மணிப்பூரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி! மணிப்பூரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி!  (AFP or licensors)

கேரள அமைச்சரின் கருத்துக்கு கிறித்தவத் தலைவர்கள் கண்டனம்!

கலாச்சார அமைச்சர் சாஜி செரியனின் அறிக்கைகள் "பொறுப்பற்ற மற்றும் பொருத்தமற்றவை" : கேரள கத்தோலிக்க ஆயர் பேரவை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவில் பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும் வேளை, ​​பிரதமர் நரேந்திர மோடியின் கிறிஸ்துமஸ் மதிய விருந்தில் கலந்து கொண்ட கத்தோலிக்க ஆயர்களை கேரள மாநிலக்  கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சர் சாஜி செரியனின், கேலி செய்ததற்காக, கிறிஸ்தவ தலைவர்கள் அவரைக் கடுமையாகக் கண்டித்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர்  25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று, இந்தியப் பிரதமர் மோடி, புது தில்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அளித்த கிறிஸ்துமஸ் மதிய விருந்தில், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் உட்பட பல கிறிஸ்தவத் தலைவர்கள் பங்கேற்றதைத் தொடர்ந்து கேரள அமைச்சர் Cherian, அவர்களைக் கேலிசெய்ததாக அச்செய்திக் கூறியுள்ளது. 

மேலும் அந்தக் கிறிஸ்மஸ் கூட்டத்தில் பங்கேற்ற ஆயரக்ள் உட்பட கிறிஸ்தவ தலைவர்கள் அனைவரும், இந்தியாவில், குறிப்பாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடரும் வன்முறையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டனர் என்று குற்றம் சுமத்திய அமைச்சர் செரியன், பிரதமரைச் சந்திக்கச் சென்றவர்களுக்கு மணிப்பூரைப் பற்றிப் பேசுவதற்கு நேர்மை இல்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வழங்கிய மது மற்றும் கேக்கை எடுத்துக் கொண்டபோது, ​​​​ஆயர்கள் மணிப்பூரை மறந்துவிட்டனர் என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அச்செய்தி நிறுவனம் மேலும் விவரித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கேரள ஆயர்பேரவை, கம்யூனிஸ் கட்சி ஆளும் கேரளாவில், அதன் கலாச்சார அமைச்சர் சாஜி செரியனின் பேச்சுக்கள் "பொறுப்பற்றவை மற்றும் பொருத்தமற்றவை" என்று சாடியுள்ளது.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சீரோ-மலங்கரா கத்தோலிக்கத் திருஅவையின் ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் பசேலியோஸ் கிளேமிஸ் பாவா அவர்கள், அமைச்சர் செரியன் தனது கருத்தைத் திரும்பப் பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதியன்று, மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி கிறிஸ்தவர்களைக் குறிவைத்து  மதவெறி வன்முறை தொடங்கியதில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் ஏறத்தாழ 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2024, 12:41