பொதுக் காலம் 2-ஆம் ஞாயிறு: வந்து பார்ப்போம், வாழ்ந்து காட்டுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. 1 சாமு 3: 3b-10, 19 II. 1 கொரி 6:13c -15a 17-20 III. யோவா 1:35-42)
ஆசைத்தம்பி என்பவர் தனது பிறந்த நாளை எப்போதும் வித்தியாசமாகக் கொண்டாடக் கூடியவர். இதற்காகப் பல்வேறு யோசனைகளை மேற்கொள்வார். ஒவ்வொரு முறையும் அவரது பிறந்த நாள் புதிதாக இருக்கும். இதற்காக அவர் ஆயிரக்கணக்கில் செலவு செய்வார். ஒருமுறை அவரது பிறந்த நாளை இரயிலில் கொண்டாடுவது என முடிவு செய்து, மின் இரயிலில் முன்பின் அறிமுகம் இல்லாத அத்தனை பேருக்கும் பரிசுகள் கொடுத்து கேக் வெட்டிக் கொண்டாடினார். இன்னொரு முறை எயிட்ஸ் நோயாளர்களுடன் கொண்டாடினார். வேறொரு முறை 100 நேபாளி கூர்க்காக்களுக்குப் புத்தாடை வாங்கித் தந்துக் கொண்டாடினார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் பிறந்த நாள் கொண்டாடுவதையே நிறுத்திவிட்டார். ஆசைத்தம்பி ஏன் இப்படி செய்தார் என்பது பலருக்கும் வியப்பாக இருந்தது. அவர் தனது பிறந்த நாளை விதவிதமாகக் கொண்டாடி அலுத்துப்போய்விட்டார் என்றும், இதனால்தான் அவர் பிறந்த நாள் கொண்டாட்டங்களை நிறுத்திவிட்டார் என்றும் பலரும் கேலி பேசத் தொடங்கினர். இதுகுறித்து ஆசைதம்பியிடம் கேட்டபோது, "இப்பவும் நான் பிறந்த நாளைக் கொண்டாடத்தான் செய்கிறேன். ஆனால் எனது பிறந்த நாளை அல்ல, மற்றவர்கள் பிறந்த நாளை" என்று சிரித்துக்கொண்டே கூறினார். “ஏன் மற்றவர்கள் பிறந்த நாளை நீங்கள் கொண்டாட வேண்டும்” என்று அவரிடம் எதிர்க்கேள்வி எழுப்பியபோது, அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.
"கடந்த 2012-ஆம் ஆண்டில் எனது பிறந்த நாளை பார்வையற்றோர் வாழும் ஒரு காப்பகத்தில் கொண்டாடத் தீர்மானித்து அதற்கான ஏற்படுகளைச் சிறப்பாகச் செய்திருந்தேன். அது ஒரு தனியார் காப்பகம். படிக்கின்றவர்கள், வேலைபார்கின்றவர்கள் என 120 பார்வையற்றோர் அங்கே இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் காலை உணவு கொடுத்து, புத்தாடை வழங்கி எனது பிறந்த நாளை வெகுவிமரிசையாகக் கொண்டாட விரும்பினேன். அன்று காலை 7 மணிக்கு நான் அந்தக் காப்பகத்திற்குச் சென்றபோது, எல்லோரும் ஒன்றாகக் கூடி நின்று எனக்காக இறைவேண்டல் செய்தனர். அதன் பிறகு எனது கரங்களாலேயே அனைவருக்கும் இனிப்புகளையும் பரிசுப் பொருள்களையும் கொடுத்தேன். அவைகளைப் பெற்றுக்கொண்டு எல்லோரும் எனக்கு நன்றி கூறினார்கள். பின்னர், அனைவருடனும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது பார்வையற்ற பெண் ஒருவர் மட்டும் தனக்குப் பரிசுப்பொருள்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் எனக் கேள்விப்பட்டேன். அவர் ஏன் அப்படி