இணைந்து ஒரு தீர்வைக் காண முற்பட்டார்கள் என்பது உண்மை. துவக்க கால திருஅவையில் இருந்த ஒரு முக்கிய பிரச்சனை என்னவென்றால் அது விருத்தசேதனம் பற்றியது.

மோசேயின் சட்டப்படி, ஒவ்வொரு யூத ஆண்மகனுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். யூதர்கள் அனைவருமே விருத்தசேதனம் செய்திருந்தார்கள். அவர்கள் கடவுளுடனான உடன்படிக்கையின் அடையாளமாக விருத்தசேதனத்தை செய்திருந்தார்கள். அது அவர்களுக்கு முக்கியமான அடையாளமாக, அதாவது, மீட்பு பெறுவதற்கான அடையாளமாக இருந்தது. இத்தகைய ஒரு பின்னணியில், யூத மறையின் தொடர்ச்சியாக கருதப்படும், கிறிஸ்தவத்தைத் தழுவுகிறவர்கள் கண்டிப்பாக மீட்பைப் பெற விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும் என்று, சில யூதர்கள் கேள்வி எழுப்பினார்கள். இது தொடக்க கால கிறிஸ்தவர்கள் நடுவில் எழுந்த முக்கியப் பிரச்சனையாக பார்க்கப்பட்டது.

இன்றும், நல்ல எண்ணத்தோடு, நன்மைத்தனத்தோடு வாழ வேண்டும் என்று நினைத்து வாழ விரும்புகிறவர்கள் சேர்ந்து வருகிறபோது, பிரச்சனைகளே இருக்காது என்று எவரும் எதிர்பார்க்க முடியாது. கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் இருக்கத்தான் செய்யும். ஆனால், அதுவே, உண்மையை உணர்ந்து கொள்ள நமக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதும் உண்மையே. கருத்து வேறுபாடுகள் ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்காமல், நமக்குள் இருக்கிற பிணக்குகளை அகற்றி, பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்நோக்கத்துடன்தான் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் சிறப்பிக்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் திருஅவை ஒன்றே; அதன் நம்பிக்கையும் ஒன்றே. ஆனால் இன்று கிறிஸ்தவம் பிளவுபட்டு நிற்கின்றது. அதிலுள்ள பல்வேறு சபைகள், கோட்பாடுகள், வழிபாட்டு முறைகள், ஆட்சி அமைப்புகள் செயல்பாடுகள் என்பவற்றில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு நிற்பது மட்டும் அன்று; பலவேளைகளில் அவை ஒன்றிற்கு ஒன்று முரணாகவும் எதிராகவும்கூடச் செயல்படுகின்றன என்பது நாம் கண்கூடாகக் காணும் ஒன்று. இத்தகைய ஒரு நிலையில் நாம் தொடர்ந்துகொண்டிருந்தால், இயேசுவிற்கு சான்றுகளாக விளங்க நம்மால் இயலுமா? அல்லது அந்த சான்றைத்தான் உலகம் நம்புமா? ''எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்'' (யோவா 17:210) என்று செபித்ததன் அர்த்தம் அதுதான். இன்று நாம் காணும் கிறிஸ்தவத்தின் பிளவுபட்ட நிலை, கிறிஸ்தவத்தின் உண்மை இயல்பிற்கும், உயரிய நோக்கத்திற்கும், அனைத்திற்கும் மேலாக இறைமகன் இயேசுவின் விருப்பத்திற்குமே முரணானது.

உலக மக்கள் அனைவரும் ஒரே இறைத்தந்தையின் பிள்ளைகள் என்னும் உண்மைக்கு அடையாளமாக விளங்கவேண்டிய கிறிஸ்தவமே தன்னுள் ஒற்றுமை இன்றிப் பிளவுபட்டு இருப்பது அதன் இயல்பிற்கு எதிரானது. மேலும், கிறிஸ்தவத்தின் பிளவுபட்ட நிலை அதன் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு ஒரு பெரும் தடையாக உள்ளது. இயேசுவின் நற்செய்தி ஒன்றே. ஆனால், நம் அருகில் காண்பதென்ன? பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பணியாளர்கள் வெவ்வேறு பொருள்பட போதிப்பதும், மக்களைத் தங்கள் தங்கள் சபைகளிலேயே சேர அழைப்பதும், ஒருவருக்கொருவர் போட்டிமனப்பான்மையுடன் பணிகளில் ஈடுபடுவதும் இன்றும் பல இடங்களில் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

''இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்'' (யோவா 10:16) என்ற இயேசுவின் கனவுக்கு, இந்த பிளவு என்பது, மாபெரும் தடையாக உள்ளது.

