இஸ்ராயேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
புனிதபூமியில் உள்ள கிறிஸ்தவ சமூகங்களின் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்தும், அப்பகுதியின் பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதிக்கான வாய்ப்புகள் குறித்தும் திருத்தந்தையை நேரடியாக சந்தித்து உரையாடியதாக அறிவித்துள்ளார் யெருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா.
மத்தியக் கிழக்குப் பகுதியின் இன்றைய நிலைகள் குறித்து ஜனவரி 15ஆம் தேதி, திங்களன்று திருத்தந்தையைச் சந்தித்தபின் பத்திரிகையாளர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் பிட்சபாலா அவர்கள், காசா பகுதியில் வெகு சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்கள், மற்றவர்களைப் போலவே, மனிதாபிமான நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாகவும், இதையொத்த பெருபிரிவினைகளைக் கொண்ட சூழல்களில் ஏதாவது ஒரு பக்க சார்பு நிலையை எடுத்தாக வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கிறிஸ்தவர்களின் நிலைமை மிகவும் கடினமானதாக இருப்பதாகவும் தெரிவித்தார் கர்தினால்.
காசாவின் தெற்கு நோக்கி இராணுவ நடவடிக்கைகள் நகர்ந்துக் கொண்டிருப்பதாகவும், வீடுகள் இன்றியும், தண்ணீர், மின்சாரம் உட்பட எதுவும் இன்றியும் அப்பகுதிகள் இருப்பதைக் காண முடிகின்றது என்ற அவர், ஜோர்டன் வழியாகவே எந்த ஓர் உதவியையும் ஆற்றமுடிகிறது எனவும் தெரிவித்தார்.
காசா பகுதியில் இடம்பெறும் போரை முடிவுக்குக் கொணர்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாக இருப்பதாகவும், இஸ்ராயேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதற்கான வழிகளை ஆராய்வதே முதல் பணி எனவும், அதில் திருஅவை தொடர்ந்து முயற்சிக்கும் எனவும் கூறினார் யெருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பிட்சபாலா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்