செய்தார் என்று அறிந்துகொள்வதற்காக அவரைச் சந்திக்க அங்கே சென்றேன். அப்போது அப்பெண் என்னிடம், "உங்க பிறந்த நாளை நாங்க ஏன் சார் கொண்டாடணும்" என்று கோபமாகக் கேட்டார். மேலும் "உங்ககிட்ட அதிகம் பணம் இருக்கு, அதனால எங்களைப் பிச்சைக்காரங்க மாதிரி நடத்துறீங்க. உங்களுக்கு உண்மையிலேயே நல்ல மனசு இருந்தா, எங்கள்ல யாரோ ஒருத்தருடைய பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கணும். எங்களுக்கும் பிறந்த நாள் வருது சார். ஆனால் நாங்கள் யாருமே அதைக் கொண்டாடுவதில்லை. ஏன்னா எங்கக்கிட்ட காசு இல்ல. உங்கள மாதிரி பணம் வெச்சிருக்கிற யார் யாரோ இங்கே வர்றாங்க. அவங்க பிறந்த நாளை எல்லாம் நாங்க கொண்டாடுறோம். ஆனா எங்க பிறந்த நாளை நாங்க யாருமே கொண்டாடுறது இல்லை. யாருக்கு, எப்போ, பிறந்த நாள்னு நாங்க வெளியே சொல்றதுகூடக் கிடையாது. எங்களுக்கும் ஆசை இருக்காதா? கண்ணு தெரியாம பிறந்திட்டோம், அதுக்காகப் பிறந்த நாள் கொண்டாடக் கூடாதா? உங்க பரிசுப்பொருள் எதுவும் எனக்கு வேண்டாம். அதை நீங்களே வெச்சுக்கோங்க” என்று கூறினார். எனக்கு அந்தப் பெண்மீது எவ்விதக் கோபமும் இல்லை. ஆனால் அவரின் மறுப்புக் குரல் என்னை அப்படியே உலுக்கிவிட்டது. நம் பிறந்த நாளைக் கொண்டாட எத்தனை ஏற்பாடுகளைச் செய்கிறோம், திட்டமிடுகிறோம். ஆனால் இந்தப் பெண்களைப் போல எத்தனையோ பேர் தங்கள் பிறந்த நாளை வெளியே சொல்வதுக்கூடக் கிடையாது. இப்படிப்பட்டவர்களை யார் மகிழ்ச்சியடைச் செய்யப் போகிறார்கள்? என்று சிந்தனைகள் என் உள்ளத்திற்குள் இழையோடின. அன்று என் இல்லம் திரும்பிய பிறகு, இதையே சிந்தித்தவாறு இருந்தேன். அன்றே, இனி எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்தேன். அதற்காக செலவு செய்யும் மொத்த பணத்தையும் அந்தக் காப்பகத்துக்கே கொடுத்துவிட்டேன். இப்போது அங்கிருக்கும் பார்வையற்ற ஒவ்வொருவரும் தங்களின் பிறந்தநாளை இனிப்புகளுடன் புத்தாடைகளுடனும் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு வாரமும் அக்காப்பகத்தில் யாரோ ஒருவருக்குப் பிறந்த நாள் வருகிறது. மகிழ்ச்சி பொங்கும் மனதுடன் எனக்கு நன்றி சொல்கின்றார்கள். இந்த அனுபவம் ஆண்டு முழுவதும் நான் எனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டே இருப்பதுபோன்ற உணர்வைத் தருகின்றது. இந்த மகிழ்ச்சி எனது பிறந்த நாளைக் கொண்டாடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட மிகப்பெரியதாகத் தோன்றுகின்றது. இப்போதுதான் வாழ்வின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்திருக்கின்றேன்" என்றார்.