கிறிஸ்தவச் சமூகத்தில் பிளவுகள் காலம் காலமாக இருந்துவருகின்றன என்பது மறுக்கப்படமுடியாத உண்மை. துவக்க காலத்திலும் பல முரண்பாடுகள் இருந்தன. ''சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே; நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்'' (1 கொரி 1:10) என திருத்தூதர் பவுல் கூறுவதிலிருந்தே, திருஅவையின் துவக்க காலத்திலும் கருத்துப் பிளவுகள் இருந்ததை அறிகிறோம். ஆனால், கருத்து முரண்பாடுகள், பெரிய அளவில் பிரிவுக்கு வழிவிட்டதை நாம் காண்பது 11ஆம் நூற்றாண்டில். 11ஆம் நுற்றாண்டில்(1054) கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட கிரேக்க சபை, உரோமை சபை எனும் பிளவு, 16ஆம் நூற்றாண்டில் சமயச் சீர்திருத்தம் காரணமாக ஐரோப்பாவில் நிகழ்ந்த சீர்திருத்த சபைகளின் பிரிவு, இங்கிலாந்தில் ஆங்கிலிக்கச் சபையின் பிரிவு என்ற இந்த பிரிவுகள் இன்னும் தொடர்கின்றன. இது தவிர,  கிறிஸ்துவின் பெயரால் பல நூறு சபைகள் தோன்றிப் பிளவுபட்டு நிற்பதே கிறிஸ்தவத்தின் இன்றைய நிலை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இயேசுவின் ஒற்றுமைக் கனவை நாம் எப்படி நிறைவேற்றப் போகிறோம்?. ''எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!'' எனும் அவரது ஏக்கத்திற்கு பதிலளிக்கும்விதமாகத்தான் ஒன்றிப்பு முயற்சிகள் திருஅவையால் எடுத்து நடத்தப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்துதான் கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கத்தின் முயற்சியின் பேரிலும், தூயஆவியாரின் வழிநடத்தலின் உதவியுடனும் ஓரளவு, அதுவும் சிறிய அளவில், ஒன்றிப்பை நோக்கி நகர்ந்து வருகிறோம்.

கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான புதிய ஆர்வத்தையும் ஆழமான ஈடுபாட்டையும் கத்தோலிக்கத் திருஅவையில் ஏற்படுத்தியவர் ''கிறிஸ்தவ ஒன்றிப்பின் திருத்தந்தை'' எனப் பெயர்பெற்ற 23ஆம் யோவான் ஆவார். அவர் உரோமையில் ''கிறிஸ்தவ ஒன்றிப்புச் செயலகத்தை'' நிறுவியதோடு, ஏனைய சபைக் கிறிஸ்தவர்களையும் ''சகோதரர்களாக'' அணைத்துக் கொண்டார். அவருக்குப் பின்பு திருத்தந்தை 6ஆம் பவுல் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காகப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். கத்தோலிக்கச் சபையின் இத்தகைய ஒன்றிப்பு முயற்சிகள் அனைத்திலும் முக்கியமானதாக அமைவது இரண்டாம் வத்திக்கான் சங்கம் தந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு பற்றிய விதித் தொகுப்பு. இந்த விதித்தொகுப்பு கிறிஸ்தவச் சபைகளுக்கு இடையே ஒன்றிப்பின் ஒளிமயமான ஒரு புதுக் காலத்தின் துவக்கமாக அமைந்தது எனலாம். இந்த ஏட்டின் சிறப்புகள் பல. அவற்றுள் மிக முக்கியமானவை என மூன்றினை நாம் குறிப்பிடலாம்.

ஒன்று, ஏனைய சபைகளுக்கும் அவற்றைச் சார்ந்த கிறிஸ்தவர்களுக்கும் இது காட்டும் அன்பும் மதிப்பும்.

இரண்டாவது, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றி இதற்கு முன்பு கத்தோலிக்கத் திருஅவையில் நிலவிய கண்ணோக்கிலிருந்து இவ்வேடு முன்வைக்கும் கருத்து வியப்பளிக்கும் முறையில் வேறுபடுகிறது. உரோமைத் திருஅவையே ஒன்றிப்பின் மையம், ஏனைய சபைகள் அதில் வந்து இணைவதே கிறிஸ்தவ ஒன்றிப்பு என்ற பார்வை மாற்றம் பெற்று, கிறிஸ்துவே அனைத்துச் சபைகளின் ஒன்றிப்பின் மையம் என்னும் கருத்து இவ்வேட்டில் வலியுறுத்தப்படுகிறது

மூன்றாவது, கிறிஸ்தவத்தில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு ஏனைய சபைகளை மட்டுமே குறைகாணும் போக்கு இவ்வேட்டில் கைவிடப்பட்டுள்ளது. மாறாக, பிளவுக்கு இரு சாராருமே பொறுப்பு என்பது வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இதன்வழி, இவ்வேட்டால் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு ஒருப் புதிய பாதை பிறந்தது. பல்வேறு கிறிஸ்தவச் சபைகளுக்கு இடையே நிலவிய பகை, வெறுப்பு, சந்தேகம், போட்டி மனப்பான்மை, ஒன்றையொன்று பற்றிய இழிவான விமர்சனம் என்பன கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை மகிழ்ச்சியுடன் காணமுடிகிறது.

