மனமாற்றம், நற்செய்தி அறிவிப்பு மற்றும் சான்று வாழ்விற்கு அழைக்கும் இயேசு மனமாற்றம், நற்செய்தி அறிவிப்பு மற்றும் சான்று வாழ்விற்கு அழைக்கும் இயேசு  

பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு:மனமாற்றம், நற்செய்தி அறிவிப்பு, சான்று வாழ்வு!

நமது மனமாற்றம் நற்செய்தி அறிவிப்பிற்கும், நற்செய்தி அறிவிப்பு சான்று வாழ்விற்கும் நம்மை அழைத்துச் செல்ல வேண்டும்.
பொதுக் காலம் 3-ஆம் ஞாயிறு:மனமாற்றம், நற்செய்தி அறிவிப்பு, சான்று வாழ்வு!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.  யோனா 3:1-5, 10      II. 1 கொரி 7:29-31      III.  மாற் 1:14-20)

அசோகர் இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்த பேரரசர். இவரின் அரசு மௌரிய அரசு. இவ்வரசு சந்திரகுப்த மௌரியரால் உருவாக்கப்பட்டது. சந்திர குப்தரின் மகனான பிந்துசாரருக்குப் பிறந்தவர்தான் அசோகர். இவரின் காலம் கி.மு. 273 முதல் கி.மு. 232 வரை ஆகும். அசோகர் 18 வயதில் இளவரசர் பொறுப்பினை ஏற்றார். உச்சயினி என்ற மாநிலத்தின் ஆட்சியாளராக இருந்தார். அசோகர் கி.மு. 261-இல் கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்தார். கலிங்க நாடு என்பது இன்றைய ஒடிசா மாநிலமாகும். இப்போரில் 1,50,000 போர் வீரர்கள் இறந்தனர். இறப்பு எண்ணைக்கையைவிட காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். இந்தப் போர்க்கள காட்சியைக் கண்ட அசோகர் மனம் வருந்தி மனமாற்றம் அடைந்தார். உயிர்களுக்குத் தீங்கு செய்யாமையைக் கற்பித்த புத்த மதத்துக்கு மாறினார். இந்த மதமாற்றத்திற்கு அசோகரின் மனைவியான தேவியும் துணையாக இருந்தார். தமது மகள் சங்கமித்திரையையும், மகன் மகேந்திரனையும் அண்டை நாடுகளுக்குப் புத்தமதத்தை பரப்ப அனுப்பினார். புத்த மதத்திற்கு மாறிய அசோகர், மிகச் சிறந்த முறையில் பணியாற்றி மக்களின் அரசராகப் போற்றப்பட்டார். அவரின் ஆட்சியில் நடைபெற்ற சீர்த்திருத்தங்களும், பணிகளும் அன்று மக்களாட்சியை உருவாக்கின. ஆலமரம், மாமரம் போன்ற நிழல் தரும் மரங்களை சாலையோரங்களில் நடச் செய்தார். பயணிகள் தங்கிப் போக சத்திரங்கள் கட்டப்பட்டன. குடிதண்ணீருக்காக எண்ணற்ற கிணறுகள் தோண்டப்பட்டன. யாகங்களில் விலங்குகளைப் பலியிடுவதையும், வேட்டையாடுவதையும் தடை செய்தார். மக்களுக்கு நலமளிக்க மருத்துவமனைகள் கட்டப்பட்டன. மனிதர்களுக்காக மட்டுமன்றி, விலங்குகளுக்காகவும் மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. சிறந்த சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பொது இடங்களில் மலம் கழிப்பதைத் தடை செய்து ஆணை பிறப்பித்தார். அதை மீறுகிறவர்களுக்குத் தண்டம் விதிக்கப்பட்டது. அவர் ஆட்சிக் காலத்தில் சிறையில் இருந்த குற்றவாளிகள் 25 முறை மனித நேயத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். வரிகளின் மூலம் கிடைக்கும் பணம் மக்கள் நலனுக்காக மட்டுமே செலவு செய்யப்பட்டது. போர் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டது. சாதி மற்றும் மதவெறி நடவடிக்கைகள் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டன. அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் மனமகிழ்வுடனும் மனநிறைவுடனும் வாழ்ந்தனர். அவரது நேர்மையும் நீதியும் நிறைந்த ஆட்சியை நினைவுகூரும் வகையில்தான் நமது இந்தியத் தேசியக் கோடியில் மூவண்ணங்களுக்கு நடுவில் அசோகர் சக்கரத்தைப் பொறித்து வைத்திருக்கின்றோம்.

