திருத்தந்தையுடன் ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி திருத்தந்தையுடன் ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி  (Vatican Media)

கத்தோலிக்க ஆங்கிலிக்கன் ஆயர்களின் ஒன்றிப்புத் திட்டம்

ஒன்றிணைந்து வளர்வோம் என்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிகழ்வில், 27 நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் ஆயர்கள், கலந்து கொள்கின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 27 நாடுகளைச் சேர்ந்த 50 கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் ஆயர்கள் உரோம் நகரிலும் கான்டர்பரியிலும் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

ஒன்றிணைந்து வளர்வோம் என்ற தலைப்பில் திட்டம் ஒன்றை வகுத்துள்ள இந்த ஆயர்கள், உரோம் நகரில் இடம்பெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்திலும், அதன்பின் இங்கிலாந்தின் கான்டர்பரியில் இடம்பெறும் கூட்டத்திலும் கலந்துகொண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளுக்கு தங்கள் பங்களிப்பை வழங்குவர்.

ஜனவரி மாதம் 22 முதல் 29 வரை என ஒரு வாரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த ஒன்றிணைந்து வளர்வோம் என்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிகழ்வில், 27 நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆயர்கள், கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் திருஅவைகளிலிருந்து சரிவிகிதமாக கலந்துகொள்கின்றனர்.

இவர்கள் உரோம் நகரிலுள்ள புனித தலங்களை தரிசிப்பதுடன், 25ஆம் தேதி திருத்தூதர் பவுல் பசிலிக்காவில் இடம்பெறும் வழிபாட்டில், ஒரு கத்தோலிக்க ஆயர் மற்றும் ஆங்கிலிக்கன் ஆயர் என இருவர் இருவராக திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி ஆகியோரிடமிருந்து, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு சான்றாக விளங்க அனுப்பப்பட உள்ளனர்.

உரோம் நகரின் முக்கிய திருத்தலங்களை இந்த கத்தோலிக்க ஆங்கிலிக்கன் ஆயர் குழு சந்தித்தபின் இம்மாதம் 28ஆம் தேதி கான்டர்பரி பேராலயத்தில் இடம்பெறும் வழிபாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த வழிபாட்டில் ஹாங்காங் பேராயர் கர்தினால் Stephen Chow அவர்கள் மறையுரை வழங்க உள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2024, 15:02