ஈக்குவதோர் நாட்டு அரசுத் தலைவரின் மாளிகை ஈக்குவதோர் நாட்டு அரசுத் தலைவரின் மாளிகை  

ஈக்குவதோர் நாட்டில் முன்நிகழ்ந்திராத வகையில் கும்பல் வன்முறை!

உடன்பிறந்த உறவு மற்றும் அமைதியின் மதிப்புகளை மீட்டெடுப்பது கட்டாயம் என்றும், நாம் நம்பிக்கை கொண்ட நாட்டு மக்கள், சிறுவயதிலிருந்தே, நாம் அனைவரும் சகோதரர்கள் என்று கற்பிக்கப்படுகிறோம், கடவுளை நமது தந்தை என்று அழைக்கிறோம் : ஈக்குவடோர் நாட்டு ஆயர்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இலத்தீன் அமெரிக்க நாடான ஈக்குவதோரில் முன்நிகழ்ந்திராத வகையில் கும்பல் வன்முறையை எதிர்கொண்டுள்ள வேளை, அதன் ஆயர்கள் ஒற்றுமை, அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

நாட்டின் மிகவும் தேடப்பட்ட கைதி சிறையில் இருந்து  தப்பியதன் காரணமாக, பல சிறைகளில் கிளர்ச்சிகள் வெடித்தும் மற்றும் கைதிகள் காவலர்களைக் கடத்தி அச்சுறுத்தியும் வரும் வேளை, அந்நாட்டு ஆயர்கள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இத்தகையதொரு வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

நாடு இத்தகையதொரு நெருக்கடியை எதிர்கொண்டு வரும் வேளை, அதன் ஆயர் பேரவை, 'வன்முறை வெல்லாது' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில், குடிமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், அமைதி காக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் வன்முறையை நிராகரிக்கும் அதேவேளையில், தற்போதைய விதிவிலக்கான சூழ்நிலைகளில், நாட்டை அமைதி, சேவை, உடன்பிறந்த உறவுடன் விளங்கிய அதன் பழைய நிலைக்கு மாற்றுவதற்குத் தேவையான வலிமையுடனும் ஒற்றுமையுடனும் மக்கள் இருக்க வேண்டும் என்றும் ஆயர்கள் அவ்வறிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும்  சமூகம் மற்றும் மாநிலத்தின் எந்த நிலையிலும் ஏற்படும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும், நமது ஈக்குவதோர் நாட்டு அடையாளத்தின் மிகவும் புனிதமான மதிப்புகள் மற்றும் நம் வாழ்வின் நீதிபதியாக இருக்கும் கடவுளின் தாய்நாட்டிற்குத் துரோகம் செய்வதாகக் கருதப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர் ஆயர்கள்.

உடன்பிறந்த உறவு மற்றும் அமைதியின் மதிப்புகளை மீட்டெடுப்பது கட்டாயம் என்றும், நாம் நம்பிக்கை கொண்ட நாட்டு மக்கள், சிறுவயதிலிருந்தே, நாம் அனைவரும் சகோதரர்கள் என்று கற்பிக்கப்படுகிறோம், கடவுளை நமது தந்தை என்று அழைக்கிறோம் என்றும் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் ஆயர்கள்.

உறுதித்தன்மைக்கு நாடு மீண்டும் திரும்பவும்,  நாட்டில்  அமைதிக்கு உத்தரவாதம் கிடைக்கவும், நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஒருங்கிணைக்கும் பண்புடன் வாழவும் தங்கள் உறுதியாக இறைவேண்டல் செய்வதாகக் கூறி தங்களின் அறிக்கையை நிறைவு செய்துள்ளனர் ஆயர்கள். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2024, 16:15