இன்று நாம் பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நாம் மனமாற்றம் பெற்று, நற்செய்தியை அறிவிக்கவும், அந்நற்செய்திக்குச் சான்று பகரவும் நம்மை அழைக்கின்றன. அதாவது, நமது மனமாற்றம் நற்செய்தி அறிவிப்பிற்கும், நற்செய்தி அறிவிப்பு சான்று வாழ்விற்கும் நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். மனமாற்றத்தை ஒரு மரத்தின் வேர்களாகவும், நற்செய்தி அறிவித்தலை அம்மரத்தின் தண்டு மற்றும் கிளைகளாகவும், நற்செய்திக்குச் சான்று பகர்தலை அம்மரத்தின் காய்கனிகளாகவும் உருவகப்படுத்தி நாம் இதனைப் புரிந்துகொள்ளலாம். மேலும், நாம் உண்ணும் கனிகளை கொண்டே அந்த மரத்தின் தன்மை எப்படியிருக்கும் என்பதை நாம் உறுதியாகக் கூறிவிட முடியும். அவ்வாறே, ஒரு மனிதரின் சான்று வாழ்வைக் கொண்டே அவரின் மனமாற்றமும், நற்செய்தி அறிவித்தலும் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் ஊகித்துவிட முடியும். ஆக, மனமாற்றம் என்பது ஆழமானதாகவும், அழுத்தமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

01. மனமாற்றத்திற்கு அழைக்கும் யோனா

நாம் மேலே கேட்ட மன்னர் அசோகரின் மனமாற்றம் இன்றைய முதல் வாசத்தில் வரும் நினிவே மன்னன் மற்றும் மக்கள் பெற்ற மனமாற்றத்தை நமக்கு நினைவூட்டுகிறது. "இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்த யோனாவின் வார்த்தைகள் அந்நகர மக்களின் மனமாற்றதிற்கு வித்திட்டன. ‘நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்’ என்ற வார்த்தைகள் அம்மக்களின் உண்மையான மனமாற்றத்தை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அதுமட்டுமன்றி, நினிவே நகர மன்னனும் மாபெரும் மனமாற்றம் பெறுகின்றார். அப்பகுதி இன்று நமக்குக் கொடுக்கப்படவில்லை என்றாலும், அவருடைய மனமாற்றமும் அம்மக்களுடன் இணைந்திருக்கின்றது என்பதை இக்கணம் உணர்ந்துகொள்வோம். அப்பகுதியை இப்போது வாசிப்போம். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். “இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.” (வச 6-9).

இங்கே 'அரியணையை விட்டிறங்கி' என்ற வார்த்தை நம்மை இன்னும் சற்று ஆழமாகவே சிந்திக்கத் தூண்டுகிறது. குறிப்பாக, மக்கள் தங்களின் தீச்செயல்களை விட்டொழிக்க வேண்டும் என்று மன்னரே வலியுறுத்துகிறார் என்றால், மனமாற்றத்தின் மேன்மையை அம்மன்னர் எந்தளவுக்கு உணர்ந்திருந்திருக்க வேண்டும் என்பது நமக்குப் புலனாகிறது. ஆக, ‘அரியணையை விட்டு இறங்கி’ என்பது, ஒரு மனிதர் தனது பாவநிலையை உணர்ந்துகொள்வது, மனமாற்றம் பெறத் தயாராக இருப்பது, அதன் விளைவாக நற்செயல்கள் ஆற்ற முனைவது ஆகியவற்றையெல்லாம் உள்ளடக்கியிருக்கின்றது. மேலும் நாம் உண்மையிலேயே மனமாற்றம் பெற விரும்பினால் நமது நிலையிலிருந்து கீழே இறங்கி வரத் தயாராக இருக்கவேண்டும். அதாவது, இது பாவம், இது தவறு, இது கடவுளுக்கு விரோதமானது என்று எண்ணுவதும் இவற்றிலிருந்து விடுபடும்பொருட்டு என் நிலையிலிருந்து என்னைத் தாழ்த்திக்கொள்வேன் என்று மனதார விரும்புவதும் ஆகும். இதனைத்தான் தாவீது அரசரின் வாழ்வில் காண்கின்றோம். பத்சேபாவுடன் பாவம் புரிந்த தாவீது, இறைவாக்கினர் நாத்தானின் அறிவுரையை ஏற்று தான் புரிந்த பாவங்களுக்காக மனம் வருந்தி அழுகின்றார் “கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்” (காண்க திபா 51:1-4 ) என்று கூறி ஆண்டவராம் கடவுளிடம் இறைவேண்டல் எழுப்புகின்றார். தான் ஒரு மாபெரும் அரசர், தனக்கு எதையும் செய்ய அதிகாரம் இருக்கின்றது என்றெல்லாம் கர்வம் கொள்ளாமல் தனது அரச நிலையிலிருந்து இரங்கி வருகின்றார் தாவீது என்பதைக் காண்கின்றோம்.

