சட்டத்தின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டியதே முக்கியம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இலங்கை நாட்டில் பொதுத் தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் மக்களின் குரலை ஒடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுவது குறித்துத் தன் கண்டனைத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது அந்நாட்டு தலத்திருஅவை.
இவ்வாண்டில் பொதுத்தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் இலங்கையின் இடைக்கால அரசு ஒவ்வொரு நாளும் புதிய சட்டங்களைக் கொண்டுவருவது தவறானது என உரைத்த கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், மேலும் புதிய சட்டங்கள் வழி சமூகத்தை மாற்றியமைக்க முடியும் என்பது இயலாதது எனக் கூறியுள்ளார்.
அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயின் இடைக்கால அரசு அடுத்த சில வாரங்களில் பாராளுமன்றத்தில் பல்வேறு சட்டப் பரிந்துரைகளை முன்வைக்க உள்ளது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட கர்தினால் இரஞ்சித் அவர்கள், மக்களின் தோள்களில் பெரும் சுமைகளை சுமத்துவதாக இச்சட்டங்கள் இருக்கும் என்ற கவலையையும் வெளியிட்டார்.
மக்களுக்கு பலன்தருவதாக, அதேவேளை இன்றைய சூழல்களுக்கும் இயைந்ததாக புதிய சட்டங்கள் இருக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், நாட்டில் சட்டத்தின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டியது முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் எடுத்துரைத்தார்.
இலங்கையில் ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த புதியச் சட்டங்களைக் கொணரும் முயற்சிகளை இடைக்கால அரசு கைவிடவேண்டும் என ஏற்கனவே அந்நாட்டின் 50க்கும் மேற்பட்ட சமூக அமைப்புக்கள் இணைந்து அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்