இன்று நாம் பொதுக் காலத்தின் இரண்டாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் 'வந்து பாருங்கள்.. வாழ்ந்து காட்டுங்கள்' என்று நமக்கு அழைப்புவிடுகின்றன. வாழ்வின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, அது பொதுநிலையினராக இருந்தாலும் அல்லது துறவிகளாக இருந்தாலும் பலரின் வாழ்வை 'வந்து பாருங்கள்' என்ற தங்குதல் அனுபவம்தான் மாற்றியிருக்கின்றது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். வந்து பார்த்தவர்களின் வாழ்வே மாறிப்போயிருக்கின்றது. தங்கிப்பார்த்தவர்களின் அனுபவமே தாராளமாகப் பிறருக்காகத் தங்களையே தாரைவார்க்கச் செய்திருக்கிறது. சென்னையில் உள்ள எங்களுடைய இயேசு சபையினரின் வட்டார இறையியல் மையத்தில் இரண்டு ஆண்டுகாலம் தமிழில் இறையியல் படிப்போம். அதன் முதல் ஆண்டின் தொடக்கத்தில் 'மூழ்குதல் அனுபவம்' (Immersion experience) என்று சொல்லக்கூடிய ஒரு பயிற்சிக்காக இறையியல் பயிலும் குருமாணவர்களைப் பேராசிரியர்கள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைப்பர். விளிம்பு நிலையில் வாழும் தலித் மக்கள், எயிட்ஸ் நோயாளர்கள் வாழும் இல்லங்கள், ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் வாழும் காப்பகங்கள் ஆகியவை இவற்றுள் அடங்கும். இத்தகைய மூழ்குதல் அனுபவங்களை உள்ளடக்கிய பயிற்சிகள், இயேசு சபையின் தொடக்கத்திலேயே அதாவது, நவத்துறவறத்திலேயே கொடுக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி, இயேசு சபையில் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்ட பிறகு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கழித்து Tertianship என்று சொல்லக்கூடிய மூன்றாம் கட்ட பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படும்போதும் இத்தகைய மூழ்குதல் அனுபவப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பயற்சிகளின்போது, மிகவும் தெளிவு பெற்றவர்களாக, தங்களது துறவு வாழ்வில் எப்படிப்பட்ட மக்களுக்கு அல்லது பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதைத் தெளிந்து தேர்ந்து (discernment) கொள்கின்றனர். ஆக, இதுவும் ஏறக்குறைய 'வந்து பாருங்கள்' அல்லது 'சென்று பாருங்கள்', தங்கிப்பாருங்கள், வாழ்ந்து பாருங்கள் என்ற நமதாண்டவர் இயேசுவின் சீடர்கள் பெற்ற அனுபவமாகவே இருக்கின்றது என்பதையும் இக்கணம் நாம் உணர்ந்து கொள்வோம்.
மேற்கண்ட இந்தச் சிந்தனைகளை நம் மனங்களில் இருத்தியவர்களாக இப்போது நற்செய்தி வாசகத்திற்கு செவிமடுப்போம். மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். ‘மெசியா’ என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்” என்றார். ‘கேபா’ என்றால் ‘பாறை’ என்பது பொருள்.
இங்கே, 'வந்து பாருங்கள்' என்பது இறைவன் நமக்கு விடுக்கும் ஓர் அழைப்பாகவே அமைந்துள்ளது. இன்றைய முதல் வாசகத்தில், 'சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான்' என்ற இறைவார்த்தைகள் சாமுவேலின் மூழ்குதல் அனுபவமாக அமைகின்றது என்பது திண்ணம். குழந்தைகளின்றி வாழ்ந்த சாமுவேலின் அன்னை அன்னா, ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் கோவிலில் மன்றாடி வந்தார். “படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன்” (காண்க. 1 சாமு 1:11) என்ற அன்னாவின் வார்த்தைகளில் சாமுவேல் குழந்தை பருவத்தில் ஆண்டவரின் கோவிலில் மூழ்குதல் அனுபவம் பெறுவார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. மேலும் சாமுவேல் பெற்ற இந்த மூழ்குதல் அனுபவம்தான் பிற்காலத்தில் அவரை இஸ்ரயேல் மக்களின் மிகச் சிறந்த இறைவாக்கினராக உயர்த்தியது.