02. மனமாற்றத்திற்கு அழைக்கும் திருமுழுக்கு யோவான்

யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார் (வச 14) என்றுதான் இன்றைய நற்செய்தி தொடங்குகிறது. தனது பணிவாழ்வைத் தொடங்கியபோது, இயேசு மக்களை மனமாற்றத்திற்கு அழைத்ததுபோல, இயேசுவின் முன்னோடியும், அவரின் வழிகளை ஆயத்தப்படுத்த வந்தவருமான திருமுழுக்கு யோவானும் தனது பணிவாழ்வின் தொடக்கத்தில் மக்கள் பெறவேண்டிய மனமாற்றத்தை சுட்டிக்காட்டுகின்றார். தம்மிடம் திருமுழுக்குப் பெறப் புறப்பட்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு யோவான், “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உள்ளத்தில் சொல்லத் தொடங்காதீர்கள். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தரா மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்” (காண்க லூக் 3:7-9). மேலும் மனமாற்றம் பெறுவது என்பது முதல் நிலைதான், ஆனால் நாம் பெறும் மனமாற்றம் நம்மை அதற்கடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதன் காரணமாகவே,  “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கூட்டத்தினர் திருமுழுக்கு யோவானிடம் கேட்டபோது, அவர்கள் எம்மாதிரியான செயல்களை செய்ய வேண்டும் என்று அவர் அம்மக்களுக்கு அறிவுறுத்துகின்றார் என்பதை இப்பகுதியை நாம் தொடர்ந்து வாசிக்கும்போது நமக்குத் தெரிகிறது.

03. மனமாற்றத்திற்கு அழைக்கும் ஆண்டவர் இயேசு 

திருமுழுக்கு யோவானின் வழியில் ஆண்டவர் இயேசுவும் தனது பணிவாழ்வைத் தொடங்கியபோது, “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று மக்களின் மனமாற்றத்திற்கு அழைப்புவிடுகின்றார். நற்செய்தி அறிவித்தலுக்கும் சான்று பகர்தலுக்கும் அடிப்படை மனமாற்றமே என்பதையும் இயேசுவும் தெளிவுபடுத்துகின்றார். அதுமட்டுமன்றி, பின்னர் அதாவது, தனது பணிவாழ்வின் மையப் பகுதியில் இரண்டு நிகழ்வுகளை எடுத்துக்காட்டி மேலும் மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார் இயேசு. அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” (காண்க லூக் 13:1-5). மேலும் அவர் மக்களை மட்டுமன்று, தனது சீடர்களையும் மனமாற்றம் பெற்று நற்செய்தியை அறிவித்து, சான்று வாழ்வு வாழ அழைக்கின்றார் என்பதை இன்றைய நற்செய்தியைத் தொடர்ந்து வாசிக்கும்போது நம்மால் அறிய முடிகிறது.

அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

மேலும், இயேசு, தான் விண்ணேற்றமடைவதற்கு முன்பாக, “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ‘பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” (காண்க லூக் 24:46-48) என்று உரைக்கின்றார். ஆக, இயேசு தனது பணிவாழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் பாவங்களிலிருந்து நாம் மனமாற்றம் பெறவேண்டும் என்பதை மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்துகின்றார். இவற்றிலிருந்து மனமாற்றம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

04. மனமாற்றத்திற்கு அழைக்கும் புனித பவுலடியார்

இன்றைய இரண்டாம் வாகசத்தில் புனித பவுலடியார், "உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது" என்று கூறுகின்றார். இதன் பொருள் என்ன? இவ்வுலகமும் அதிலுள்ள பொருள்களும் நிலையற்றவை என்றும், என்றும் வாழும் இறைவனின் இல்லம் மட்டுமே, அதாவது, விண்ணகம் மட்டுமே நிரந்தரம் என்ற அர்த்தத்தில் இவ்வாறு கூறுகின்றார் அவர். மேலும் இந்த உலகிற்கு உரியவற்றின்மீது நமது மனங்களை செலுத்தி தீயவற்றை வளர்த்துக்கொண்டு நமது ஆன்மாவை அழித்துக்கொள்ளாமல் மனமாற்றம் பெற்று விண்ணுக்குரியவற்றையே நாம் நாடவேண்டும் என்ற அர்த்தத்திலும் இவ்வாறு உரைக்கின்றார் புனித பவுலடியார். அதனால்தான், "நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா! இக்கூடாரத்தில் குடியிருக்கும் நாம் விண்ணுலகு சார்ந்த நம் வீட்டைப் பெற்றுக் கொள்ள ஏங்கிப் பெருமூச்சு விடுகிறோம். அதைப் பெற்றுக்கொண்டால் நாம் உறைவிடமற்றவர்களாய் இருக்கமாட்டோம்; இவ்வுலகக் கூடாரத்தில் குடியிருக்கும் நாம் இந்நிலையைத் தாங்க இயலாமல் பெருமூச்சு விடுகிறோம். இக்கூடாரத்தை விட்டு விலக வேண்டும் என்பதல்ல; மாறாக விண்ணக வீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம்" (காண்க 1 கொரி 1-4) என்று உரைக்கின்றார்.

உண்மையான மனமாற்றம் பெற்றவர்கள் அப்படியே ஒடுங்கிப்போய்விட மாட்டார்கள், மாறாக, அடுத்தடுத்த நிலைகளுக்குத் தங்களை நகர்த்திச் செல்வார்கள் என்பது திண்ணம். அதாவது, மனமாற்றம் என்பது, நற்செய்தி அறிவித்தலுக்கும் சான்று வாழ்விற்கும் நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்று தொடக்கத்தில் கண்டோம். உயிர்த்த இயேசுவைச் சந்தித்த பிறகு இந்த மூன்று நிலைகளும் அவரது சீடர்களின் வாழ்வில் விளங்கியதைக் காண்கின்றோம். இம்மாதம் 25-ஆம் தேதி புனித பவுலடியாரின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாவிருக்கிறோம். இறைவன் நமக்குக் கொடுத்துள்ள மாபெரும் சொத்து புனித பவுலடியார். அவரது மனமாற்றம், நற்செய்தி அறிவித்தலுக்கும், சான்று பகர்தலுக்கும் அவரை இட்டுச்சென்றதை நம்மால் காண முடிகிறது. "திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன். ஆனால், எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின்பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்" (காண்க பிலி 3:6-9a) என்ற அவரின் வார்த்தைகள் மேற்கண்ட மூன்று நிலைகளுக்கும் சான்றாக அமைகின்றன. அவ்வாறே, உலக இன்பங்களில் மூழ்கிக் கிடந்த புனித அகுஸ்தினார், இயேசு சபையை நிறுவிய புனித இனிகோ, மற்றும் நற்செய்தி அறிவித்தலின் மணிமகுடமாக விளங்கும் புனித சவேரியாரின் மனமாற்றம் இந்த மூன்று நிலைகளை உள்ளடக்கியதே என்பதையும் இக்கணம் உணர்ந்துகொள்வோம். ஆகவே, ஆண்டவர் இயேசுவில் உண்மையான மனமாற்றம் பெற்று, நற்செய்தியை அறிவித்து, சான்று வாழ்வு வாழ்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2024, 12:48