அருள்தந்தை Hans Joachim Lohre. அருள்தந்தை Hans Joachim Lohre. 

கைதியாக இருந்தபோது ஆறுதல் தந்த வத்திக்கான் வானொலி

ஏறக்குறைய 371 நாட்கள் ஜிகாத் குழுவினால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் கைதியாக வைக்கப்பட்டிருந்த நிலையில், உடன் இருந்தவர்கள், கைது செய்தவர்கள் என அனைவரிடத்திலும் நம்பிக்கையைப் பற்றி அதிகமாக எடுத்துரைத்தேன். - அருள்தந்தை Lohre.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பாலைவனக் கைதியாக இருந்தபோது, வத்திக்கான் வானொலியில் கேட்ட திருத்தந்தையின் கருத்துக்கள் தனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தன என்றும், மக்கள் மத்தியில் கடவுளின் அன்பின் சாட்சிகளாகவும், சிறியவர்கள், ஏழைகள், நோயாளிகள், புலம்பெயர்ந்தோர் ஆகியோரின் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் எடுத்துரைத்தார் அருள்தந்தை Hans Joachim Lohre.

சனவரி 19 வெள்ளிக்கிழமை வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலின் போது இவ்வாறு கூறியுள்ளார் கிழக்கு ஆப்ரிக்காவின் மாலி பகுதியில் உள்ள ஜிகாதி கும்பலால் கடத்தப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ள padre Bianchi எனப்படும் ஆப்ரிக்க மறைப்பணியாளர்கள் சபையைச் சார்ந்த அருள்தந்தை Hans Joachim Lohre.

ஏறக்குறைய 371 நாட்கள் ஜிகாத் குழுவினால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் கைதியாக தான் வைக்கப்பட்டிருந்ததாகவும், தன்னுடன் இருந்தவர்கள் மற்றும் தன்னைக் கைது செய்தவர்கள் என அனைவரிடத்திலும் நம்பிக்கையைப் பற்றி தான் அதிகமாக எடுத்துரைத்ததாகவும் கூறினார் அருள்தந்தை Lohre.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடத்தப்பட்ட தந்தை Lohre அவர்கள் பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், பாலைவனக் கைதியாக இருந்தபோது தான் அதிகமாக செபித்ததாகவும், ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் மட்டும் வானொலி அலைவரிசையில் வரும் செய்திகளுக்கு செவிமடுக்கத் தான் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

வத்திக்கான் வானொலியில், திருத்தந்தை, வத்திக்கான், திருஅவை மற்றும் உலக செய்திகளை தான் கேட்க முடிந்தது என்றும், துயரமான நேரங்களில் திருத்தந்தையின் வானொலி தனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது என்றும் கூறிய 70வயது மதிக்கத்தக்க அருள்தந்தை Lohre அவர்கள், மீண்டும் தனது தாயகமான ஜெர்மன் நாட்டிற்குத் திரும்ப உள்ளதாகவும், பாலைவனக் கைதியாக தான் பெற்ற அனுபவங்களைப் பிறருக்கு எடுத்துரைத்து சாட்சியாக வாழ இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2024, 09:14