இரண்டு நாட்களில் நிகராகுவாவில் 5 அருள்பணியாளர்கள் கைது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிறைவேற்றியவுடன் நிக்கரகுவா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் அந்நாட்டு அருள்பணியாளர் Gustavo Sandino.
அண்மை நாட்களில் அந்நாட்டில் 14 அருள்பணியாளர்களும் ஓர் ஆயரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய ஆண்டு பிறப்பதற்கு முந்தைய நாள் அருள்பணி Sandino அவர்கள் Santa María de Pastasma பங்குதளத்தில் ஞாயிறு திருப்பலி நிறைவேற்றியபின் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அதற்கு முந்தைய நாளில், அதாவது டிசம்பர் 30ஆம் தேதி காலையில் மனகுவாவில் அருள்பணி Fernando Téllez Báez அவர்களும், மாலையில் Jader Hernández அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு நாட்களில் நிகராகுவா நாட்டில் 5 அருள்பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டேனியேல் ஒர்த்தெகா அவர்கள், மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தலத்திருஅவையை எதிரியாகக் கருதி, அருள்பணியாளர்களைக் கைது செய்வதன் வழியாக அதன் குரலை ஒடுக்க முயன்று வருகிறார்.
Human Rights Watch மனித உரிமைகள் அமைப்பின் கூற்றுப்படி, ஒர்த்தெகா அரசு தனக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைக் கொலைசெய்தும், காயப்படுத்தியும், தடுப்புக்காவலில் வைத்தும் வருவதால், 2018ஆம் ஆண்டிலிருந்து பல ஆயிரக்கணக்கானோர் நிகரகுவாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பல அருள்பணியாளர்களும் பொதுநிலையினரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அருள்பணியாளர்கள், அருள்கன்னியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் அல்லது நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்