கூட்டு இறை வேண்டல்கள், வழிபாடுகள், திருவிழாக் கொண்டாட்டங்கள் எனபன நடைமுறைக்கு வந்துள்ளதையும், வேறு சபைப் போதகர்களைத் தங்கள் சபைக் கூட்டங்கள், வழிபாடுகளுக்கு அழைப்பதையும் நம் காலத்திலேயே காணும் பேறு கிட்டியுள்ளது.

கிறிஸ்தவ ஒன்றிப்பு இயேசுவின் கனவு, நமக்கு அது நமது கடமை. எல்லாக் கிறிஸ்தவர்களுமே கிறிஸ்தவ ஒன்றிப்பின் பணியாளர்கள் என்ற அர்ப்பணிப்புடன் நடைபோடும்போது ஒன்றிப்பு நோக்கிய பயணம் எளிதாகும்..

''நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே'' (எபே. 4:4-5) என்று கூறும் திருத்தூதர் பவுல்தான், ''கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்'' (கலா 3:27-28) என்று மேலும் கூறுகிறார்.

இயேசு தம் சீடர்களோடு இறுதி இரா உணவு அருந்தியபின் அவர்களுக்காகக் கடவுளை வேண்டுகிறார். அந்த வேண்டலில் காணப்படுகின்ற ஒரு முக்கிய கருத்து ''ஒன்றிப்பு'' என்பதாகும். இயேசு முதலில் தமக்கும் தம் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற ஒன்றிப்புப் பற்றிப் பேசுகிறார். அந்த ஒன்றிப்பு ஆழமானது. அதே போல இயேசு தம் சீடர்களுக்கிடையேயும் ஆழ்ந்த ஒன்றிப்பு நிலவ வேண்டும் என வேண்டுகிறார். ''எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!'' என இயேசு எழுப்பிய மன்றாட்டைத் திருஅவை இன்றும் தொடர்ந்து எழுப்புகின்றது. குறிப்பாக, பல பிரிவுகளாகச் சிதைந்து கிடக்கின்ற கிறிஸ்தவ சபைகள் எல்லாம் ஒன்றித்து வந்து, இணைந்து செயல்படும்போது இந்த உலகில் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வது எளிதாகும். இதற்கு மாறாக, இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் நடுவே நிலவுகின்ற பிளவுகள் கிறிஸ்துவை அறிவிக்க ஒரு பெரிய தடையாக உள்ளன. எனவேதான் திருஅவை ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதம் 18 முதல் 25 முடிய ''கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம்'' என்றொரு காலத்தைக் கொண்டாடுகிறது. அப்போது கிறிஸ்தவ சபைகள் ஒன்றித்து வந்து தங்களிடையே ஆழமான ஒன்றிப்பு ஏற்பட வேண்டும் என்னும் கருத்தைப் புதிப்பித்துக் கொண்டு, அந்த ஒன்றிப்புக்காக இறைவனை நோக்கி வேண்டுதல் எழுப்புகின்றன. கிறிஸ்தவர்கள் ஒன்றித்துச் செயல்படும்போது உலக மக்களிடையே ஒற்றுமை வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்பதில் ஐயமில்லை. அப்போது இயேசுவின் நற்செய்தி எல்லா மக்களின் வாழ்விலும் தாக்கம் கொணர்ந்து மனித இனத்தைப் புதுப்பிக்கின்ற சக்தியாக மாறும். இதற்காகத்தான், ''ஆதலால் ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும்நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து தூய ஆவி அருளும் ஒருமைப் பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.'' (எபே: 4:1-3) எனப் பிற இனத்தாரின் திருத்தூதர் பவுல் அறிவுரை கூறுகிறார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்றதும், அது, இறையியல் அறிஞர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு பணி என்று எண்ணிவிடக் கூடாது. இறையியல் கருத்துக்களில் ஒன்றிப்பு உருவாக, இறையியல் அறிஞர்கள் முயற்சிகள் மேற்கொள்ளும் வேளையில், ஒன்று கூடி செபித்தல், ஒன்றாக பிறரன்பு, நீதிப் பணிகளில் ஈடுபடுதல் என்ற முயற்சிகள், நம்மிடையே நிகழ்வதன் வழியாக நாமும் நம் பங்களிப்பை வழங்கமுடியும். நாம் இயேசுவுடன் இணைந்து நடக்கும்போது, அங்கு, உங்கள் இயேசு, என் இயேசு என்ற பாகுபாடுகள் இல்லை, எனவே, நம் இயேசுவுடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி பாதையில் நாம் நடக்கிறோம் என்பதை உணர்ந்து முன்னோக்கிச் செல்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2024, 13:54