இப்போது நாம் இயேசு பிறப்புக் காலத்தில் இருக்கின்றோம். ‘வந்து பாருங்கள்’ என்ற இந்த மூழ்குதல் அனுபவத்திற்கான அழைப்பு முதலில் அன்னை மரியா (காண்க. லூக் 1:28-38) மற்றும், தந்தை வளனாருக்குக் கொடுக்கப்படுகிறது (காண்க. மத் 1:20-24). இயேசுவின் பிறப்பிற்குப் பிறகு இடையர்களுக்கும் (காண்க. லூக் 2:10-17), இறுதியாக ஞானிகள் மூவருக்கும் (காண்க. மத் 2:1-10) விடுக்கப்படுகிறது. இயேசு திருமுழுக்குப் பெற்றுத் தனது பணிவாழ்வைத் தொடங்கியபோது, 'வந்து பாருங்கள்' என்ற இயேசுவின் அழைப்பை ஏற்று அந்திரேயாவும், சீமோனும் அங்கே சென்று இயேசுவுடன் தங்கிப்பார்த்து, அவர் யார் என்பதைப் புரிந்துகொள்கின்றனர். அதன்பிறகு அந்திரேயா சென்று பேதுருவையும் அழைத்து வந்து இத்தகைய அனுபவத்தைப் பெறச் செய்கின்றார். மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பியபோது அவர் பிலிப்பு மற்றும் நத்தனியேலைக் கண்டு, “என்னைப் பின்தொடர்ந்து வா” (வச. 43) எனக் கூறி இந்த மூழ்குதல் அல்லது தங்குதல் அனுபவத்திற்கு அழைப்பு விடுகின்றார்.
'இயேசுவும் சமாரியப் பெண்ணும்' என்ற உரையாடலில் சமாரியப் பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம், “நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை 'வந்து பாருங்கள்' அவர் மெசியாவாக இருப்பாரோ!” என்கிறார் (காண்க. யோவா 4:28:29). அப்பெண் இத்தகையதொரு அழைப்பை வெறுமனே விடுக்கவில்லை, மாறாக, அவருடன் மிக நீண்டதொரு உரையாடலை மேற்கொண்ட வேளை, இயேசு என்னும் மெசியா குறித்து தான் பெற்றுக்கொண்ட மூழ்குதல் அல்லது தங்குதல் அனுபவத்தின் விளைவாகவே அவர் இவ்வாறு கூறுகின்றார் என்பதையும் காண்கின்றோம். சமாரியப்பெண் இயேசுவுடன் மேற்கொண்ட உரையாடலின் போது, அவரை மனிதர், இறைவாக்கினர், மெசியா, மீட்பர் என்ற நான்கு நிலைகளில் புரிந்துகொள்கின்றார். இந்தப் புரிதலை அப்பெண்ணக்கு வழங்கியது இயேசுவுடனான தங்குதல் அனுபவம்தான். இந்த உரையாடலின் இறுதியில் இன்னுமொரு சுவையான அனுபவம் நிகழ்கின்றது. அது என்னவென்றால், அப்பெண்ணுடைய ஊர்மக்கள் பெறும் மூழ்குதல் அனுபவம் தான். “நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்” என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்” என்றார்கள் (காண்க யோவா 4:39-42)
இன்றைய இரண்டாம் வாசகத்தில், "ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்" என்ற வார்த்தைகள் வழியாக, மனித வாழ்வை அழித்தொழிக்கும் பரத்தமை போன்ற இவ்வுலகக் காரியங்களில் மூழ்கிப்போய்விடாமல், ஆண்டவரில் தங்கி அவருடன் ஒன்றித்து மூழ்குதல் அனுபவம் பெற்று விண்ணுலகுக்கு உரியவற்றை நாடித்தேட வேண்டும் என்று கொரிந்து நகர மக்களுக்கு அழைப்பு விடுகின்றார் புனித பவுலடியார்.
ஆகவே, நமது அன்றாட வாழ்வில், 'வந்து பாருங்கள்' என்று நமக்கு அழைப்பு விடுக்கும் இயேசுவின் குரலுக்குச் செவிமடுப்போம். நிறைந்த மனமுடன் அவரின் இந்த அழைப்பை ஏற்று அன்றாட நமது இறைவேண்டல்களின்போது அவருடன் தங்கி அவரில் மூழ்கி அவரைக் குறித்த அனுபவங்களைப் பெறுவோம். அதுவே நமது வாழ்வை மாற்றும். இயேசுவை 'வந்து பார்ப்போம் வாழ்ந்து காட்டுவோம்' இயேசுவில், தங்கிப்பார்ப்போம் தலைவன் வழி செல்வோம். இவ்வருளுக்காக இறைவனிடம் இந்நாளில் வேண்டுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்